சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா
சென்னை : திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 25ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 12.01.2025 அன்று இராயப்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். கோபிநாத் வரவேற்புரை நிகழ்த்தினார். இராஜேசு – தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, கழகத் தலைமை நிலையச் தபசி குமரன், தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், வட்டச் செயலாளர் க.வே.மோகன், வி.சி.க. எஸ்.எஸ்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிர்வு கலைக்குழுவின் தமிழர் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், பகுதி மாணவிகளின் மாறுவேடப் போட்டி, பட்டுக்கோட்டை அபிராமியின் கிராமியப் பாடல்கள் மற்றும் பூவையார், கானா பிரபா, மெர்லின் ஆகியோரின் கானா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
2024ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனை சிறப்பிக்கும் விதமாக திருவல்லிக்கேணி பகுதி சார்பில் நினைவுப் பரிசினை வழங்கப்பட்டது. மேலும் அவரது 58 ஆண்டுகால பெரியாரியப் பணிகள் நினைவு கூறும் விதமாக ஆவணப் படம் ஒன்றும் விழா மேடையில் திரையிடப்பட்டது. இது கழகத் தோழர்கள் மத்தியில் உணர்வலைகளை ஏற்படுத்தியது.
பத்ரி நாராயணன், சமூக விரோதிகளிடம் இருந்து பகுதி இளைஞர்களை காத்தப் போராளி. அவரால் தொடங்கப்பட்ட பொங்கல் விழா தற்போது 25ஆம் ஆண்டை தொட்டிருப்பதை முன்னிட்டு அவர் இந்த சமுதாயத்திற்கு ஆற்றியப் பணிகளை இன்றைய தலைமுறைக்கு வெளிச்சமிட்டு காட்டும் ஒரு ஆவணப் படம் திரையிடப்பட்டது.
நிறைவாக வீரமுத்து நன்றி கூறினார்.
திருப்பூர் : திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தை-1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 12.01.2025 அன்று திருப்பூர் மாஸ்கோ நகர், பெரியார் திடலில் முழுநாள் விழாவாக நடைபெற்றன.
விழாவிற்கு மாநகரச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். அஸ்விதா, வசந்தி, கார்த்திகா, ஸ்ரீஜா, முத்துலட்சுமி, கனல்மதி, பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர அமைப்பாளர் முத்து வரவேற்புரையாற்றினார்.
காலை 9 மணிக்கு பொங்கல் வழங்கும் நிகழ்வைக் கழகப் பொருளாளர் துரைசாமி துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்.ஏ. சேகர் அ.தி.மு.க, ஆரியாஸ் கண்ணன், சிவானந்தம் ம.தி.மு.க, சிபி இராஜேந்திரன் தி.மு.க, குட்டி அண்ணாச்சி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், க.பூமிநாதன், இரா.கதிரேசன். தி.மு.க ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகளை வணக்கத்திற்குரிய மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். தொடர்ந்து மாலை வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இரவு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஈரோடு கலைத்தாய் கலைக்குழுவினரின் பறை இசை, சிலம்பம், களரி, வாள் வீச்சு உள்ளிட்ட மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியை கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தொடங்கிவைத்து உரையாற்றினார்.
இணையதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மா.செயலாளர் சு.நீதிராசன், மா.அமைப்பாளர் சங்கீதா, மாநகரத் தலைவர் வீ.தனபால், மாநகரத் துணைத் தலைவர் க. மாரிமுத்து, வடக்குப் பகுதி அமைப்பாளர் அய்யப்பன், ராஜசிங்கம், ராஜ்குமார், பிரவீணா, நாகராஜ், சூரியா, கதிர்முகிலன் ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளையும், நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடத்தினர். நவீன மனிதர்கள் அமைப்பைச் சார்ந்த அருண், லெனின், தோழர் அப்துல் காதர், ஆகியோர் பரிசளித்தும், நிகழ்ச்சியைக் குறித்தும், பொங்கல் குறித்தும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, நவீன மனிதர்கள் குழுவின் பாரதி சுப்பராயன், மதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கந்தசாமி, தி.க. மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை மாவட்டத் தலைவர் முகில் ராசு ஒருங்கிணைத்து நடத்தினார். நிறைவாக தமிழ்நாடு மாணவர் கழக தோழர் கார்த்திகா நன்றி கூறினார்..
பெரியார் முழக்கம் 23012025 இதழ்
