ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்ட வேண்டும்!

ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தின் மரபுகளை மீறுகிறார்; சட்டத்தை அவமதிக்கிறார்; அதற்குப் பதிலாக சரியாக வாங்கி கட்டிக் கொள்கிறார். இந்த ஆண்டும் இதுதான் நடந்து இருக்கிறது. அமைச்சரவை தயாரிக்கும் உரையை சட்டரீதியாக படிக்க வேண்டிய ஒரு ஆளுநர், அதை அதிமுக, பாஜக கூட்டணியின் பிரச்சார உரையாக மாற்ற முயற்சி செய்து இருக்கிறார். அதனால் சட்டமன்றத்துக்குள்ளே உறுப்பினர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பிரதிநிதிகளான ஆளுநர்கள் செயல்பாடுகளால் கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் மோதல்கள் வெடித்தன. 2022-ல் தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இதே போன்று ஆளுநர்‌ தமிழிசையுடன் ஏற்பட்ட மோதலில் ஆளுநர் இல்லாமலே சட்டமன்றத்தைக் கூட்டினார். ஆளுநர் உரை கட்டாயம் அல்ல என்று அறிவித்தார்.‌ நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் தமிழிசை பணிந்து அமைச்சரவை உரையை அப்படியே படிக்க முன் வந்தார். இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிமன்றங்கள் ஆளுநர்கள் கட்டாயமாக உரையாற்றியே ஆக வேண்டும் மறுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தது.

ஆனால் உரையில் ஆளுநர்கள் மாற்றம் செய்வது பற்றி நீதிமன்றம் கண்டிப்பு காட்டவில்லை. அதன் காரணமாக கேரளா,மேற்கு வங்கம், போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் சில மாற்றங்கள் செய்து கொள்ளும் சமரசங்கள் வந்துவிட்டன. அமைச்சரவை தயாரிக்கும் உரையில் ஆளுநர்களின் அரசியல் தலையீட்டை உறுதியாக எதிர்த்து நிற்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே! ஆளுநர் உரை நிகழ்த்தாமலே கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டமன்றம் இயங்குகிறது. அதே நேரத்தில் அமைச்சரவை தயாரித்த ஆளுநர் உரை சட்டமன்றப் பதிவாகிறது.

“ஆளுநரின் மரபு மீறிய பேச்சுகள் பொதுவெளியில் வேண்டுமானால் இருக்கட்டும்; அதற்கு சட்டசபையில்‌ இடமில்லை” என்று முதலமைச்சர் தெளிவாக அறிவித்து விட்டார். அது மட்டுமல்ல ஆளுநர் பதவியே எங்களுக்குத் தேவையில்லை என்பதையும் பிரகனப்படுத்திவிட்டார். ஆளுநர் உரை இல்லாமலே கூட்டத்‌ தொடரை நடத்தலாம் என்று சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தையும் முதலமைச்சர் ஓங்கி ஒலித்து இருக்கிறார். கொள்கை வேறு; கூட்டணி வேறு என்று இதுவரை பேசி வந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது பாஜகவுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்ததன் வழியாக எங்கள் கொள்கையும் பாஜக கொள்கைதான் என்பதை அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆளுநர் சென்னா ரெட்டி கண்களில் விரலை விட்டு ஆட்டினார்.‌‌ சென்னா ரெட்டியை விமர்சிக்கும் கருத்துக்களை ஆளுநர் உரையில் ஏற்றி அதை அவரையே படிக்க வைத்தவர் ஜெயலலிதா.அந்தக்கட்சி பாஜகவில் கரைந்து கொண்டிருக்கிறது.தமிழ்நாடு சட்டமன்றம் தனது இறையாண்மையை வரலாற்றுப் பெருமையுடன் காப்பாற்றிக் கொண்டு பிற மாநிலங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

– விடுதலை இராசேந்திரன்,
முகநூல் பதிவு-
20.01.2025
பெரியார் முழக்கம் இதழ் 22012026

You may also like...