செக்கடிக்குப்பம்-ஓர் பெரியார் மண்!
தமிழ்நாட்டில் பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்ற கிராமங்கள் பற்றிய தொடர் ஒன்று முரசொலி நாளேட்டில் வாரந்தோறும்
வெளிவருகிறது. அந்தத் தொடரை பெரியார் முழக்கம் நன்றியுடன் பதிவு செய்கிறது.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, பார்ப்பனர்களை வைத்து, சடங்குகள் செய்து நடைபெற்றால்தான் அது திருமணம் என்று இன்றும் கருதுவோர் பலர் இருக்க, 1925-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், சுயமரியாதைத் திருமண முறையை, தமிழர்களுக்குத் தந்தார்.
இந்தத் திருமண முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதம் இருந்தால் போதும், பார்ப்பனர்களை அழைக்கத் தேவையில்லை, சடங்குகள் தேவையில்லை, தாலியும் கட்டாயமில்லை. மாலைமாற்றிக் கொண்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டால் போதுமானது. பெரியார் அறிமுகப்படுத்திய இந்த எளிமையான திருமணமுறைக்கு, 1967-இல் அண்ணாவின் ஆட்சி அமையும் வரை சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனாலும், பல ஆயிரக்கணக்கானோர் சுயமரியாதைத் திருமணம் புரிந்தனர்.
அண்ணா இயற்றிய சட்டத்தால் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்ட போதிலும், வைதீகத் திருமணங்களே இப்போதும் அதிகம். ஆனால், தமிழ்நாட்டுக்கே முன்னுதாரணமாக ஒரு கிராமம், 100% சுயமரியாதைத் திருமணங்களை மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறது என்றால் நaம்ப முடியுமா? விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள கோட்டப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம் செக்கடிக்குப்பம். இதுவரை இந்த கிராமத்தில் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
மாற்றத்திற்கான விதை!
1968-ஆம் ஆண்டு மலையனூர் பகுதியில் பெரியார் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு செக்கடிக்குப்பம் பகுதியில் இருந்தும் சிலர் சென்றுள்ளனர். அங்கு பெரியார் பேசிய பேச்சின் தாக்கமே செக்கடிக்குப்பத்தில் நடந்திருக்கும் மாற்றத்திற்குக் காரணம்.
பெரியார் தொண்டரான அர்ஜுனன் அதே ஆண்டு முதன்முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார். அந்த ஊர் மக்களுக்கும் சுயமரியாதைத் திருமணத்தின் நோக்கத்தையும், எளிமையையும் உணர்த்தினார். பின்னர் அதுவே அந்த ஊரின் வழக்கமானது. வரதட்சணை என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. அங்கு நடைபெற்ற அனைத்து சுயமரியாதைத் திருமணங்களும் பதிவு செய்யப்பட்டு, அர்ஜுனன் இல்லத்தில் ஆவணங்களாகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் கல்வி மீதான பற்று இவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. கடன் சுமை இல்லாத எளிய முறையிலான சுயமரியாதைத் திருமணம், மது அருந்தாமை, குழந்தைகளின் கல்வியின் மீது காட்டும் ஆர்வம் ஆகியவை செக்கடிக்குப்பம் ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களையும் வெகுவாக ஈர்க்கின்றன. அதனால், அவ்வூர் பெண்களும் சுயமரியாதைத் திருமண முறையைப் பெரிதும் வரவேற்கின்றனர்.
அதேபோல செக் கடிக்குப்பத்தைப் பொறுத்தவரை `திருவிழா’ என்றால் `பொங்கல்’ மட்டும்தான். கடந்த சில ஆண்டுகளாக `அசுர மன்னர்(இராவண) விழா’ கொண்டாடப்படுகிறது. இதைத்தவிர்த்து, மற்ற மத விழாக்கள் கொண்டாடப்படுவதில்லை. அர்ஜுனன் குடும்பத்தின் சார்பில், அவ்வூரில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா பள்ளி நடத்தப்படுகிறது. அவ்வூரின் திருமண முறையில் மட்டுமல்ல, அழைக்கும் பெயர்களில் கூட சமஸ்கிருத வாடை வீசுவதில்லை. ஊரில் திரும்பிய பக்கமெல்லாம் தமிழ்த்தென்றல், விடுதலை விரும்பி, மதியழகன், செந்தமிழ்க் கனி என அழகிய தமிழ்ப் பெயர்களே ஒலிக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ஒரு தனிநபரின் முயற்சியால் ஒரு கிராமமே `பெரியார் மண்’ ஆனது.
-பிரகாசு பெரியார் முழக்கம் 22052025இதழ்
