இளைஞர்கள் புடைசூழ நடந்து முடிந்த கோவை பயிலரங்கம்!
கோவை மாவட்டக் கழகச் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் 28.09.2025 அன்று கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற தோழர்களின் அறிமுகத்துடன் நிகழ்வு தொடங்கியது.
பயிலரங்கின் முதல் வகுப்பாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இந்திய வரலாற்றில் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், திராவிடர் இயக்க வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பெரியார் தொண்டர் சிற்பி இராசனின் மந்திரமா! தந்திரமா! மூடநம்பிக்கை விளக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதி ஒழிப்புப் பணியில் திராவிடர் இயக்கம் என்ற தலைப்பில் வரலாற்றுச் சிறப்பிக்க உரையை நிகழ்த்தினார்.
கழகத் தலைவர் முன்னிலையில் கோவையைச் சேர்ந்த மோகன் கிருட்டிணன், வழக்கறிஞர் ஆல்டன், ஹரிஹரன், கவுதம், அஜய், சுதர்சன் ஆகியோர் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்குக் கழகத் தலைவர், கழக வெளியீடுகளை வழங்கி வரவேற்றார்.
பயிலரங்கில் கலந்து கொண்ட பெரும்பான்மை தோழர்கள் இளைஞர்களாகவும், சமூகவலைத்தளங்களின் வாயிலாக பெரியாரையும் அறிந்து கொண்டவர்களாகவும் இருந்தனர். பெரியார் – திராவிடர் இயக்கம் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதிலளித்தார்.
பயிற்சி வகுப்பு நடத்திட அலுவலகம் கொடுத்து உதவிய சவுந்தர் அவர்களுக்கும், நிகழ்வை முழுமையாக காணொளிப் பதிவு, படங்கள் எடுத்து கொடுத்த ஸ்டாலின் அவர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு தகுந்தவாறு அரங்கை சரிசெய்து கொடுத்த ஆதரவாளர் பழனி அவர்களுக்கும் நன்கொடை கொடுத்து உதவிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்
கழகத் தோழர்கள் வெங்கட், நிர்மல் குமார், மாதவன், பன்னீர்செல்வம், ஸ்டாலின், விஷ்ணு, சதீஷ், கதிரவன், நவீன் நிகழச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 09102025
