ஊழல் வழக்குகளால் உருவான என்.டி.ஏ. கூட்டணி!

`பாரத் மாதா க்கி ஜே, வந்தே மாதரம்’ முழக்கங்களோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் மதுராந்தகத்தில் துவங்கி இருக்கிறது. இதில் சுவையான பல காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன.

“நாங்கள் ஜெயலலிதாவின் பிள்ளைகள், அண்ணன் தம்பிகளான நாங்கள் எங்களுக்குள் அடித்துக் கொள்வோம், அதை எல்லாம் நம்பாதீர்கள். இப்போது எங்கள் குடும்பத் தலைவர் மோடி எங்களை சேர்த்து வைத்து விட்டார்” என்கிறார்கள் தினகரனும் எடப்பாடியும்.

தேர்தல் ஆணையத்திடம் தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்று பிடிபட்ட வழக்கு நிலுவையில் இருப்பதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் சத்தியமாக இல்லை. திமுக ஆட்சியின் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே “இலட்சியத்திற்காக”வே இந்த திடீர் பாசம்!

`ஊழல் ஆட்சி ஒழியும்’ என்று இடி முழக்கம் செய்திருக்கிறார் அன்புமணி. இவர் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது தனியார் மருத்துவக் கல்லூரி அனுமதிக்காக லஞ்சம் வாங்கிய வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதை அவரது அன்புத் தந்தை மருத்துவர் ராமதாஸ் அவர்களே சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்மையில் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை இந்த ஊழல் ஒழிப்புடன் தொடர்புபடுத்த வேண்டாம்.

தமிழ்நாட்டில் நடந்த ஜெயலலிதா ஆட்சி தான் மிகச்சிறந்த ஆட்சி என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறார் மோடி. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்ற இந்தியாவின் ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்பதை இந்த ஊழல் ஒழிப்போடு இணைத்துப் பார்க்க வேண்டாம்.

எடப்பாடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்த ஊழல் வழக்கிற்கு அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறது என்றும் இதை சி.பி.அய்-விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் ஓடோடி உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கி தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கும் எடப்பாடியும் ஊழலுக்கு எதிராக கர்ஜனை செய்திருக்கிறார்.

இந்த ஊழல் வழக்குகள் தான் இந்த ஊழல் ஒழிப்பு கூட்டணியையே இணைத்து ஊழல் ஒழிப்புக்காக களமிறக்கி இருக்கிறது.

தேர்தல் பத்திர ஊழல் புகழ் மோடி ஆட்சி இவர்களோடு இணைந்து ஊழல் ஒழிப்புக்கு இரட்டை எஞ்சின் ஓட்ட வந்திருக்கிறது.

`பாரத் மாதாக் கீ ஜே! ‘
` வந்து …ஏமாத்ரம்! ‘

– விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு
24.01.2026
பெரியார் முழக்கம் இதழ் 29012026

You may also like...