தொடர்ந்து விவாதிப்போம்

அனைவருக்கும் வணக்கம்,

28.9.2025 அன்று கோவையில் நடந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் பயிலரங்கின் நிறைவில் என்னிடம் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நான் அளித்த பதிலை மையமிட்டு பல்வேறு பதிவுகள் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அது குறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்று “ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் தோழர் ஜீவா அவர்கள் எழுப்பிய கேள்வி குறித்து உங்கள் விளக்கம் என்ன? என்பதுதான்.

அந்த நூல் ஏற்கனவே ‘தமிழன் தொடுத்த போர்’ என்ற தலைப்பில் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து எழுதி இருந்த தோழர் மா. இளஞ்செழியன் அவர்களால் எழுதப்பட்ட 1947 ஆண்டு பிற்பகுதியில் வெளியான ஒரு நூலை விமர்சித்து எழுதப்பட்டதாகும்.

அவர் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 1944 வரையான காலத்தை நான்கு கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் எழுதியிருந்த “ஈரோட்டுப் பாதை” என்ற நூலுக்கு எதிராக எழுதப்பட்ட ஒன்றுதான் ஜீவா அவர்கள் 1947 டிசம்பர் முதல் 1948 பிப்ரவரி வரை ‘ஜனநாயகம்’ என்ற இதழில் எழுதிய கட்டுரைத் தொகுப்பே ஈரோட்டுப் பாதை சரியா? என்ற நூலாகும்.

அந்த நூலினைப் படித்தவர்களுக்குத் தெரியும். பெரியாரின் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு உள்நோக்கம் கொண்டே செய்யப்பட்டன என்றும், ஆங்கிலேயர் அரசின் ஆதரவு பெற – ஜமீன்தார், பெரு முதலாளிகளின் ஆதரவைப் பெற – காங்கிரசுக்கு எதிராக இயங்க – மாகாண ஆளுநரின் நட்பைப் பெற என்ற பல்வேறு சுயநல எண்ணங்களோடு தான் அனைத்துச் செயல்பாடுகளும் பெரியாரிடம் இருந்தது என்பதாகத்தான் அது இருக்கும்.

மேலும் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டிருப்பதைப்போல “ஈரோட்டுப் பாதை நூலில் இடையறாது ஓடும் ஒரு சரடு, திராவிடர் கழகம் இடைநிலை ஜாதிகளின், நிலச்சுவான்தார்களின், லேவாதேவிக்காரர்களின், பெரும் பணக்காரர்களின் இயக்கமாகவும் அது இருந்தது” என்பது.

சுருக்கமாக தோழர் ஜீவா அவர்கள் பெரியாரோடு இயங்கிய காலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு, வகுப்புவாரி உரிமை, கம்பராமாயணம் போன்ற புராண நூல்கள் மீதான எதிர்ப்பரப்புரைகள் ஆகிய அனைத்துக்கும் எதிராகச் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வெளியேறியவுடன் செயல்பட்டார்.

எப்படி சீமான் பெரியார் இயக்கத்தோடு இயங்கிய காலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு, திராவிடர் அடையாளம், போன்ற கருத்துக்களை அமைப்பிலிருந்து விலகித் தனி இயக்கம் கண்ட பின்னர் நேர் எதிராகப் பேசினாரோ அவ்வாறே தான் தோழர் ஜீவா அவர்களும் பேசினார்; செயல்பட்டார்.

அதைக் குறிப்பிடவே ‘சீமானின் முன்னோடி’ ‘அன்றைய சீமான்’ என்ற சொற்களை நான் அதில் பயன்படுத்தியிருந்தேன். அச்சொற்றொடர்தான் பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

அதற்கு எதிர்வினையாக முகநூலில் பலரும் பதிவிட்டு இருந்ததை எனக்கு தோழர்கள் அனுப்பி வைத்தனர் (எனக்குத் தனியாக முகநூல் கணக்கு இல்லாததால்).

அதில் வில்லன் சிரிப்பு, நிலப்பிரபுத்துவ ஆணவம், பண்ணையார்த்தனம், கழிசடை, அற்ப மானுடப் பதர், செக்கின் மேல் காலைத்தூக்கும் ஒன்று, பிரபாகரன் கடைசி நாளில் என்னை ஒதுக்கி வைத்தார், பெரியார் சிலைகளுக்கு முன்னர் திருமணங்கள் நடத்தி வைத்து பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்தது போன்ற சொற்களோடு விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தன.

ஒரு பயிலரங்கில் தன்னுடைய அமைப்பின் தோழர்கள் தங்கள் இயக்கத் தலைவர் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனம் குறித்து அறிந்து கொள்வதற்கு வினா எழுப்புவதும், அதற்கு விளக்கம் கொடுப்பதும் தவறான ஒன்றாகப் பார்க்கப்படுவது, அதுவும் பொதுவுடமை கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களால் என்பதே அதிர்ச்சியான ஒன்றுதான்.

இந்திய சுதந்திரம் குறித்து ‘விடுதலை’யும் ‘ஜனசக்தி’யும் 1947 ஜூலையிலிருந்து 1949 வரை விவாதித்திருக்கின்றன. அதுபோலவே திராவிட நாடு, சுயநிர்ணய உரிமை, வடநாட்டுச் சுரண்டல், பார்ப்பனியம் ஆகியவை குறித்தும் 1952 ஆகஸ்ட் முதல் 1953 பிப்ரவரி வரை தொடர் விவாதம் நடந்திருக்கிறது.

அவ்வகை விவாதம் நடந்தால் அது பல செய்திகளை இருதரப்பாரும் புரிந்து கொள்ளவும், சரியானவற்றை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் என்பதே என் கருத்தாகும். தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல இது ஒரு வளர் முரணாக அமைந்து புதிய கருத்து நிலைக்குக் கூட இட்டுச் செல்லும்.

வரலாற்றை மீண்டும் நினைவு கூறுவதோ, சுட்டிக் காட்டுவதோ ஒருவரை இழிவாக்கும் நோக்கம் கொண்டது மட்டுமே என்ற எண்ணத்தில் இருந்து நாம் விலகி நின்று தொடர்ந்து விவாதிப்போம். தோழர் ஜீவா அவர்களின் “ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் வைக்கப்பட்டுள்ள விமரிசனங்கள் குறித்து என்னுடைய கருத்துக்களை எங்கள் இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ நான் முன்வைக்க இருக்கிறேன். அதுவரை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர்வினை ஆற்றாமல் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பொதுவுடமையாளர்களில் சிலர் நமக்கு எதிராகக் கூட இருக்கலாம்; ஆனால் பொதுவுடமை கொள்கை நமக்கு எதிரானது அல்ல என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த இதழில் தொடங்குகிறது…

– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
10.10.25.
பெரியார் முழக்கம் இதழ் 16102025

You may also like...