மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழா!
சூலூர் பாவேந்தர் பேரவையின் சார்பாக மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழா கோவை மாவட்டம், சூலூரில் எஸ். ஆர். எஸ் திருமண மண்டபத்தில் 24.01.2026 (காரி) சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் வெ.க.சண்முகவேல் (பாவேந்தர் பேரவைத் தலைவர்) தலைமையில் நடைபெற்றது. சூ.நா.வரதராசு (பாவேந்தர் பேரவைச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார்.
சூலூர் ஏ.டி.ஆர் பரதநாட்டியப் பள்ளி மாணவியரின் தமிழுணர்வு இசை நாட்டியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களுக்கு இசையாலும் நடனத்தாலும் மாணவியர் உயிரூட்டிக் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழினத்தின் மொழி உரிமை மீட்க உயிர்நீத்த மொழிப்போர் ஈகியர்களின் படத்தினை திறந்து வைத்தார். கடந்த 19.1.2026-ம் நாள் மறைந்த தன்மானப் பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களின் படத்தினை தேவி மன்னவன் (சூலூர் பேரூராட்சித் தலைவர்) திறந்து வைத்தார். சூலூர் பாவேந்தர் பேரவை முன்னாள் செயலாளர், மறைந்த தோழர் சூ.நா.தமிழ்நெஞ்சன் (எ) சக்திவேல் அவர்கள் படத்தைத் அ.வள்ளுவராசன் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டளவில் சிறந்த பேரூராட்சி விருது பெற்றுள்ள சூலூர் பேரூராட்சித் தலைவர் திருமதி.தேவிமன்னவன் அவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘சூலூர் விருது’ வழங்கினார். ஊர்நலம், கல்வி மேம்பாட்டுப் பணிகளில் முன்னோடியாகத் திகழும் திருமதி.இனிதா குமார் அவர்களுக்கு திருமதி. விசயலட்சுமி நடராசன் ‘சூலூர் விருது ‘ வழங்கினார். பசுமை நலம், கட்டிடவியல் பணிகளில் முத்திரை பதித்து முன்னோடியாகத் திகழும் திரு. ‘பசுமை நிழல்’ சூ.ஆ. விசயகுமார் அவர்களுக்குப் பேராசிரியர் சத்தியம்பெருமாள் பாலுசாமி ‘சூலூர் விருது’ வழங்கினார். மருத்துவமனை நோயாளிகளின் பசிப்பிணி போக்கல், குருதிக்கொடை, விழிக்கொடை பணிகளின் முன்னோடி திரு.சூ.வே.தருமராசு அவர்களுக்கு சூலூர் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் திரு. சூ.அ. செல்வராசு `சூலூர் விருது’ வழங்கினார்.
‘பெரியார் நெறியில் பெண்களிடம் விழிப்பூட்டுவோம்’ எனும் கருத்தரங்கில் தோழியர் கி.மலர்விழி வரதராசு, தோழியர் ப.ஞானசுந்தரி லோகநாதன், தோழியர் நா.தமிழ்ச்செல்வி கருத்துரையாற்றினர். மத மறுப்பு மணம் புரிந்தோர், ஜாதி மறுப்பு மணம் புரிந்தோர் ,புரோகித மறுப்பு மணம் புரிந்தோர், தூயதமிழ்ப் பெயர் தாங்கிய குழந்தைகள், தூயதமிழ்ப் பெயர் தாங்கிய வணிக நிறுவனத்தினர் ஆகியோரை சூலூர் பாவேந்தர் பேரவை சார்பில் பொன்னாடையும், கேடயமும் வழங்கிப் பாராட்டிச் சிறப்பித்தனர்.
சூலூர் ஒன்றியத் தி.மு.க. செயலாளர் சூ.த.மன்னவன், விடியல் பதிப்பகம் சூ.இல.விசயகுமார் பாராட்டுரை வழங்கினர். தமிழுணர்வும் தன்மான உணர்வும் காக்கப்பட வேண்டியதன் தேவை குறித்தும் , விழா நிகழ்ச்சிகளின் நோக்கம் குறித்தும் புலவர் செந்தலை ந .கவுதமன் விளக்கிப் பேசினார். சூலூரில் 39ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பாவேந்தர் பேரவையால் பெரியார், அண்ணா, கலைஞர் தந்த கொள்கைகளுக்கும் பாவேந்தர், பாவாணர், வே.ஆனைமுத்து சிந்தனைகளுக்கும் உரமூட்டப்பட்ட வழிகளையும் பணிகளின் பயனையும் அவர் விவரித்தார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நம் அறிவை மதமூடச் சனாதனக் கூட்டம் முடக்கி வருவது குறித்தும் அவற்றை முற்போக்கு இயக்கங்கள் உடைத்துத் தகர்த்துத் தமிழ்நாட்டை முன்னேற்றி வரும் செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கிப் பேசினார். தி.மு.கழக ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சித் திறத்தை வியந்ததோடு, கல்வித்துறையில் திராவிடவியல் ஆட்சி அமைதியாக நிகழ்த்திவரும் அரிய சாதனைகளைப் பட்டியலிட்டுக்காட்டிச் சிந்தனை அலையை எழுப்பினார். பாவேந்தர் பேரவைப் பொருளாளர் சூ.ச. அங்கமுத்து நன்றியுரை கூறினார். அனைவருககும் இரவு விருந்து வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம்இதழ்05022026.
