பாலமலை மலையாளி மக்களுக்கு பட்டா வழங்குக!
மேட்டூரில் வன உரிமை மீட்புக்குழுவின் சார்பில் பாலமலையில் வாழும் மலையாளி இன மக்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வன உரிமை மீட்புக்குழுவின் சார்பில் பாலமலையில் வாழும் மலையாளி இன மக்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 15.12.2025 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மேட்டூரில் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்றது. வன உரிமை மீட்புக்குழுத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார்.
புள்ளாம்பட்டி ராஜேந்திரன், பெரியகுளம் ஜெயராமன், துவரங்காடு பொன்னுசாமி, ராமன் பட்டி பாலமுருகன், திம்மப்பொதி ராமலிங்கம், பாலமலையின் அனைத்து கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். பாலமலை பழங்குடி மலையாளி இன மக்களின் பட்டா நிலங்களை மோசடியாக, பழங்குடி அல்லாதவர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்றும், மலையாளி இன மக்களின் அனுபவத்தில் உள்ள நிலங்களை முறையாக அளவீடு செய்து பட்டா வழங்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை ஒன்று திரட்டிய வன உரிமை மீட்பு குழுத் தலைவர் கண்ணையனை பாராட்டுகிறேன். நிலத்தை வாங்கியவர்களாக இருக்கலாம் அல்லது மற்றவர்களாக இருக்கலாம், உங்கள் மனதை கலைத்து ஒற்றுமையை குலைக்க எண்ணலாம். எனவே நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் மட்டுமல்லாமல் சமுக அக்கறை உள்ள பலரை ஒன்று திரட்டுவோம்” எனக் கூறினார்.
வி.பி குணசேகரன் (தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்), இரா. சிவராமன் (இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி வழக்கறிஞர்), காவை ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர் திவிக), எடிசன் (பத்திரிகையாளர்), ப. கனகராஜ் (தமிழ்நாடு பழங்குடி மலையாளி பேரவை வழக்கறிஞர்), சி.சண்முகசந்திரவேலவன் (தேசிய சட்ட நீதி இயக்க சேலம் மாவட்டத் தலைவர்), கவிதா ஆகியோர் பாலமலையில் வாழும் மலையாளி இன மக்களின் கோரிக்கையை முன்வைத்து உரையாற்றினர். எம். ராஜகோபால் (இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர்) நிறைவுறையாற்றினார். கொளத்தூர் குமரேசன், கணேசன், கத்தரிப்பட்டி பழனியப்பன் ஆகிய கழகத் தோழர்களும், பாலமலையில் வாழும் மலையாளி இன மக்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15012026
