அருள்மொழி-கோபிநாதன் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா!
சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ் – கீதா இணையரின் மகள் அருள்மொழி அவர்களுக்கும் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, மஞ்சள்பட்டணம் பகுதியை சார்ந்த மோகன்தாஸ் – சுதா இணையரின் மகன் கோபிநாதன் அவர்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் உள்ள அரசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
டி.கே.ஆர் இசைக்குழுவினரின் பறை இசை நிகழ்த்தப்பட்டது. சிற்பி ராசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி மூலமாக சமூகத்தில் கடவுள் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை செய்து காட்டினார்.
சூரிய குமார் (சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ) வரவேற்புரையாற்றினார். குமரப்பா (மேட்டூர் நகரச் செயலாளர்), கா.மாரியப்பன் ( ஆசிரியர் ஓய்வு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சமூக வலைத்தளப் பொருப்பாளர் பரிமள ராசன், வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவசாமி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ. தமிழரசு, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களும் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்வதற்கு நல்ல சுயசிந்தனையே தேவையே தவிர சடங்கு, சம்பிரதாயங்களோ அல்ல எனவும், தாங்கள் சம்பாதிக்கும் சிறிய பங்கு பொதுவாழ்விற்கு கொடுத்து சமூக முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும் என ஜாதி மறுப்பு இணையர்களிடம் கூறி வாழ்த்துரையாற்றினர். பால்.பிரபாகரன் நிகழ்வை ஒருங்கிணைத்து வாழ்த்துரையாற்றினார்.
கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களுக்கு அம்பேத்கர் தொகுப்பு நூல்கள் அன்பளிப்பாக வழங்கினார் தோழர் கோவிந்தராஜ்.
சேலம் மாவட்டக் கழகம் சார்பில் தோழர்கள் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் இணைந்து ரூ.40,000 பெரியார் முழக்க சந்தா வழங்கினர்.
நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில் சாமிநாதன் மற்றும் தோழர்கள் இணைந்து ரூ.19,300 பெரியார் முழக்க சந்தா மற்றும் முகவரிகளை வழங்கினர்.
ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் ரத்தினசாமி ரூ.10,000 பெரியார் முழக்கம் சந்தா தொகையை வழங்கினார்.
கழகத் தோழர் அருள்மொழி – கோபிநாதன் (ஜாதி மறுப்பு இணையர்கள்) கழக வளர்ச்சி நிதியாக ரூ.25,000 கழகத் தலைவரிடம் வழங்கினர்.
தோழர் தேன்மொழி நன்றி கூறினார். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தோழமை இயக்க, திமுக தோழர்கள் பலர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ்19022026
—————————————————————————————————-
கழகக் குடும்பங்கள் கூடி மகிழ்ந்த மணவிழா
பெரியாரியலை கொள்கையாகவும் வாழ்க்கை நெறியாகவும் ஏற்று தீவிரமாக களப்பணியாற்றி வரும் தோழர் மேட்டூர் கோவிந்தராஜ், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து களப்பணி ஆற்றி வருபவர். மேட்டூர் பகுதித் தோழர்களை ஒருங்கிணைத்து செயல்படுவதோடு டி.கே.ஆர் இசைக்குழுவையும் கழகப் பரப்புரைக்காக நடத்தி வருகிறார். சிறந்த பாடகர்; தனது இரண்டு மகள்களுக்கும் அவர்கள் தேர்வு செய்த இணையர்களுக்கு ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். இந்த ஜாதி மறுப்பு திருமண அறிமுக விழாவில் பேசிய தோழர்கள் அனைவரும் தோழர் மேட்டூர் கோவிந்தராஜ் அவர்களுடைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி பாராட்டினார்கள்.
வழமையான திருமண மண்டபங்களில் மங்கள வாத்தியமாக நாதஸ்வரம் வாசிக்கப்படும். இந்த திருமண மேடையில் பறை இசை ஒலித்தது. சடங்கு திருமணங்களின் மேடையில் கடவுள் படங்கள் மாட்டப்பட்டிருக்கும், இந்த மேடையில் பெரியார், அம்பேத்கர் படங்கள் அழகு செய்தன. புரோகிதர்களின் அர்ச்சனை கூச்சல்கள் இல்லாமல் பகுத்தறிவையும் அறிவியலையும் விளக்கும் மூடநம்பிக்கை நிகழ்ச்சி நடந்தது. கழகத்தின் தோழர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். கருஞ்சட்டை குடும்பங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடிய திருவிழாவாக இந்த அறிமுக விழா நடந்தது. காலை மதியம் உணவுகள் அசைவம்தான். விருந்தினர்களுக்கு பெரியார் சுயமரியாதை திருமணம் குறித்த நூல் அன்பளிப்பாக
வழங்கப்படடது. – நமது செய்தியாளர்
