பாபாக்களுக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

இந்தியாவில் பாபாக்கள், கடவுள் அவதாரங்கள் பெருகி வருவதற்கான காரணம் என்ன? Times Of India நாளேடு (ஜூலை7) ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளது. பெரும்பாலான பாபாக்கள் சமூகத்தில் விளிம்புநிலையில் இருந்தே வருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் போலே பாபாவின் பேச்சைக் கேட்க வந்தவர்களில் பெரும்பாலும் தலித் மக்கள். அதில் பெண்களே அதிகம். பாபாவோ ஜாதவ் என்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்று தன்னை கடவுள் அவதாரமாக அறிவித்துக் கொண்டவர்.
அதே நேரத்தில் பொருளாதாரத்தில் வலுவாக உள்ள மேல்தட்டு மக்களும் அவருக்கு சீடர்களாக இருக்கிறார்கள். தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பாபாக்களை நோக்கி வருவதற்கான காரணம் ஜாதியக் கட்டமைப்பு தான் என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள்.
சமூகவியல் பேராசிரியரான கல்யாணி இது குறித்து கூறுகையில்:- ஜாதிய சமூகத்தில் பல்வேறு தடைகளையும், சுமைகளையும் விளிம்புநிலை மக்கள் சுமக்கிறார்கள். பாபாவின் சீடர்களாக மாறும்போது இந்த தடைகளில் இருந்து விலகி நிற்க முடிகிறது. ‘தேவி சக்‌ஷா சௌதா’ என்ற ஆசிரமத்தை நடத்திவரும் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் மற்றொரு செல்வாக்குமிக்க பாபா ஆவார். பெயரிலேயே இந்து – முஸ்லீம் – சீக்கிய அடையாளத்தைக் கொண்டிருக்கும் அவருக்கு பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான தலித் சீக்கியர்கள் இவரது சீடர்களாக இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்ட போது பஞ்சாப் – ஹரியானா மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் கலவரமே வெடித்தது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றும் அஜய்குமார், ஜாதியக் கட்டமைப்பில் புறக்கணிக்கப்படுபவர்கள் இப்படி பாபாக்களின் சீடர்களாக மாறுவதன் மூலம், சமூக அதிகாரங்களையும், சமத்துவ உணர்வுகளையும் பெறுகிறார்கள். சமூகக் கட்டமைப்பில் இந்த உணர்வுகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. பாபாக்களின் சீடர்கள் என்று வருகிற போது இந்த உணர்வு அவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.
ஜாதியப் பாகுபாடுகள், போதைப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக இந்த பாபாக்கள் முகாம்களை நடத்துகிறார்கள். குறிப்பாக குடிகாரக் கணவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், பாபாக்களின் கருத்துகளைக் கேட்கும் போதும் அவர்கள் ஆறுதல் அடைவதாக கூறுகிறார்கள். மதுவுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் இந்த பாபாக்கள் பேசுவதால் இவர்கள் மிகுந்த நம்பிக்கையைப் பெறுகிறார்கள். தங்களுக்கு ஏற்படும் குடும்ப அழுத்தங்களில் இருந்து மீள பாபாக்களின் உரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அவர்கள் நோய்களைத் தீர்ப்பது, தங்களிடம் அற்புத சக்தி ஒன்று இருக்கிறது என்று நம்ப வைப்பதும் ஒரு மிகப்பெரிய கருவியாக இருக்கிறது. ஜாதியக் கட்டமைப்பு உருவாக்கி வைத்திருக்கிற அழுத்தங்கள், அவர்கள் சந்திக்கின்ற சமூகத் தடைகள் என இவைகளில் இருந்து வெளியேறி பாபாக்களின் சீடர்களாக மாறும் போது இந்து சமூகக் கட்டமைப்புக்கு மாற்றாக கூடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்ற காரணத்தினால் தான் பாபாக்களுக்கு சீடர்கள் பெருகிவருகிறார்கள் என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆனாலும் இந்த பாபாக்கள் மீது இவர்கள் வைக்கும் நம்பிக்கை மூட நம்பிக்கைகளாக மாறி, பக்தி உணர்வு என்பது பக்தி வெறியாக மாறி அவர்களது சிந்தனைகளை முடக்கிவிடும் ஆபத்துகளும் இதில் அடங்கியிருக்கிறது.

பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

You may also like...