பூணூல் பற்றி விவேகானந்தர்
விவேகானந்தர் 1897ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆலம்பஜார் மடத்தில் தங்கி சிஷ்யர்களிடம் கலந்துரையாடிக் கொண் டிருந்தார். அப்போது சிஷ்யர்களில் ஒருவர் பூணூல் பற்றிக் கேட்டதற்கு விவேகானந்தர் விளக்கம் அளித்துக் கூறுகையில்,
“பழைய காலத்திலே சிஷ்யர்கள் கையில் சமத்துகளை எடுத்துக்கொண்டு, குரு வினுடைய பர்ண சாலைக்குப் போவார்கள். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய ‘முஞ்சா’ என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்குத் தீட்சை செய்து வேதங்களை போதிப்பார். அரையிலே (இடுப்பில்) கட்டிய முப்புரியாகிய இப்புல்லிலே கௌபீனத்தை (கோவணம்) கட்டிக் கொள்வான். முஞ்சா என்னும் இப் புல்லினால் ஆக்கப்பட்ட கவசத்திற்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின் நாளில் ஏற்பட்டது” என்றார்.
உடனே சிஷ்யன், “அய்யா, அப்படியானால் முப்புரி நூலை அணியும் வழக்கம் வைதீக வழக்க மில்லை என்று சொல்லுவீரோ?” என்றான். அதற்கு விவேகானந்தர், “வேதங்களில் பூணூல் பற்றிய குறிப்பு ஓரிடத்திலும் இல்லை” என்றார்.
ஆதாரம்:“சுவாமி விவேகானந்தர் சம்பாசணைகள்”
தமிழில்: சுவாமி விபுலாநந்தர் வெளியீடு-1956
‘பலி ஆடுகள்’ நாடகத்துக்கு தடை போட்ட பார்ப்பனர்கள்
மார்ச் 27 உலக நாடக நாள்! அன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைஞரும் பேராசிரியருமான கே.ஏ.குண சேகரன், இயக்கிய ‘பலி ஆடுகள்’ நாடகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதே பல்கலையில் நாடகத் துறைப் பேராசிரியராக உள்ள கே.ஏ. குணசேகரனின் இந்த நாடகம்,
20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப் பட்டதாகும். எல்லா ஜாதி சமூகங்களிலும் பெண்களே ‘பலிகடா’வாக்கப்படுகிறார்கள் என்பதே நாடகத்தின் மய்யக் கருத்து. கல்வெட்டு ஒன்றில் பதியப்பட்டிருந்த கருத்தை மய்யமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாடகம். இரண்டு மாதங்களாக நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கப் பட்டது. நாடகம் அரங்கேறுவதற்கு முதல் நாள், பேராசிரியர் கே.ஏ. குணசேகரனை தொலை பேசியில் அழைத்துப் பேசிய துணைவேந்தர் டாக்டர் சந்திரா கிருட்டிண மூர்த்தி நாடகத்தை நிறுத்துமாறு கூறினார். இதற்கு அவர் கூறிய காரணம், “நாடகம், பிராமணர்களை விமர்சிப்பதாக எனக்கு தொலைபேசி மூலம் கூறினார்கள்; எனவே நாடகத்தைப் போட வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.
பார்ப்பனருக்கு எதிரானது என்று ஒரு தொலைபேசி வந்துவிட்டாலே – உடனே அதுபற்றி விசாரணை ஏதுமில்லாமலே தடை போட்டு விடுகிறார்கள். ‘சரி நிகர்’ அமைப்பு இந்தத் தடையைக் கடுமையாகக் கண்டித் துள்ளதோடு, நாடகத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகமும் இதை வன்மையாகக் கண்டிக்கிறது.
பெரியார் முழக்கம் 07052015 இதழ்