சினிமா மட்டுமே அரசியல் அல்ல!-விடுதலை இராசேந்திரன்

ஏழை எளிய விளிம்பு நிலை குடும்பங்களில் 40 உயிர்கள் பலியாகி விட்டன. கடந்த பல ஆண்டுகளாக கதாநாயகன் பிம்பத்தில் தங்கள் உள்ளத்தில் பதிந்துள்ள ஒரு உருவத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற உளவியலால் உந்தப்பட்டு இளைஞர்கள் பெண்களும் ஆண்களுமாய் கரூரில் திரணடனர்.

காலை 8:30 மணிக்கு விஜய் நாமக்கல் வருகிறார் என்பதால் விடியற் காலையிலே அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி திரண்டு வந்து விட்டார்கள். ஆனால் நடிகர் விஜய் தனி விமானத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டதே காலை 8 45 மணிக்குத் தான்; அதனால் அவர் கரூருக்கு வந்து சேர்ந்ததும் 10 மணி நேர தாமதத்திற்குப் பிறகு தான்!

ஒவ்வொரு வினாடியும் உணர்வுகளால் உந்தப்பட்டு விஜய்க்காக காத்திருந்த மக்கள், அந்த உணர்வுகளின் அழுத்தத்தால் விஜய் வருகிறார் என்றவுடன் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பில் உயிர் பாதுகாப்பைப் பற்றியும் கவலைப்படாமல் மேடை நோக்கி ஓடி இருக்கிறார்கள். தங்களுடைய காலின் கீழ் மிதிபட்டுக் கிடப்பவர்களும் சக மனிதர்கள் தான் என்ற உணர்வையும் மிஞ்சி நிற்கிறது, அந்த பிம்பம் உருவாக்கிய மாயை .

தன்னிலை மறந்து நிற்கும் அரசியல் புரிதலற்ற இந்த உணர்வையே, தனது அரசியல் முதலீடாக்கி களத்தில் நுழைந்து இருக்கிறார் விஜய். மக்களுக்கு இழைக்கின்ற மகத்தான துரோகம் இது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறியதும், மக்களை பாதுகாக்கும் துரித நடவடிக்கையில் இறங்கியதும் இதை அரசியலாகப்‌‌ பார்க்க கூடாது என்ற நல்ல எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. கொடும் துயரமான இந்த மரணங்களை, அரசியல் ஆக்கக் கூடாதுதான்; ஆனால் இந்த மரணங்களுக்குக் காரணமான விஜய் நடத்தும் அரசியலை அரசியலாகவே பார்க்க வேண்டும்.

இந்த மரணத்திற்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் ஒவ்வொரு முறையும் காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறிக்கொண்டிருக்கும் தனது ரசிகர்களை அவர் கண்டித்தது இல்லை; கட்டுப்பாடுகளை மீறி அவரே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நியாயமாக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கடும் நெருக்கடியான சூழலில் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு தலைவர், அவசரம் அவசரமாக சென்னை வீட்டுக்கு திரும்புகிறார்.

கூட்ட நெரிசலில் சாவு என்பது வழக்கமாக “கும்பமேளா”க்களில் தான் நடக்கும். இப்போது தமிழ்நாட்டில் முதன் முதலாக அரசியல் கூட்டம் ஒன்றில் நடந்திருக்கிறது. கரூரில் நடந்தது அரசியல் கூட்டம் அல்ல! அது ஒரு கும்பமேளா! அடுத்த வாரம் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று இப்போது விஜய் அறிவித்திருக்கிறார். கூட்டத்துக்கு அனுமதி கேட்டு அவரது கட்சி இனி காவல்துறைக்கு மனுபோட முடியுமா? அதற்கான தார்மீக உரிமை உண்டா? என்ற கேள்வி இப்போது எழுந்து இருக்கிறது.

சொல்லப்போனால், முதலமைச்சர் நாற்காலியின் மீதான கனவுலக ஆசைகளின் கிளைமேக்ஸ் காட்சி கதாநாயகனின் தோல்வியில் முடிந்திருக்கிறது. சினிமா மட்டுமே அரசியல் என்றால் அது கரூரின் அவலக் காட்சியாகவே இருக்கும்!
-விடுதலை இராசேந்திரன் (முகநூல் பதிவு)
பெரியார் முழக்கம் இதழ் 02102025

You may also like...