கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரியாரின் ஆதரவு
பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர்(எஸ்வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார்: ஜாதி தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில் நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். கடந்த இதழின் தொடர்ச்சி….
கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக பெரியார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே திட்டவட்டமான மறுப்புகள் வெளிவந்துள்ளன. எஸ்.வி.ஆர் இந்த நூலிலும் ஒரு தனி அத்தியாயத்தையே ஒதுக்கி விரிவாக பெரியார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இதேபோன்று தீவிர காங்கிரஸ்காராகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்தவருமான எல்.இளையபெருமாள் பெரியார் தலித் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார், பெரியார் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கே.பி.எஸ் மணி, தொண்டு வீராசாமி ஆகியோர் பெரியார் தலித் மக்களின் ஆதரவாளர் அல்ல என்று கூறினார்கள் என சில அறிவுஜீவிகள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். குறிப்பாக ரவிக்குமார் தனது தலித் பத்திரிகையில் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலிமையான மறுப்பை இந்த நூல் பதிவு செய்துள்ளது. (ஏற்கெனவே புரட்சிப் பெரியார் முழக்கத்தில் 2014-ம் ஆண்டு செப்டம்பரில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 8 வாரங்கள் வரலாற்றுத் தகவல்களோடு வலிமையான மறுப்பை முன் வைத்திருக்கிறார்.)
பெரியார் நில உடைமைக்காரர்களின் ஆதரவாளராக குற்றம் சாட்டுகிறார்கள். இந்த குற்றச்சாட்டையும் இந்த நூல் மறுக்கிறது. பெரியார் இயக்கத்தில் முன்னணி அமைப்பான திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாகவே 1954 இல் ராஜகோபாலாச்சாரி விவசாய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தார். ஆச்சாரியார் ஆட்சியை கடுமையாக எதிர்த்து வந்த பெரியார் இந்த சட்டத்தை ஆதரித்தார். காமராசர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நில உச்சவரம்பு சட்டத்தை நில உடமையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். பெரியார் அந்த சட்டத்தில் சில ஓட்டைகள் இருந்தாலும் கூட ஆதரித்தார். உச்சவரம்பு சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது உச்ச நீதிமன்றத்தை கண்டித்துக் கண்டனக் கூட்டங்களை அறிவித்தவர் பெரியார்.
பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து சுயமரியாதை சமதர்ம கட்சியைத் தொடங்கினார்கள். இது சுயமரியாதை இயக்கத்தில் கருத்து மாறுபாடுகளுக்கு உள்ளானது. பெரியார், சுயமரியாதை இயக்கத்துக்கே முன்னுரிமை தர வேண்டும் என்பதற்கான காரணங்களை ‘குடிஅரசு’ பத்திரிகையில் எஸ். ராமநாதன் விரிவாக கட்டுரை எழுதினார். இந்த அரசியல் அமைப்பு பார்ப்பன எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் என்று எச்சரித்தார். மற்றொரு சுயமரியாதைக்காரரான பொன்னம்பலனாரும் இதே கருத்தை வலியுறுத்தினார். சிங்காரவேலர் இந்த கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றினார்.
குடி அரசு இதழில் இந்த விவாதங்களுக்கு இடம் அளித்தார் பெரியார். (ஜீவா பெரியாரை கடும் சொற்களால் அர்ச்சித்து ஈரோட்டுப் பாதை சரியா? என்று எழுதுய நூல் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் இது குறித்து விரிவான தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன).
1949 ஆம் ஆண்டு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நேரு அரசாங்கம் தடை செய்தது. தடையை கண்டித்து எழுதிய ஒரே ஏடு ‘விடுதலை’. கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு திராவிடர் கழகத்தினர் அடைக்கலம் தந்தார்கள். கம்யூனிஸ்டுகள் மீதான அரசு அடக்குமுறையை திராவிடர் கழகம் கண்டித்தது. 12 கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரணதண்டனையை எதிர்த்து போர்க் கொடி உயர்த்தியது திராவிடர் கழகம்.
மரண தண்டனைக்கு எதிராக நாடு முழுவதும் இயக்கங்களை நடத்தியது. தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் திராவிடர் கழகத்தின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்கள். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் தாங்கள் மோசமாக நடத்தப்படுவதை எதிர்த்து சிறைக்குள்ளேயே போராடினார்கள். சிறையில் துப்பாக்கி சூடு நடந்தது,18 கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறைக் கம்பிக்குள்ளே பலியானார்கள். அப்போது ’விடுதலை’ ஏடு இந்த அடக்கு முறையை கண்டித்து போர் முழக்கம் செய்தது. இறந்த உயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியது. தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்படும் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவாகவும், அடக்குமுறைகளை கண்டித்தும் மார்ச் 5 1950-இல் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்த வலியுறுத்தி பெரியார் அறிக்கை விட்டார்.
படுகொலையைக் கண்டித்து திராவிடர் கழகம் மக்களிடம் கையெழுத்து இயக்கங்களையும் நடத்தியது. 1950 மார்ச்-5ம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டியது. அதில் பெரியார் பேசினார்; சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக ஏகாதிபத்திய நாடுகளுடன் இந்தியா கைகோர்த்துக் கொண்டு கம்யூனிஸ்ட் தோழர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறது என்றார் பெரியார்.
தடை நீங்கி கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் இருந்து விடுதலை அடையும் வரை திராவிடர் கழகம் களம் இறங்கி கடமை ஆற்றியது. விடுதலை ஆசிரியர் குத்தூசி குருசாமிக்கு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களில் ஒருவரான எம்.கல்யாணசுந்தரம் கடிதம் எழுதினார். அதில் திராவிடர் கழகத்தினர் செய்த உதவி மகத்தானது என்றும் கம்யூனிஸ்ட் கட்சி திராவிடர் கழகத்தோடு இணைந்து நிற்கும் என்று குறிப்பிட்டுருந்தார்.
1952 பொதுத் தேர்தலில் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார். ஒரு சில தொகுதிகளில் நீதிக்கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். உடனே கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் பெரியார் எதிர்ப்பை தொடங்கிவிட்டது. நிலப் பிரபுகளுக்கு பெரியார் ஆதரவு தருகிறார் என்று பெரியாரை கடுமையாக விமர்சித்தார்கள். இந்த வரலாறுகளை நூல் விரிவாகப் பேசிகிறது. பெரியார் முன்வைத்த சுயமரியாதைக் கோட்பாடு சமதர்மம், பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புகளை உள்ளடக்கியே தனது பயணத்தை தொடர்ந்து இருக்கிறது என்ற கருத்தை வரலாற்று தரவுகளுடன் முன்வைக்கும் சிறப்பான நூல் இது. இடதுசாரி சிந்தனையாளர்கள் அவசியம் படிக்க வேண்டும். (நிறைவு)… – இரா. பெரியார் முழக்கம் இதழ் 16102025
