கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்
தாம்பரத்தில் ம. கி. எட்வின் பிரபாகரன் (சென்னை மாவட்ட அமைப்பாளர்) அருண் கோமதி (தாம்பரம் நகர அமைப்பாளர்), குகன் ஆகியோர் முன்னிலையில், பிப்-8, மாலை 6 மணிக்கு, தாம்பரத்தில், தோழர்கள் கிரிஸ்டோ, பிரதீபா, மகேஷ் ஆகியோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மதிமுக மூத்த தோழர் துரை. மணிவண்ணன் தலைமையில், தோழர்களின் கலந்துரையாடல் நடந்தது. “இயக்கம் என்றால் என்ன?” “இயக்கமாதலின் அவசியம், பயன், தேவை” குறித்து தோழர் துரை மணிவண்ணன் ஆற்றிய உரை, தோழர்களை உத்வேகமடையச் செய்தது. தோழர் எட்வின் “பெரியார் வாழ்ந்த காலச்சூழலில் இயக்கவியலின் தன்மையும், தற்போதுள்ள மாறுபட்ட சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, இயக்க அணுகுமுறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள்” குறித்தும் பேசினார்.
அருண் கோமதி, “வாசிப்பின் அவசியம் குறித்தும், தாம்பரத்தில் தொடர்ச்சியான இயக்க செயல்பாடுகளின் தேவை” குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாநில சுயாட்சி மற்றும் சட்ட நுணுக்கங்களைப் பற்றி கிரிஸ்டோவும், பெண் விடுதலையிலும் ஜாதி ஒழிப்பிலும் பெரியார் கருத்துகளின் வீச்சை பற்றி பிரதீபாவும், மூடநம்பிக்கைகளால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பெண்ணடிமைத்தனத்தின் தாக்கம் குறித்து மகேசும் அறிவார்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். புதிய தோழர்களுக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ” நாத்திகம்: சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்” நூல் வழங்கப்பட்டது. கலந்துரையாட, மதிமுக தோழர் இனியவன் இடமளித்தது குறிப்பிடத்தக்கது
பெரியார் முழக்கம் இதழ்12022026.
