1971-ஆம் ஆண்டு தேர்தல் வரலாற்றுப் பின்னணி

முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி மாநாட்டு உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இந்த நேரத்தில் தந்தை பெரியார் 1971-ல் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன் திமுக ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமுதாயம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஏற்படும் என்றார்.
“இப்போதும் தந்தை பெரியார் சொன்னதை மனதில் வைத்து நமது பயணத்தை தொடர வேண்டும்” என்று பேசி உள்ளார். முதலமைச்சர் இப்போது 1971 ஆம் ஆண்டை ஏன் நினைவு கூற வேண்டும்? அதற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு.
1971 ஆம் ஆண்டு சனவரி 23,24 சேலத்தில் பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். கோவை ஜிடி நாயுடு மாநாட்டை திறந்து வைத்தார்.மூட நம்பிக்கைகளை தோலுரித்த பகுத்தறிவு மாநாட்டில் திராவிடர் கழக தோழர்கள் மட்டுமே பங்கேற்றனர். வேறு கட்சிகள் அழைக்கப்படவில்லை. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. மூடநம்பிக்கைகளை விளக்கும் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், ராமன் சீதைகளை கடவுளாக கருதும் நம்பிக்கைகளை தகர்க்கும் அவர்களது புராண ஆபாச பிறப்புகளை சித்தரிக்கும் படங்கள் என்று ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டன. இந்தப் பேரணிக்கு தடைகோரி கருப்புக் கொடி போராட்டத்தை ஜனசங்கம் கட்சி அறிவித்தது. அதற்கு காவல்துறை அனுமதி வழங்கி இடமும் ஒதுக்கி தந்தது.
அப்போது ஒரு ஜனசங்க தொண்டர் பேரணியை நோக்கி செருப்பு வீசினார். அப்போது பெரியார் வந்த வாகனம் முன்னே கடந்து சென்றுவிட்டது. ராமர் பட வண்டியில் அந்த செருப்பு வந்து விழுந்தது. வந்து விழுந்த செருப்பை தோழர்கள் ராமனுக்கு எதிராக பயன்படுத்தினர்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்த கலைஞர் முடிவு எடுத்தார். இதற்கு பெரியார் ஆலோசனையையும் கேட்டார். காமராசர் வழமைக்கு மாறாக திமுகவுக்கு எதிராக ராஜகோபால ஆச்சாரியின் `சுதந்திரா’ கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தார். `இந்திரா காங்கிரஸ்’ கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தது. சேலம் நிகழ்வுக்கு பிறகு “ராமனை செருப்பால் அடித்த பெரியார் ஆதரிக்கும் திமுக கூட்டணிக்கா ஓட்டு?” என்று பரப்புரையை எதிர்க்கட்சிகள் தொடங்கின. ராமனை பெரியார் செருப்பால் அடிக்கும் படத்துடன் தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். சோ தனது “துக்ளக்” பத்திரிகையில் சேலம் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட படங்களை வெளியிட்டார். மத வெறியைத் தூண்டி விடலாம் என்று அவர் திட்டமிட்டார். “துக்ளக்” பத்திரிக்கையை பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
ஏற்கனவே ராஜாஜி முதல்வராக இருந்த போது ‘பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம்’ நடந்தது. அப்போது ராஜாஜி திராவிடர் கழகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறிவிட்டார். ஆனால் அதே ராஜாஜி இப்போது இந்த பிரச்சனையை ஊதி பெருக்கினார். தமிழ்நாடு முழுவதும் சுதந்திரா கட்சி பார்ப்பனர்கள் காங்கிரஸ் உடன்சேர்ந்து கொண்டு பெரியார் படங்களை செருப்பால் அடித்தனர். பெரியார் இதை வரவேற்று எழுதினார். “பாதி விலையில் தனது படத்தையும் செருப்பையும் அஞ்சலில் அனுப்பி வைக்க தயார்”. அப்போது தான் எனது கொள்கை பரவும் என்று அறிக்கை விட்டார்.
அப்போது திமுக ஆதரவு ஏடாக வெளிவந்த `எரிமலை’ என்னும் நாளேடு பார்ப்பன எதிர்ப்பு உணர்வு அலைகளை தட்டி எழுப்பியது. தத்துவ கவிஞர் குடிஅரசு “மனுதர்மத்திற்கு செருப்படி” என்ற தொடரை எழுதினார். பார்ப்பன சங்கிகளுக்கு சவால் விட்டு சண்டமாருதம் செய்தது ‘எரிமலை’. தேர்தல் களம் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்ற எரிமலையாக குமுறியது; பார்ப்பன எதிர்ப்பு உணர்வலைகள் நாடுமுழுவதும் கொதிநிலை அடைந்தது. கலைஞர் இந்த பார்ப்பன எதிர்ப்புகளை புறந்தள்ளி விட்டு தேர்தல் களத்தை வடிவமைத்தார். பெரியார் சமரசத்துக்கு தயாராகவில்லை ராமனை செருப்பால் அடித்த செய்தி பெரியாருக்கு தெரியாது என்றாலும், செய்தியாளர்கள் கேட்டபோது “ஆம். அப்படித்தான் அடித்தோம்! செருப்பால் அடிக்காதவர்கள் தங்களின் சூத்திர இழிவை ஏற்றுக் கொள்கிறவர்கள்” என்று அழுத்தமாக பதிவு செய்தார். பெரியார் பெரியாராகவே நின்றார்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. 184 இடங்களை திமுக கைப்பற்றியது. அப்போது கலைஞர் ”சேலத்தில் இரண்டு ராமர்கள் எங்கள் கட்சியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஒருவர் ராஜாராமன் மற்றொருவர் ஜெயராமன் என்று வெற்றி சிகரத்தை திமுக இதுவரை எட்டவே இல்லை. பெரியார் மகிழ்ந்தார். கலைஞருக்கு உடனடியாக தந்தி கொடுத்தார். அந்த தந்தியில் இவ்வாறு கூறியிருந்தார்..”
1. எனக்கு பழி நீங்கியது!
2. நீங்கள் உலகப்புகழ் பெற்றீர்கள்.
3. உங்களைப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை”.
ராமனை செருப்பால் அடித்ததால் திமுக தோல்வியை தழுவி விடுமோ என்று பெரியார் கவலைப்பட்டார். அந்த உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்த தந்தியின் வாசகம்.
மறுநாளே கலைஞரும் அமைச்சர்களும் பெரியாரை சந்திக்க திடலுக்கு வந்துவிட்டனர்.‌ பெரியாருக்கு மாலை அணிவித்து அண்ணா நினைவிடம் நோக்கி அவரை அழைத்துச் சென்றனர்.
பார்ப்பன சக்திகளுக்கு எதிராக நடந்த இனப் போராட்டம்தான் 1971 -ம் ஆண்டு தேர்தல். அதைத்தான் தமிழக முதல்வர் இப்போது நினைவு கூறுகிறார். 1971 ஆம் ஆண்டு சாதனையை 2026-ல் முதல்வர் முறியடிப்பார்.
– இரா
பெரியார் முழக்கம் இதழ் 12032026

You may also like...