தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம்.
ஈரோட்டுப் பாதையின் 20 ஆண்டுகள் என்ற தலைப்பில், “இன்று ஈரோட்டுப் பாதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது இதற்கு இந்தப் பெயர் இல்லை; கூடு விட்டு கூடு பாய்வதைப் பாய்வது போல பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை 20 ஆண்டுகளைக் கழித்து இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூகச் சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார் தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்” என்று எழுதியுள்ளார் ஜீவா.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சியர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் ஆகும். வரலாற்றின் தொடக்கத்தில் கிரேக்க தத்துவஞானி ஹிராகிளிடஸ் சொல்லியிருந்தாலும், நவீன வரலாற்றில் பேராசான் மார்க்சும் இதனைச் சொல்லி உள்ளார்.
ஆனால் ஜீவாவோ கூடுவிட்டு கூடு பாய்வது போல பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப்பாதை 20 ஆண்டுகளைக் கழித்து இருக்கிறது என்று பெரியாரை விமர்சிக்கிறார். ஆனால் தானும் சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ், சுயமரியாதை சமதர்மக் கட்சி, காங்கிரஸ் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பெயர்களைத் தாங்கி இருந்திருக்கிறோம் என்பதை எப்படியோ மறந்துவிட்டு இதனை எழுதி இருக்கிறார்.
ஈ.வெ.ரா. இந்தி எதிர்ப்பில் சிறைசென்றபோதும் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் “சுயமரியாதை இயக்கமும் தமிழர் இயக்கமும், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும்” ஒன்று என்றே குறிப்பிடுகின்றார் என்று அதே நூலில் எள்ளல் தொனியிலும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வாய்ப்பிலாவது சில வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிடுவது தேவை என எண்ணுகிறோம்.
சேரன்மாதேவியில் நடந்தது என்ன?
பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோதே வைக்கம் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அப்போது பெரியார் விளங்கினார். பெரியார் காஞ்சிபுரம் மாநாட்டில் இருந்து வெளியேறியது 22.11.1925 ஆகும். அதற்கும் ஏழு நாட்களுக்குப் பின்னர் 29.11.1925-இல் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் வெற்றி விழாக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.
சேரன்மாதேவி குருகுலப்பள்ளி பெரிதும் ‘பரத்வாஜர் ஆசிரமப் பள்ளி’யாக பலராலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்குருகுலப்பள்ளி ‘தமிழ்க் குருகுல வித்தியாலயம்’ என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது.
பார்ப்பன – பார்ப்பனரல்லாத மாணவர்களை தனித்தனியே அமர வைத்து உணவு பரிமாறப்படுகிறது; கடவுள் வணக்கம் கூட பார்ப்பன மாணவர்கள் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் தேவாரம் திருவாசகம் போன்ற தமிழ்ப் பாடல்களையும் பாடுவது போன்ற பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன என்ற செய்திகளே போராட்டத்திற்கு மூலக் காரணமாகியது.
வரதராஜுலு நாயுடுவின் எதிர்ப்பு!
‘லட்சுமி’ எனும் இதழின் 1924 அக்டோபர் மாத இதழில் “காந்தியின் சத்தியாகிரக ஆசிரமம், சிரத்தானந்தாவின் காங்கிரி குருகுலம், ரவீந்திர நாதரின் சாந்தி நிகேதனம் போல வித்தியாசம் இன்றி குருகுலம் நடத்த வேண்டும். சமபந்தி போஜனம், சமமான கல்வி முதலியவை கொடுத்து சம திருஷ்டியுடன் நடத்தத் தயாராக இருப்பதாக ஐயர் அறிவித்தாலன்றி குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்யக்கூடாது என்று பிராமணர் அல்லாதவரை கேட்டுக்கொள்கிறேன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வரதராஜுலு நாயுடு அவர்களின் அறிக்கை குருகுலப் போராட்டத்தின் தொடக்கம் ஆயிற்று.
சேரன்மாதேவி குருகுலம் ஏற்படுத்தத் தேவையான 30 ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுத்தவரும், பின்னாளில் சுயமரியாதை இயக்கத்தின் பொருளாளராக இருந்தவருமான வை.சு. சண்முகம் அவர்கள் குருகுலம் சென்று வ.வே.சு ஐயரிடம் பேசிய பின்னர் 17.12.1924 அன்று ‘குமரன்’ இதழில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் “பெல்காமில் கூடவிருக்கிற அகில இந்திய காங்கிரஸ் மகாசபை கூட்டத்திற்கு இரண்டு மாதங்களுக்குள் குருகுலத்தில் பேதமற்ற நடைமுறைகளையும் நிர்வாக சம்பந்தமான கூட்டம் முதலிய சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தி விடுதல் கூடும் என ஐயர் அவர்கள் சொன்னார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
காந்தியாரும் கலந்து கொண்ட ஒரு சமாதானக் கூட்டத்தில் “புரவலர்களின் விருப்பப்படி நீங்கள் நடக்க மறுத்தால் அவர்களுடைய பணத்தைத் திருப்பி கொடுத்துவிடுவது ஒழுங்கு” என்று காந்தியார் பேச்சுவார்த்தையின் இறுதியில் குறிப்பிட்டார். இக்கருத்தை வ.வே.சு ஐயர் ஒப்புக்கொள்ளவில்லை.
தமிழ் குருகுல விஷயமாக காந்தியுடன் இருதரப்பாரும் கலந்து பேசியும் ஒரு முடிவுக்கு வர முடியாததாலும், இனி தமிழர்கள் சமத்துவமாக நடத்தப் பெறுவார்கள் என்று நம்புவதற்கு இடம் இல்லை என்று கருதியதாலும் காந்தியுடன் பேசிய 1925 மார்ச் 24 அன்று மாலையே சென்னையில் வரதராஜுலு நாயுடு அவர்களின் ‘தமிழ்நாடு’ இதழ் அலுவலகத்தில் வை.சு.சண்முகம் தலைமையில் ‘தமிழர் கூட்டம்’ கூடியது. இதில் பிரச்சனையின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்திற்குப் பிறகு பார்ப்பனரல்லாதார், பிராமணரல்லாதார் என்று சொல்லாட்சிகள் கைவிடப்பெற்று ‘தமிழர்’ என்ற பதமே பத்திரிகைகளில் இடம் பெறலாயிற்று என்கிறார் ஆய்வாளர் பழ.அதியமான்.
“தமிழர் கூட்டம்” கூடிய பிறகும் நிலைமை சீர்படவில்லை. பணம் கொடுத்தோர் அதைத் திருப்பக் கோரிய கோரிக்கைகள் பயனற்றுப் போயின. இந்நிலையில் வராராஜுலு கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுத்தார். “காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்து பெற்ற பணத்தை 1925 ஏப்ரல் மாதம் முடிவுக்குள் திருப்பிக் கொடுக்காவிட்டால் மே மாத தொடக்கத்தில் குருகுலம் முன்னால் சத்தியாகிரகம் நடைபெறும் என்றும், வேறு ஒரு தமிழ்க் குருகுலம் ஆரம்பிக்கப்படும்” எனவும் அறிவித்தார். இந்த செய்திகள் “குமரன், தி இந்து” நாளேடுகளில் வெளிவந்திருக்கின்றன.
அதற்கு எதிர்வினையாக வ.வே.சு. அய்யர் “தமிழ்க் குருகுல சொத்துக்கள் என்னுடையவாக இருந்தால் பணத்தைத் திருப்பி கொடுத்து விட நான் சற்றும் தயங்க மாட்டேன். பொது ஸ்தாபனமாகிய குருகுலத்தின் தர்மகர்த்தா என்ற முறையில் அது முடியாது” என்று 15.4.1925-இல் பதில் அளித்தார்
அடுத்த நாளே வரதராஜுலு “பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுப்பது பிடிவாதமான துராக்கிரகமாகும். குருகுல சொத்து அவர் (வ.வே.சு. அய்யர்) பெயரிலேயே இருக்கிறது; டிரஸ்டிகள் பெயரால் இல்லை” என்று பதில் அறிக்கையை கொடுக்கிறார். இந்து முன்னணியின் நிறுவனர் வீரத்(?)துறவி இராமகோபாலன் இந்து முன்னணியின் நிதியை தன்னுடன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து அறக்கட்டளை உருவாக்கி இந்து முன்னணியின் நிதிகள் அறக்கட்டளையாக உள்ளது என்றாராமே, அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.
தமிழர் இயக்கத்தின் தொடக்கம்!
1925 மார்ச்சில் உருவான தமிழர் கூட்டங்கள் தொடர்ந்து ஏப்ரல், மே, ஜூன், நவம்பர் மாதங்களில் கூடிய விவரங்கள் அப்போதைய ஏடுகளில் காணக் கிடைக்கின்றன. “இக்கூட்டம் தமிழர் இயக்கமாக மாறி தமிழ்நாட்டிற்கு தொண்டாற்ற வேண்டும்” என்று ‘குமரன்’ இதழும் ‘லட்சுமி’ இதழும் வரவேற்றுப் பாராட்டி எழுதின.

‘லட்சுமி’ இதழ் பல யோசனைகளையும் குறிப்பிட்டு எழுதியது; தமிழர் இயக்கத்துக்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொள்வது, கிராமங்கள் தோறும் அதன் கிளைகளை நிறுவுவது, திரு.வி.க.வைத் துணைக்கு வைத்துக் கொள்வது, ஜஸ்டிஸ் கட்சியை இதனோடு இணைத்து விடுவது என்பது ஒன்று.
அடுத்ததாக தமிழர் ஒற்றுமை, பிராமணரையும் சகோதரராகப் பாவிப்பது, சர்வ சமய ஒற்றுமை, கோயில் நுழைவு போன்ற அடிப்படையான வேலைகளைத் திட்டமிட்டு நடத்துவது என்பதான யோசனைகளை எழுதியுள்ளது.
‘குமரன்’ இதழோ “இதுகாலை இருந்து வருகிற பிராமணரல்லாத இயக்கமானது முறுகி எழுவதற்கு காலம் சமீபித்து விட்டது என்பதற்கு குருகுல சம்பந்தமான நிகழ்ச்சிகள் சான்று கூறுகின்றன. ஆனால் இவ்வியக்கம் தமிழ் மொழியை ஆதாரமாகக் கொண்டு நிகழ்தல் வேண்டும்; தமிழர் இயக்கம் என்ற பெயர் கொண்டு திகழ்தலே உண்மையான பயனை அளிக்கும்; இவ்வியக்கமானது உரம் பெற்று வளர்வதற்கு பல வகை இயக்கங்களில் தலைப்பட்டு இருக்கிற எல்லாத் தமிழரும் ஒன்றாக கலந்து வேலை செய்ய முயல வேண்டுவது இன்றியமையாததாகும்” என்று எழுதியுள்ளது.
இதனிடையில் சேலம் விக்டோரியா மார்க்கெட்டில் ஆதிநாராயண செட்டியார் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று 1925 ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. வரதராஜுலு, பெரியார், எம்.ஜி. நடேசன் செட்டியார் ஆகியோர் பேசினர்.
பிராமணர் பிரச்சனைக்குத் தீர்வு வேண்டும்!
பெரியார், “வரதராஜுலுவுடன் அரசியல் விவகாரங்களில் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த குருகுல விஷயத்தில் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். பிரிட்டிஷ் அரசு இங்கு இருக்கும்போதே பிராமணர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். இல்லையெனில் பிராமண நாயகத்தின் (Brahmanocracy) பெருந்துன்பத்தில் அல்லல்படுவோம்” என்று பேசியது இந்த கூட்டத்தில்தான்.
[ “E.V.Ramasamy Naicker said “they must settle the Brahmin question even while the British supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called ‘Brahmanocracy’ – The Hindu 15.4.1925]
இந்நிலையில் வ.வே.சு. ஐயர் 1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி அருவிச் சுழலில் சிக்கி தன் மகள் சுபத்ராவோடு மரணம் அடைந்தார். 15 நாட்கள் கழித்து 1925 ஜூன் 18-ஆம் நாள் கானாடுகாத்தானில் தமிழர் நிர்வாகக் கமிட்டி கூட்டம் வை.சு. சண்முகம் அவர்கள் வீட்டில் நடக்கிறது. அக்கூட்டத்தில் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தவிர மற்ற உறுப்பினர்கள் பெரியார், எஸ் ராமநாதன், சுரேந்திரநாத் ஆரியா என யாவரும் கலந்து கொண்டனர்.
அதில் பல தீர்மானங்கள்கள் இயற்றப்பட்டன.
அவற்றில் ஐந்தாவது தீர்மானம்: பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை என்பதை துண்டு பிரசுரங்கள் மூலம் தேசமெங்கும் பிரசங்கம் நடத்துவது; சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்ற உணர்ச்சிகளை வளர்க்க ரூ.5000 செலவிடுவது
ஆறாவது தீர்மானம்: எல்லா கட்சியாரும் சேர்ந்த பிராமணரல்லாதார் மாநாடு ஒன்றை விரைவில் கூட்டி குருகுல விவாதத்தினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் பரிசீலனை செய்து மேலே நடக்க வேண்டியதை முடிவு செய்வது. இதற்கு எஸ்.இராமநாதன் செயலாளர்.
ஐந்தாவது தீர்மானத்தின்படி ஏற்பட்ட சமத்துவ பிரச்சார நிதிக்கு பெரியார், வரதராஜுலு, வை.சு.சண்முகம் ஆகியோர் தலைக்கு ரூபாய் 100; காசி விஸ்வநாதன், ராய சொக்கலிங்கம் ஆகியோர் தலைக்கு ரூபாய் 50-ஆம் சொ.முருகப்பா ரூபாய் 25 அளித்துள்ளனர். இவ்வாறு தான் தமிழர் இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கம் உருவாகியுள்ளது.
தொடரும்…
பெரியார் முழக்கம் இதழ் 27112025

You may also like...