பெரியாரை கொச்சைப்படுத்தும் அறிவுஜீவிகள்

பெரியாரிய மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.வி.ஆர்(எஸ்வி ராஜதுரை) எழுதிய பெரியார் குறித்த ஆங்கில நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. “பெரியார்: ஜாதி தேசம் மற்றும் சோசலிசம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆங்கில் நூல், உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் அம்பேதகர் சிந்தனையாளரான வித்யாபூஷன்ராவத் என்ற ஜாதி எதிர்ப்புப் போராளி எஸ்.வி.ஆர் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பே இந்த நூல். கடந்த இதழின் தொடர்ச்சி….

தமிழ்நாட்டில் 20 விழுக்காடு தலித் மக்கள் உட்ஜாதிப் பிரிவுகளாக பிரிந்துள்ளனர். உண்மையில் தலித் மக்களின் மேம்பாட்டை விரும்புவோர் இந்த பிரிவினருக்கு இடையே ஒற்றுமையை உருவாக்கி தலித் அல்லாத முற்போக்கு சக்திகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும். குறிப்பாக தலித் அல்லாத பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்டுகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் எஸ்விஆர். மாறாக சில தலித் அறிவுஜீவிகள் பெரியாருக்கு எதிரான கருத்துகளை அச்சு ஊடகங்களின் வழியாக பரப்புகிறார்கள். இந்த போக்கு 1990- களிலேயே தொடங்கிவிட்டது என்கிறார் எஸ்.வி.ஆர்.

பெரியார் எதிர்ப்பில் இவர்கள் தனி நபர்களாகவும் இணைந்தும் பெரியாரை கண்டிக்கிறார்கள். பார்ப்பன ஏடுகளும், பார்ப்பனிய சக்திகளும் இவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்றன. தமிழ்நாட்டு பார்ப்பனர்கள், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் அம்பேத்கரை விட பெரியாரையே தங்களுக்கு ஆபத்தானவராக கருதுகிறார்கள். பெரியார் ”சூத்திரர்களின்” தலைவர், தலித் மக்களுக்கு எதிரானவர் என்று சில தலித் அறிவுஜீவிகள் பெரியாரை சிறுமைப்படுத்துவதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் கொண்டாடுகிறது.

“சூத்திர” அரசியல் தலைவர்கள் என்றால் லாலுபிரசாத், முலாயம்சிங், மருத்துவர் ராமதாஸ் பெயர்களே நினைவுக்கு வருகின்றன. இவர்கள் குறிப்பிட்ட ”சூத்திர” ஜாதியினருக்காக கட்சி நடத்துபவர்கள். இவர்களைப் போல் பெரியார் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் பிரதிநிதியா? பெரியார் அனைத்து பார்ப்பனரல்லாத மக்களுக்கும் போராடியவர்; சொந்த ஜாதிக்காரர்களாலே வெறுக்கப்பட்ட தலைவர்; பிறகு அவர் எப்படி “ சூத்திரர்கள்”தலைவராக இருக்கமுடியும்?

தமிழ்நாடு குடியரசு கட்சியின் தலைவர்கள் சிவராஜ் அவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் அம்பேத்கரின் தகுதியை குறைத்து அவர் தலித் மக்களுக்கு மட்டுமே உரிய தலைவர் என்ற அடையாளத்தை உருவாக்கி வருகிறார்கள். பெரியாரையும் எதிர்க்கிறார்கள். ஆனால் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் ”அம்பேத்கர் தலித் மக்களுக்கான தலைவர் மட்டுமல்ல; அவர் ஜனநாயகக் காவலர்; அனைத்து மக்களுக்குமான தலைவர், பார்ப்பனரல்லாத மக்களின் நண்பர் என்று தலைமேல் தூக்கிக் கொண்டாடின. நான் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டேன் ”என்றார் பெரியார். அம்பேத்கரின் கல்வி நிறுவனமான பம்பாய் சித்தார்த் கல்லூரியில் பேசிய பெரியார் (1959, பிப்-25), ”உன் அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்! அதன் வழி செயல்படு என்று கூறிய தலைவர்கள் இரண்டு பேர் மட்டுமே. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர்; அதற்கு பிறகு அம்பேத்கர் மட்டுமே”. இது அம்பேத்கர் பற்றிய பெரியாரின் மதிப்பீடு. தன்னைவிட ஒரு உயர்வான தலைவர் அம்பேத்கர் என்று அறிவித்தவர் பெரியார்.

இந்தியாவிலேயே சங் பரிவாரங்களை எதிர்த்து நிற்கும் அரசியல் கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டுமே!. அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தனது கட்சிக்குள்ளே சில அறிவுஜிவீகள் பெரியாரை சிறுமைப்படுத்தி எழுத அனுமதித்தது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். தனது கட்சியின் சார்பில் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை சட்டமன்ற உறுப்பினராக அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய சமூக நீதியை செயல்படுத்திக் காட்டும் பெருமை தொல்.திருமாவளவன் அவர்களுக்கு உண்டு.
அவரே அதற்கு நேர் மாறாக அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது அவர் எதிர்த்தார். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். தலித் பிரிவினரிடையே மிகவும் அழுத்தப்பட்ட மக்கள் அருந்ததியினர். அவர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை திருமாவளவன் ஏன் எதிர்க்க வேண்டும். இது எப்படி அனைவரையும் உள்ளடக்கும் சமூகநீதி?
கலைஞர் முதலமைச்சராக இருந்த போது இஸ்லாமியர்களுக்கான 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பிரித்து எடுத்துத்தான் தந்தார்.

பெரியார் எதிர்ப்பு தலித் அறிவுஜீவிகள் ஆதிதிராவிடர் என்ற பெயர் தங்களின் ஜாதிக்கான அடையாளமாக சொந்தம் கொண்டாடுகிறார்கள். 1920-ல் நீதிக்கட்சி தீண்டப்படாத மக்களுக்கு அதுவரை அரசு பதிவேடுகளில் பதியப்பட்ட ‘பஞ்சமர்’ என்ற சொல்லை நீக்கியது. ஆதிதிராவிடர் என்றே குறிப்பிட வேண்டும் என்று ஆணையிட்டது. தொடர்ந்து பிறப்பித்த மற்றொரு அரசு ஆணையில் ”ஆதிதிராவிடர்” என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமல்ல; சென்னை மாகாணத்தில் அனைத்து தலித் உட்பிரிவுகளுக்கும் பொதுவானது என்று அது தெளிவுபடுத்தியது. இது நீதிகட்சியின் நிலை; இதற்கு மாறாக ஜாதியப் பார்வையை முன்வைக்கிறார்கள் சில அறிவுஜீவிகள்.

தலித் அறிவுஜீவிகள் கடந்தகால தலித் தலைவர்களின் வரலாறுகளின் பெருமைகளை பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, சிவசண்முகம் பிள்ளை, சுவாமி சகஜானந்தா, என். சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், சத்தியவாணிமுத்து, கே.பி.எஸ் மணி, என்.இளையபெருமாள் என்று பல தலைவர்கள் உண்டு. அதில் சுவாமி சகஜானந்தாவும், என்.இளையபெருமாளும் காங்கிரஸ்காரர்கள். (அம்பேத்கார் கடைசிவரை கடுமையாக எதிர்த்த கட்சி காங்கிரஸ்). சொல்லப்போனால் அம்பேத்கரை விட உயர்ந்த தலைவர்களாக இவர்களை இந்த அறிவுஜீவிகள் கொண்டாடுகிறார்கள். அதே நேரத்தில் 20-ம் நூற்றாண்டில் மிகச்சிறந்த தலித் தலைவர்களான வீரையன், எல்.குருசாமி பற்றி இவர்கள் அதிகம் பேசுவதோ, எழுதுவதோ கிடையாது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வீரையன் மற்றும் எம்.சி.ராஜாவை பெரியார் பெரிதும் மதித்தார். இவர்களில் ஒருவரை அதிகாரம் நிறைந்த ஆளுநர் நிர்வாகக்குழுவில் உறுப்பினராக்க வேண்டும் என்று தீவிரமாக பெரியார் முயற்சித்தார். அமைச்சர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராடினார். 1930-ம் ஆண்டு சென்னை அரசாங்க நிர்வாக சபையில் உறுப்பினர் பதவியில் இருந்த முகமது உஸ்மான் பதவிக்காலம் முடுவுக்கு வந்த போது அந்த இடத்தை எம்.சி. ராஜாவுக்கு வழங்க வேண்டும் என்று ”குடிஅரசு” ஏட்டில் 09.03.1930-ல் பெரியார் எழுதினார். இந்த பதவிக்கு நீதிக்கட்சியிலிருந்து செல்வாக்குமிக்க பலர் போட்டியிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எம்.சி.ராஜாவுக்கு தான் அந்த பதவி கிடைத்தது. பெரியார் இரண்டுமுறை இதை வலியுறுத்தி அவர் பெயரை ”குடிஅரசு”பத்திரிக்கையில் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.

1937-ல் ஆம்பூரில் நடந்த ஆதிதிராவிடர் மநாட்டில் பெரியாரும், எம்.சி.ராஜாவும் பங்கேற்றார்கள். எம்.சி.ராஜா “ஒரு ஆதிதிராவிட மந்திரியாக நியமிக்க வேண்டும் என்று பெரியார் 6,7 வருடங்களாக போராடி வருகிறார். பெரியார் முயற்சியே மந்திரி பதவி பெறக் காரணமாக இருந்தது” என்று எம்.சி.ராஜா பேசினார். அதே மேடையில் பேசிய பெரியார் ”இந்த புகழ்ச்சிகளுக்கு நான் அருகனல்ல, (தகுதியடையவன் அல்ல) என்று கூறியதோடு உங்கள் அன்புக்கும் தகுதிக்கும் பாத்திரமாக நடந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார். எல்.குருசாமி ஒரு தெலுங்கு தலித்தலைவர், ஆனால் அனைத்து தலித் மக்களுக்கும் உரிமைக்காக அவர் பேசினார். பெரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். அவர் குறித்து இந்த அறிவுஜீவிகள் கண்டுகொள்வதில்லை என்று எழுதியுள்ளார் எஸ்.வி.ஆர்.
தொடரும்…..

You may also like...