பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணிநீக்கம் கழகம் வரவேற்பு
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நிலவி வந்த ஜாதிய மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசுக்கும் துணைவேந்தர் நிர்வாகக் குழுவிற்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
“சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு மர்மமான முறையில் நீடித்து வருகிறது.பதிப்புத் துறையின் இயக்குநராக இருந்தபோது பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கிய நிதியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்த சேலம் இலஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் இவர் பட்டியலின ஆராய்ச்சி மாணவர்களை ஜாதியைச் சொல்லி திட்டுவதாக புகார்கள் அளித்தனர். ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளியான பேராசிரியரின் பட்டியலின ஜாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேசிய பட்டியலின ஆணைய உத்தரவின்படி மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் கல்வியியல் துறை பட்டியலினப் பேராசிரியர் ஒருவரை “பட்டுப் புடவை கட்டி வந்து மினுக்குவதால் ஒன்றும் ஆகாது, நான் நினைத்தால் கல்வியியல் துறையை இழுத்து மூடிவிடுவேன்” என்று மிரட்டிய குற்றச்சாட்டும் நிலுவையில் உள்ளது.கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர் ஒருவரை தரக் குறைவாக இழிவாக திட்டி உள்ளார்.
தொகுப்பூதியப் பணியாளரை ஒருமையில் தரக் குறைவாக பேசி உள்ளார். அப்போதைய துணைவேந்தர் ஜெகன்னாதனிடம் புகார் அளித்தும் அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை.
முன்னாள் ஆசிரியர் சங்கத் தலைவரை “சில்லறைப் பயல் விளங்க மாட்டான் அவன்” என்று பலர் முன்னிலையில் தரக் குறைவாக பேசியும் உள்ளார். தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட 19 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இவர் துறைத் தலைவராக இருந்த காலத்தில் ஆய்வை முடிக்காமல் இடை நின்று விட்டனர். இப்படி இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிறைய உள்ளன.
குற்றச்சாட்டிற்கு முகாந்தரம் உள்ளதாக விசாரணைக் குழு அறிக்கை அளித்தது.
இந்நிலையில் பாஜக ஆசிரியர் அணியின் துணைத்தலைவரும், ஜாதிய ஒடுக்குமுறைகளை மேற்கொண்டவருமான பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் துணை வேந்தர் நிர்வாகக் குழுவிற்கும் திராவிடர் விடுதலைக் கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
பெரியசாமி ஜாதிகுறித்து பேசிய குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்த நீதிபதி, கல்வியாளர்களைக் கொண்ட உயர் மட்ட விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.கல்வித் தகுதி சான்றிதழ் மோசடி போன்றவற்றை முறையாக விசாரணை செய்து அவரைப் பணி நீக்கம் செய்வது ஒன்றுதான் சரியான முடிவாக அமையும்.
-“கொளத்தூர் மணி,” தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
30.08.25
