‘பிராமணாள்’ பெயர் அழிப்புக் கிளர்ச்சி: நடந்தது என்ன?
‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரைக்கு மறுப்பு
பெரியார் நடத்திய ‘பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்புக் கிளர்ச்சிக்’ குறித்து, போராட்டம் நடந்த ‘முரளி கபே’ உரிமையாளரின் மகன் , ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் (ஜூன் 19) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பெரியார் காலங்களில் அவர் நடத்திய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் வன்முறை நடந்தது இல்லை என்று ஏற்கெனவே வெளிவந்த கட்டுரைக்கு (ஜூன் 26) மறுப்பாக, இது வெளி வந்திருக்கிறது. முரளி கபே ஓட்டல் மறியலில் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் ஈடுபட்டதாக உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார். ‘பிராமணாள்’ என்பது அசைவ உணவைக் குறிப்பிடும் சொல் என்றும் வாதாடுகிறார். ‘பிராமணாள்’ என்பது ஏனைய பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் குறியீட்டுச் சொல். இதற்கான விளக்கங்களைத் தந்து உரிய வேண்டுகோள் கடிதங்களை எழுதிய பிறகே பெரியார் போராட்டத்தைத் தொடங்கினார். வன்முறையை பின்பற்ற விரும்பியிருந்தால், அந்த பெயர்ப் பலகையை ஒரே நாளில் எடுத்து எறிந்திருப் பார்கள். ஆனால், ஓட்டல் உரிமையாளரே அகற்றும்வரை அந்தப் போராட்டம் நடந்தது. இதுதான் வரலாறு.
இந்தப் போராட்டம் குறித்த சுருக்கமான வரலாறு இது:
“18.4.1957 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய செயற்குழுவில், சாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் ஒரு கூறாக, 5.5.1957 முதல், பார்ப்பனர் ஓட்டல்களின் முன்புறப் பலகைகளில் உள்ள ‘பிராமணாள்’ என்ற எழுத்துக்களை அழிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. கிளர்ச்சிக்கு முன்னோட் டமாகப் பெரியார் அவர்கள் சென்னை ஆட்சியாளர் களுக்கும், கவர்னருக்கும் ஒரு கடிதம் எழுதி, 27.4.57 ‘விடுதலை’யில் அதை வெளியிடச் செய்தார். அதில், “நமது நோக்கம் சாதி மத பேதமற்ற சமுதாயம் நிறுவப்பட வேண்டும் என்பதாகவும், அரசாங்க ஆணைகளில்கூடச் சாதியைக் காட்டக் கூடாது என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டி; சாதிப்பிரிவு என்பது, நம் நாட்டில் அனுபவப்பூர்வமாகப் பார்ப்பனர் பார்ப்பன ரல்லாதார் என்ற இரண்டுக்குள் அடங்கிவிடுவதாக உதாரணத்துடன் விளக்கினார். சிலர் தங்களை க்ஷத்திரியர் என்றும், சிலர் வைசியர் என்றும் அழைத்துக் கொண்டாலும், ‘பிராமணாள்’ இவர் களையும் சூத்திராள் என்றுதான் கருதுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ பிராமணாள் விடுதி என்று உணவுக் கடைகளை நடத்திட அரசு அனுமதி தந்து வருகிறது. பார்ப்பனர் வீடு என்று அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் போட்டுக் கொள்ளட்டும். அரசு அனுமதியோடு, மற்றவர்களை இழிவுபடுத்தும் அடையாளமாகவும், பணம் சம்பாதிக்கவும், ஏன் பிராமணாள் என்ற வார்த்தை பயன்பட வேண்டும்? 25 ஆண்டுகட்கு முன்பே நான் சில நகரசபைத் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு, நகரசபை லைசன்ஸ் தர மறுத்தேன். அரசு, நகரசபை இதில் தலையிடக் கூடாதென்றது. பிறகு, இரயில்வேயுடன் போராடி, அங்கேயிருந்த ‘பிராமணாள்’ ஓட்டல், ‘பிராமணாள்’ சாப்பிடுமிடம் ஆகியவற்றை எடுக்கச் செய்தேன். எனவே அருள்கூர்ந்து, 5.5.57க்குள் அமுலுக்கு வருமாறு, ஓர் அவசர உத்தரவு பிறப்பித்துப் ‘பிராமணாளை’ அகற்றிவிட்டால், நேரடி நடவடிக்கையாக ஒரு கிளர்ச்சி செய்ய அவசிய மிருக்காது என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று முடிவடைந்தது பெரியார் கடிதம்.
‘பிராமணாள்’ அழிப்புக் கிளர்ச்சி ஏன்? என்ற தலைப்பில் பெரியார், 28.4.57 ‘விடுதலை’ ஏட்டில் ஒரு விளக்கமான அறிக்கையினையும் வெளியிட்டார். எதற்கும் பதிலோ, நடவடிக்கையோ காணப் பெறாமையால், திட்டமிட்டபடி 5.5.57 அன்று, சென்னை திருவல்லிக்கேணி, பைக்ராஃப்ட்ஸ் சாலையிலுள்ள முரளி கஃபே என்ற பார்ப்பனர் உணவு விடுதியைக் களமாகத் தேர்ந்தெடுத்துப் போராட்டம் தொடங்கியது. முதல் நாள் கணக்கற்ற மக்கள் கூட்டம், கடையின் முன்னர் மறியல் செய்து, ‘பிராமணாள்’ என்ற எழுத்துக்களை அழித்திட, ஈ.வெ.ரா. மணியம்மையார், விசாலாட்சியம்மாள், மனோரஞ்சிதம் அம்மாள், எஸ்.குருசாமி, எம்.கே.டி. சுப்பிரமணியம், மு.பொ. வீரன், டி.எம்.சண்முகம், திருவாரூர் தங்கராசு, ஏ.பி. சனார்த்தனம் ஆகியோர் முன் வந்தனர். பெரியாரும் வந்து மேற்பார்வை யிட்டார். ஓட்டல் முதலாளியிடம் கேட்டுக் கொண்டும் இசையவில்லை. அழிக்க முயன்றவர் களைப் போலீசார் கைது செய்தனர். நாள்தோறும் இந்தக் கிளர்ச்சி இடைவிடாமல் நடத்தப்பட்டு வந்தது. 2.12.57 அன்று 210ஆம் நாள் கிளர்ச்சி வரையில் கைதாகி தண்டனை பெற்றோர் 837 பேர்.” (ஆதாரம்: கவிஞர் கருணானந்தம் எழுதிய ‘தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’)
கைதானவர்கள் 1010 பேர் என்று மற்றொரு தகவல் கூறுகிறது. காஞ்சி சங்கராச்சாரி தலையிட்டு, முரளி கபே பார்ப்பனருக்கு அறிவுரை கூறிய பிறகே அவர் பணிந்தார். ‘முரளி அய்டியல் ஓட்டல்’ என்று 22.3.1958இல் பெயர் மாற்றம் பெற்றது.
பெரியார் முழக்கம் 02072015 இதழ்