ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு சென்னை 09062016

ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின்

சென்னை மாநாடு: இலங்கையில் நடைபெற்றது உள் நாட்டுப் போர் அல்ல; இன அழிப்புக்குப் பலர் பொறுப்பு

ஆர்வத்தைத் தூண்டிய பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு

பதிப்பு: 2018 ஜூன் 11 10:16

தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியாவினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத்தமிழர்களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2009 இல், ஈழத்தில் நடந்த இனவழிப்புப் போரின் தொடக்கம் முதல், இலங்கைப் பேரினவாத அரசு ஈழத்தின் மீது தொடுத்துக்கொண்டிருந்த போரினை நிறுத்த வலியுறுத்தி தமிழகம் எங்கும் எழுந்த போர்க்குரலிலும் போராட்டங்களின் அனைத்து வடிவங்களிலும் பெரும் பங்காற்றிய தமிழக வழக்குரைஞர்களை இம்மாநாட்டை ஒருங்கிணைந்து முன்னெடுதிருந்தமை  வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.

2009 பிப்ரவரி மாதம், சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில், காவல்துறையால் தாக்கப்பட்ட வழக்குரைஞர்கள், ஓய்ந்திடாது, தமிழர்களின் உரிமைக்குரலின் வடிவமாய் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்திருப்பது பல மட்டங்களிலும் பாராட்டப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், தொல்.திருமாவளவன், சென்னை உயர்நீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதிகள் கே.பி. சிவசுப்ரமணியம், ஏ.கே, ராஜன், ஜி.எம் அக்பர் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், ஈழத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு சேர்ந்தியங்கும் இளம் வழக்குரைஞர் சுகாஷ், சி.சந்திரலீலா, இலண்டனில் இருந்து வழக்குரைஞர் பரமலிங்கம், மலேசியாவில் இருந்து மகா ராமகிருஷ்ணன், ஆஸ்திரேலியாவில் இருந்து ரெபேகா எ லிம் ஆகிய பெண் வழக்குரைஞர்கள் சிறப்பு உரையாற்றிய இம்மாநாட்டில், வழக்குரைஞர்கள் காலின் கான்ஸ்லாவல் (புதுடெல்லி), வி. சுரேஷ், பாரிவேந்தன்(புதுடெல்லி),  , கோலார் தங்கவயல் ஜெ.ஜெயராஜ், எஸ், ரஜினிகாந்த், கே.பாலு, டி. பானுமதி, இரா.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் சிறப்பு பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்.

 

சானல்4 இன் ஆவணப்பட இயக்குநர் கால்லம் மெக்ரே காணொளி மூலம் பேசிய இம்மாநாட்டில் ஈழத்தில் நடந்தது இன அழிப்பு என்பதனை ஆதாரப்பூர்வமான உரை மூலம் எடுத்து இயம்பினார்.

 

சட்டத்தரணிகளும் நீதி அரசர்களும் வீற்றிருந்த மேடையில், வழக்குரைஞர்கள் நிரம்பிய அறையில், ஈழத்தில் நடந்தது இனவழிப்புத்தான் என்று சானல்4 இன் கால்லம் மெக்ரே பேசியதும் அவரது மாற்றமும் புதிது

 

சானல்4 இல் வெளிவந்த ஈழப்போர் குறித்த ஆவணப்படங்கள் ஈழத்தில் நடந்தேறியவை இனவழிப்புதான் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்தான் எனினும் பொதுவெளியில் ‘இனவழிப்பு’ என்ற வார்த்தையை கால்லம் மெக்ரே இதுவரை பயன்படுத்தாது தவிர்த்தே வந்தார் என்றும் சட்டத்தரணிகளும் நீதி அரசர்களும் வீற்றிருந்த மேடையில், வழக்குரைஞர்கள் நிரம்பிய அறையில், ஈழத்தில் நடந்தது இனவழிப்புத்தான் என்று அவர் பேசியதும் அவரது மாற்றமும் புதிது என, இதனைப் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து கவனித்த தமிழக ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினர்.

 

மலேசியாவில் இருந்து வந்திருந்த வழக்குரைஞர் மகா ராமகிருஷ்ணன் அவர்களின் உரையில்,

பன்னாட்டு சட்ட விதிகளை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும் போது ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒரு சர்வதேசப் போர். ஆனால், ஜெனீவாவை மையப்படுத்தி நடைபெறும் மனித உரிமை மன்றம் இதை அவ்வாறு பார்க்காது ஒரு உள் நாட்டுப் போராக மட்டுப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குள் நிலை மாறு கால நீதி என்ற பொறிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.

 

“ஈழத்தில் நடந்த போர், சிங்கள அரசிற்கும் ஈழத்திற்கும் இடையிலான ஈழ தேசத்தின் மீதான உரிமைக்கானது எனினும், இது சர்வதேச மையங்கள் ஆக்கிரமித்த போர். ஈழத்தமிழர்கள் நடத்தியவை பிரிவினைக்கான போரே அல்ல, தங்கள் தேசத்தின் விடுதலையை மீட்டெடுக்கும் போர். இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்துமா கடலின் தீவினை ஆளும் பொறுப்பை சிங்கள ஆதிக்கத்தின் கையில் கொடுத்து, ஈழத்தமிழர்களின் தேசிய உரிமையை மறுத்து, தமிழர்களின் இறையாண்மையை பறித்து, பிரித்தானிய அரசு செய்த பிழையை, அவர்களே திருத்த வேண்டியது அவசியம். 80களின் இறுதியில் இராணுவ பலத்தோடு ஈழத்திற்குள் நுழைந்த இந்தியா, போர் சம வலுநிலையின் பின் உருவான அமைதிப் பேச்சுவார்த்தைக் காலத்தில் நுழைந்த நோர்வே அரசு, இவர்களோடு இணைத்தலைமை வகித்த அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் ஈழத்தில் நடந்தவைகளுக்கான பொறுப்பேற்க வேண்டிய நாடுகள்,” என்று எடுத்துரைத்தார்.

 

பன்னாட்டு சட்ட விதிகளை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும் போது ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒரு சர்வதேசப் போர் என்று அவர் வாதிட்டார். ஆனால், ஜெனீவாவை மையப்படுத்தி நடைபெறும் மனித உரிமை மன்றம் இதை அவ்வாறு பார்க்காது ஒரு உள் நாட்டுப் போராக மட்டுப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குள் நிலை மாறு கால நீதி என்ற பொறிக்குள் தள்ளிவிட்டிருக்கும் நிலையைக் குறிப்பாக அவதானிக்குமாறு அவர் இதர சட்டத்தரணிகளை வேண்டிக்கொண்டார்.

காரன் பார்க்கர் மற்றும் பிரான்சிஸ் பொய்ல் போன்றவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் கருத்துக்களுடன் டப்ளின் தொடக்கம் ப்ரேமன் வரை நடந்தேறிய மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, தமிழர்களும் தமிழர்களுக்கு ஆதரவான நட்புச் சக்திகளும் ஒரு புதிய சர்வதேச சட்ட அத்தியாயத்தையே திறக்கவேண்டியிருக்கிறது என்று வாதிட்டார் அவர்.

ஒரு திசையில் மட்டும் சிந்திக்காமல் சர்வதேச சட்டங்களின் பலவித பக்கங்களையும் தொட்டுச் செல்லும் வகையில் அகலமான ஓர் அணுகுமுறையை வகுத்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார். அவரின் பேச்சு தமிழில் இருந்திருந்தால் விளங்குவதற்கு இலகுவாக இருந்திருக்கும் என்றும், ஆயினும் அவர் கொடுத்த விளக்கம் தமக்கு ஆர்வத்தைக் கூடியிருப்பதாகவும் இளம் வழக்குரைஞர்கள் கருத்து வெளியிட்டனர்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்பொழுது,

ஒரு திசையில் மட்டும் சிந்திக்காமல் சர்வதேச சட்டங்களின் பலவித பக்கங்களையும் தொட்டுச் செல்லும் வகையில் அகலமான ஓர் அணுகுமுறையை வகுத்துக்கொள்ளவேண்டும்

 

“ஈழத்தில் நடந்த இனவழிப்பில், தொடர்ச்சியாக நாம் இந்தியாவின் பங்கைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இராணுவமும் ஈழப்போரில் நேரடியாக பங்குக்கொண்டிருந்தன என்பதற்கான ஏராளமான சாட்சியங்களை பார்க்கிறோம். இவைகளை கேள்வி கேட்க வேண்டிய, அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. சர்வதேச மையப்படுத்தப்பட்ட ஈழப்போரில் நடந்த இனவழிப்பிற்கான நீதியை சர்வதேச சக்திகளின் துணை கொண்டு பெற போராடுவோம். உலகெங்கும் பரந்து விரிந்துள்ள தமிழர்கள் தொடர்ந்து நீதிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், இனவழிப்பு நடந்துள்ளதை நிறுவ வேண்டும், ஈழத்தின் தேசிய உரிமையை மீட்க ஓயாது போராட வேண்டும்,” என்று எடுத்துரைத்தார்.

 

சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் பேசும்பொழுது,

“2009 ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் தமிழக அரசு சார்பாக நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் உள்ளடக்கிய குழு ஒன்று டெல்லிக்கு பயணித்தோம். அதிகார மையங்களில் வீற்றிருந்த, போரை நிறுத்த வல்லமை உடைய அனைவரையும் சந்தித்து உடனடியான போர் நிறுத்தம் கொண்டு வர இந்திய அரசு முனைய வேண்டும் என வலியுறுத்தினோம். சோனியா உட்பட அனைவரையும் சந்தித்து முறையிட்டோம். ஆனால், அன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மட்டும் எவ்வளவு முயன்றும் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார்,” எனத் தெரிவித்தார்.

ஓய்வுப் பெற்ற நீதிபதியும் மாநாட்டிற்கான தலைமை வகித்தவருமான து.அரிபரந்தாமன் அவர்கள் பேசுகையில்,

“இந்தியாவின் இன்றைய அடக்குமுறை அரசாங்கத்தின் விளைவாக எவ்வாறெல்லாம் தேசிய இனங்கள் சிக்கலுக்கு உள்ளாகின்றன என்றும் இத்தகைய போக்கு தொடருமாயின் அது தேசிய இனங்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும். அப்படி, தமிழ்நாடும் விடுதலை பெற்று தனிநாடாக உருவாகும் நிலையில், அந்நாட்டில் சாதியற்ற சமத்துவம் உருவாக இன்றிலிருந்தே அதற்கான திட்டமிடலை நாம் உருவாக்க வேண்டும்,” என எடுத்தியம்பினார்.

 

மாநாட்டு சிறப்பு பங்கேற்பாளர்களாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றியோருக்கு நினைவுப்பரிசை வழங்கியதோடு மாநாடு சிறப்புற நடந்தேறத் துணை நின்றனர்.

இந்த முரண்பாடுகளுக்கு அப்பால், ஈழத்தமிழர் மீது நடாத்தப்பட்ட இன அழிப்புப் போரில் அப்போதிருந்த இந்திய மத்திய அரசின் — குறிப்பாக சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, எம்.கே நாராயணன், சிவ் சங்கர் மேனன் — போன்றோருக்கு இருந்த பின்னணிகளை துல்லியமாகத் தொகுத்து, ஆதாரங்களுடன் ஆராய்ந்து, தமிழ் கூறு நல்லுலகுக்கும் அதற்கப்பால் உள்ள பரந்த உலகுக்குக்கும் வெளிக்கொணர வேண்டியது தமிழகத்தைச் சேர்ந்த சட்டவல்லுநர்கள் முன்பிருக்கும் பிரமாண்டமான தார்மீகப் பொறுப்பு.

இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் முள்ளிவாய்க்கால் சாத்தியப்படிருக்காது என்பதை இலங்கையின் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேயும் அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்சேயும் தமது வாய்பட நேரடியாகவே முன்வைத்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டியது.

குறித்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்களின் வரையறைகளுக்கு அப்பால் சென்று நீதிபதி து. அரிபரந்தாமன் போன்றவர்கள்தான் இதை ஒரு மக்கள் தீர்ப்பாயமாக இந்தியாவில் நிறுவுவதற்கு ஏற்ற வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நிகழ்வை உன்னிப்பாக கவனித்த பலரும் தெரிவித்தனர். டப்ளின் தொடக்கம் பிரேமன் வரை நடந்த மக்கள் தீர்ப்பாயத்தின் ஆய்வுகளையும் தீர்ப்பையும் முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வாறான ஒரு முயற்சியைச் செய்ய முன்வரவேண்டும் என்றும், தமிழகப் பிரிவினை, தமிழகத்துக்கே வழக்கமாகிப்போயிருக்கும் உள்ளக முரண்பாடுகள் போன்ற சிக்கலான விவகரங்களுக்குள் இழுத்துச்சென்று ஈழத்தமிழர் நீதிக்கான சட்ட முயற்சியை திசை திருப்பிவிடாமல் சட்டத்துறை சார்ந்த ஒரு முன்னெடுப்பாக இதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் பலர்முன்வைத்தனர்.

புகைப்படங்களுக்கு

 

 

You may also like...