சிறைகளை நிரப்பி, உயிர் துறந்த பெரியார் தொண்டர்களின் ஜாதி ஒழிப்புப் போராட்டக் களத்தின் உணர்ச்சிப் பதிவுகள்
1957ஆம் ஆண்டு நவம்பர் 26, பெரியார் இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நாள். இந்திய அரசியல் சட்டத்தின் உட்பிரிவுகள் 13, 25, 368, 372 ஆகிய பிரிவுகள் ஜாதி ஒழிப்புக்கு முழுதும் தடையாய் இருப்பதால், அப் பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை பெரியார், அறிவார்ந்த போராட்டம் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு 3.11.1959 அன்று தஞ்சையில் சிறப்பு மாநாட்டைக் கூட்டி அறிவிக்கப்பட்ட போராட்டம் அது. பெரியாரின் எடைக்கு எடை வெள்ளி நாணயங்களை அம்மாநாட்டில் வழங்கி மகிழ்ந்தனர் பெரியார் தொண்டர்கள். சட்டத்தை எரித்தோம் என்று ஒப்புக்கொண்டு எதிராக வழக்கை நடத்தாமல் 6 மாதத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை – பெரியார் தொண்டர்கள் சிறைத் தண்டனையை ஏற்றார்கள். பெண்கள், கைக் குழந்தைகளோடு கைதானவர்களும் உண்டு. கிரிமினல் கைதிகளாகவே அனைவரும் நடத்தப்பட்டு சிறையில் வேலை வாங்கப்பட்டனர். அடிப்படை வசதிகள், சுகாதாரமே இல்லாத அன்றைய சிறை, பல தோழர்களின் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கச் செய்தது. சிறைக்குள்ளேயே பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்ற இரண்டு தோழர்கள் பிணமானார்கள். 10,000 பேர் சட்டத்தை எரித்தார்கள். காவல்துறை 3 ஆயிரம் தோழர்களை கைது செய்தது. சிறையிலிருந்து விடுதலையாகி ஒரு மாதத்துக்குள்ளேயே உயிர்ப் பலியானோர் 20 தோழர்கள். சிறைக்குள் இறந்தவர்கள் 5 தோழர்கள் என்றும் விடுதலை பெற்ற சில நாள்களுக்குள் இறந்தோர் 13 தோழர்கள் என்றும் மற்றொரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடந்த போராட்டம் அல்ல அது. அரசியல் சட்டப்படி ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஜாதி என்ற அமைப்பே நிர்மூலமாக்கப்பட வேண்டும் என்ற இலட்சியப் போராட்டம் அது. அப் போராட்டத்தில் குருதிக்கரை படிந்த தியாக வரலாற்றிலிருந்து ஒரு சில நிகழ்வுகளின் தொகுப்பு இது.
- போராட்டத்துக்கு முன்பே பெரியார், வேறு ஒரு வழக்குக் காரணமாக கைது செய்யப்பட்டார். மணியம்மையார், திருவாரூர் தங்கராசு, கி.வீரமணி போன்ற தலைவர்கள் சிறைக்கு வெளியே இருந்து போராட்டத்துக்கான ஏற்பாடுகள், உதவிகளை செய்தனர். சிறையில் இறந்து போன தோழர் ஒருவரின் இல்லத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற அன்னை மணி யம்மையாரிடம், அவரது துணைவியார், “எனது கணவர் இறந்து போனதற்காக கவலைப்படவில்லை; சாதி ஒழிப்பு இலட்சியத்துக்காகத்தானே அவர் இறந்திருக்கிறார்; தலைவரிடம் கூறி அடுத்தப் போராட்டத்தை நடத்தச் சொல்லுங்கள், நானும், எனது மகனும் அதில் பங்கேற்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
- போராட்டத்தில், 27 வயதில் பங்கேற்று, 9 மாத சிறைத் தண்டனைப் பெற்றவரும் பெரியார் இயக்கத்தின் முன்னணி செயல் வீரருமான மறைந்த, பிறப்பால் இ°லாமி யராக இருந்தும் பெரியாரி°ட்டாக, கடவுள் மத மறுப்பாளராக வாழ்ந்த நாகை பாட்சா, இவ்வாறு கூறுகிறார்:
“ கைதானவர்களில் பெரும் வியாபாரிகளும் பணக்காரர்களும், பெரும் நிலச் சுவான்தார்களும், 500 பேருக்கும் குறையாமல் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு சிறையில் தனி விசேட வகுப்போ, தனிச் சலுகையோ கேட்க வில்லை. அனைவருமே மூன்றாம் வகுப்பு தண்டனைக் கைதிகளாகவே இருந்தனர். அதைவிட முக்கியம் எந்த ஒரு தோழரும் பிணைக்கு மனுப்போடவில்லை. மன்னிப்புக் கேட்டு, விடுதலை கேட்க முன்வரவில்லை. இந்த இரண்டும் வரலாற்றில் மிகப் பெரும் சாதனை”.
- போராட்டம் குறித்து பெரியார் வெளியிட்ட அறிக்கையில், “பிராமணன் என்றொரு ஜாதி சட்டத்திலிருக்க அனுமதிக்க மாட்டோம். அப்படியிருந் தாலும் அவன் ‘பிராமணன்’ ஆக வாழ அனுமதிக்க மாட்டோம்” என்று இம்மாதம் 26ஆம் தேதிக்குள் அரசாங்கம் சொல்லட்டும். அப்படி ஒரு அறிக்கை வராவிட்டால், நாங்கள் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்திடுவோம். எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டுத்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நம் மக்களுக்கு உணர்ச்சியூட்டி விட்டுச் சாக வேண்டும்” என்றார் பெரியார். (‘பிராமணன்’ என்று ஒரு கூட்டம் அடையாளப்படுத்துவதன் வழியாக ஏனைய மக்களை ‘சூத்திரர்கள்’, பிறப்பால் இழிவானவர்கள், அடிமைகள் என்று வர்ணா°ரம தர்ம அடிப்படையில் உறுதியாக்கப்படுகிறார்கள். அதனால் தான் பெரியார் ‘பிராமணன்’ என்ற அடையாளத்தோடு ஒரு பிரிவை அங்கீகரிப்பதும் மக்களை அடிமை களாக்கும் அதன் வாழ்க்கை முறையை ஏற்கவும் முடியாது என்று உறுதியாகக் கூறுகிறார்-ஆர்)
- குளித்தலையில் நடந்த கூட்டத்தில் பார்ப்பனர்களை பெரியார் ‘குத்தச் சொன்னார் வெட்டச் சொன்னார்’ என்று காவல்துறை வழக்குப் பதிவு செய்த அந்த நேரத்தில் திருச்சிக்கு வந்த அன்றைய பிரதமர் நேரு, இதைக் குறிப்பிட்டு இப்படிப் பேசுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; தேசத் துரோகிகளாக கருதப்பட வேண்டும் என்று பேசி நீதிபதி களுக்கு மறைமுகமாக அறிவுறுத்தலை வழங்கினார். ‘ஒரு பிரதமர் இப்படி பேசிய பிறகு எந்த நீதிபதி தான் என்னை தண்டிக்காமல் இருக்க முடியும்?’ என்று பெரியார் சிறை செல்வதற்கு முன் விடுத்த அறிக்கையில் கேட்டார். சட்ட எரிப்பில் தோழர்களுக்கு 3 மாதம், 6 மாதம், 9 மாதம் என்று வழங்கப்பட்ட தண்டனை, நேருவின் பேச்சுக்குப் பிறகு 9 மாதம், ஒரு வருடம், ஒன்றரை வருடம், இரண்டு வருடம் என்று அதிகரித்தது.
- பெரியாரின் போராட்டத்துக்காகவே தேசிய அவமதிப்புச் சட்டம் ஒன்றை தமிழக சட்டசபையில் காங்கிர° ஆட்சி கொண்டு வந்தது. அரசியல் சட்டம் தேசியக் கொடி தேசியத் தலைவர்களை அவமதித்தால் 3 ஆண்டு வரை சிறை என்று அறிவித்தது அந்த சட்டம்.அந்த சட்டத்தை துச்சமென மலம் துடைக்கும் காகிதமாகக் கருதித்தான் பல்லாயிரக் கணக்கில் பெரியார் தொண்டர்கள் சட்டத்தை எரிக்க வந்தார்கள்.
- திருவாரூர் முத்துக்கிருட்டிணன் அடக்கமான உறுதியான ஏழை பெரியார் தொண்டர். 1976ஆம் ஆண்டு ‘மிசா’ சட்டத்திலும் கைதானவர். சட்டத்தை எரித்து அவர் சிறையிலிருந்தபோது அவரது துணைவியார், அவரது குடும்பத்தை, விவசாயத்தை நிர்வகித்து வந்தார். திடீரென்ற காலராவில் பாதிக்கப்பட்டு, அந்த அம்மையார் இறந்தார். முத்துகிருட்டிணன் பரோல் கேட்கவில்லை. அவரது சிறு குழந்தைகளையும் விவசாயத்தையும் அதற்குப் பிறகு கவனித்து வந்த அவரது மாமியாரும் காலராவுக்கு பலியானார். ஆதரவற்றுப் போன முத்துகிருட்டிணன் குழந்தைகளை அவர் விடுதலையாகி வரும் வரை கழகத் தோழர்கள் அரவணைத்து வளர்த்தனர். சிறையிலிருந்து விடுதலையான முத்து கிருட்டிணனை திருவாரூர் வீதிகளில் ஊர்வலமாக தோழர்கள் உணர்ச்சி முழக்கமிட்டு அழைத்து வந்தபோது தோழர்களின் விழிகள் கண்ணீராலும் நனைந்திருந்தது.
- பெரியாரின் பெரு நம்பிக்கைக்குரியவர் களும் பெரும் வசதி படைத்தவர்களுமான நீடாமங்கலம் அ.ஆறுமுகம், சிதம்பரம் கிருட்டிணசாமி, ஆனைமலை நரசிம்மன் சிறையில் அரைக்கால் சட்டையுடன் புல் புடுங்குதல், பாத்திரம் கழுவுதல், கூட்டிப் பெருக்குதல், கழிவறை கழுவுதல் என்ற வேலைகளை செய்தனர். வருமான வரி கட்டக்கூடிய வசதி மிக்கவர்களாகவும் வயது முதிர்ந்தவர்களாகவுமான வேலூர் திருநாவுக்கரசு, திருச்சி வீரப்பா போன்றவர்கள் சிறையில் அதிகாரிகளுக்கு ‘எடுபிடி’ வேலைகளை செய்யப் பணிக்கப்பட்டனர்.
- திருச்சி வாளாடியைச் சார்ந்த 16 வயதே நிரம்பிய தீவிர பெரியார் தொண்டன் பெரியசாமி, தாய்க்கு ஒரே மகன். பெரியார் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் ஓடோடி வந்து கேட்ட சிறுவன். அவன் சட்டத்தை எரித்தான். இரண்டாடுகள் கடும்காவல் தண்டனை விதிக்கப்பட்டான். தூத்துக்குடி தட்டப்பாறை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்ட அந்த இளம் வீரனை பயணத்துக்கு பண வசதி இல்லாமையினால் அவனது தாய், ஒரு முறைகூட சிறையில் வந்து சந்திக்க முடியவில்லை. தமிழக ஆளுநர் விஷ்ணுராம் மேதி தட்டப் பாறை சிறைக்கு பார்வையிட வந்தபோது சிறையிலிருந்த ஒரே அரசியல் கைதியான பெரியசாமியிடம், “உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். இனிமேல் இதுபோல் செய்யாமல் இருப்பாயா?” என்று கேட்டார். மொழி பெயர்ப்பாளர் வழியாக இந்த உரையாடல் நிகழ்ந்தது. இளம் பெரியார் தொண்டன் பதில் சொன்னான்: “வெளியே அனுப்பினால், மீண்டும் சட்டத்தைக் கொளுத்துவேன்.” அதிர்ச்சி அடைந்த ஆளுநர் பெரிய சாமியின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். ‘கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்’ என்றார். கடவுள் ‘ஆசீர்வாதம்’ – அந்த இளைஞனுக்கு ‘மரண வடிவத்தில்’ தான் வந்தது. மோசமான உணவு – கடும் வெய்யில் பாதிப்பில் வயிற்றுப் போக்குக்கு உள்ளாகி, உரிய சிகிச்சையின்றி சிறைக்குள்ளேயே மயக்கமடைந்து வீழ்ந்த பெரியசாமியிடம் ‘விடுதலை செய் கிறோம்; வெளியே போகிறாயா?” என்று அதிகாரிகள் கேட்ட போது பேச முடியாமல் மறுப்பை கையசைத்து வெளிப்படுத்தினான். அடுத்த சில மணி நேரங்களிலே கொள்கைப் பெருமை யோடு விடைபெற்றுக் கொண்டு விட்டான், அந்த இலட்சிய இளைஞன். திருச்சி லால்குடி சாலையில் அந்த இளைஞனுக்கு இப்போதும் ஒரு நினைவுச் சின்னம் இருக்கிறது.
- திருமணமான ஒரே வாரத்தில் சட்டத்தை எரித்து சிறைக்கு வந்த மாணிக்கம், தனது இளம் மனைவியிடம் வைத்த வேண்டுகோள் இதுதான். “நான் விடுதலையாகி வரும் வரை என்னை சிறைக்குள் பார்க்க வராதே. என் மனம் சலனப்பட்டு நான் மன்னிப்புக் கேட்டு விடுதலையாகி வெளியே வரக் கூடாது. மனதைத் திடப்படுத்திக் கொள்” என்று கூறினான். கணவனின் கொள்கை உறுதியை புரிந்து கொள்ள முடியாத அந்த இளம் பெண், மனஉளைச்சலுக்கு உள்ளாகி, ‘கணவன் தன்னை புறக்கணித்து விட்டார்’ என்றே நம்பி, பிறகு முழுமையான மனநோயாளியாகி விட்டார். விடுதலையான மாணிக்கம், தனது ஒரு வார கால மண வாழ்க்கை நினைவுகளுடன் மனநோய்க்கு உள்ளான மனைவியுடன் வாழ்ந்து, பிறகு மனைவியின் மரணத்துக்கு முன்பாகவே மடிந்து போனார்.
- பட்டுக்கோட்டை இராமசாமியும், மணல்மேடு வெள்ளைச்சாமியும் திருச்சி சிறையில் அடுத்தடுத்த நாள்களிலேயே மாண்டனர். பட்டுக்கோட்டை இராமசாமியின் உடலை சிறை அதிகாரிகள் உறவினர்களிடம் ஒப்படைக்காமல், சிறை வளாகத்துக் குள்ளேயே புதைத்து விட்டனர். கழகத் தோழர்கள் கொதித்துப் போனார்கள். அன்னை மணியம்மையார், அமைச்சர் பக்தவத்சலத்திடம் நேரில் போய் தட்டிக் கேட்டுப் போராடினார். பிறகு புதைக்கப் பட்ட இராமசாமியின் உடலைத் தோண்டி, பாதி அழுகிய நிலையில் அதிகாரிகள் தந்தார்கள். எரிமலையாய் குமுறிய தொண்டர்களின் தோளில் இராமசாமி, வெள்ளைச்சாமி உடல்கள் திருச்சியில் ஜாதி ஒழிப்பு முழக்கங் களுடன் பவனி வந்து இறுதி வணக்கத் துக்காக சிறைச்சாலை வாயிலில் வைக்கப் பட்ட அந்த இரு பெரும் ஜாதி ஒழிப்பு வீரர்களின் சடலங்களுக்கு முன்னால், “பல இளைஞர்கள் ஜாதி ஒழிப்புத் திருமணங்களையே செய்வோம்” என்று உறுதி எடுத்தனர். உறுதி எடுத்தவர்கள் அதை நிறைவேற்றவும் செய்தனர். பெரியாரே பலருக்கு ஜாதி கடந்து பெண் பார்த்து திருமணத்தையும் நடத்தினார்.
- பெரியாரிடம் இந்த ஜாதி ஒழிப்புப் போராட்டக் கருத்து ‘சூள்’ கொண்டதற்கு அடிப்படையான காரணம் முதுகுளத்தூரில் நடந்த கலவரம்தான். இமானுவேல் சேகர் என்ற ஜாதி ஒழிப்புப் போராளி, ஆதிக்க ஜாதியினரின் ஜாதி வெறிக்கு அடிபணிய மறுத்ததால் இளம் வயதிலேயே கொலை செய்யப்பட்டார். முத்துராமலிங்க தேவரும் அவரது ஜாதியினரும் இதில் குற்றம்சாட்டப் பட்டார்கள். பெரியார் ஒருவர் மட்டுமே முத்துராமலிங்க தேவருக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசினார். சட்ட எரிப்புப் போராட்டம் நடந்த நவம்பர் 26க்கு 10 நாள்களுக்கு முன் ‘விடுதலை’ இவ்வாறு தலையங்கம் தீட்டியது.
“முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஆதி திராவிடர்கள் அனைவரும் காமராசர் ஆட்சிக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளை நஞ்சாக வெறுத்து விட்டனர். நூற்றுக்கணக்கான ஆதி திராவிட உயிர்கள் பலியாக்கப் பட்டிருப்பதையும் ஆயிரக் கணக்கான குடிசைகள் தீக்கிரையாக்கப் பட்டதையும் சிறிதும் பொருட்படுத்தாதபடி ஐந்து ‘உயர் ஜாதி’க்காரர்களை போலீசு சுட்டுக் கொன்றது பற்றி கண்ணீர் வடிப்பதும், திரு. மு.தேவரை விடுதலை செய்ய வேண்டு மென்று கடையடைப்பு செய்யவும் இதற்காக சட்டசபையில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவதும், இதற்காக சட்டசபையை விட்டு வெளியேறுவதும் போன்ற நடத்தை களால் அரசியல் எதிர்கட்சிகள் என்பவை ஆதி திராவிட சமுதாயத்திற்கு துரோகம் செய்து விட்டன. இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்காக ஆதி திராவிட சமூகம் இந்த எதிர்கட்சிகள் மீது இன்று ஆத்திரப்பட்டு கொதிப்படைந்து இருக்கிறது.
நேற்று சென்னைக் கூட்டத்தில் பேசிய தலைவர் பெரியார் அவர்கள் கூட, “நான் சட்டசபையில் இடம் பெற்றிருக்கக் கூடிய பொல்லாத வேளை ஏற்பட் டிருந்தால் ஏன் முன்கூட்டியே கலகக்காரர்களை சுட்டு வீழ்த்தியாவது ஆதி திராவிட உயிர்களையும், வீடுகளை யும், காப்பாற்றியிருக்கக் கூடாது?” என்று மந்திரிகளை நோக்கி கேட்டு இருப்பேன்” என்று கூறினார். எனவே சாதி வெறிக்குச் சிறிது கூட இடமளிக்கக் கூடாது என்பதில் திராவிடர் கழகத்தைப் போன்ற தீவிர இலட்சியங் கொண்ட கட்சியே இந்நாட்டிலில்லை.
இன்று அரசியல் சட்டத்தைக் கொளுத்து கிறோம் என்றால், எதற்காக? அதில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்காகத்தான். சாதி உள்ள வரையில் தீண்டாமை ஒழியுமா? ஒழித்திருக்கிறதா?”
– என்று ‘விடுதலை’ எழுதியது.
சாதி ஒழிந்தாலொழிய தீண்டாமை ஒழியாது என்பதை உணர்ந்துள்ள எல்லா ஆதி திராவிடர் தோழர்களும் தோழியர்களும் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் பங்கேற்க அழைத்தது அத் தலையங்கம்.
பல்லாயிரக்கணக்கில் தலித் தோழர்கள் சட்டத்தை எரித்தார்கள். குடும்பங்களுடன் சிறையேகியவர்களும் உண்டு. பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், ஜாதிகளைக் கடந்து ஜாதி ஒழிப்புக் களத்தில் கைகோர்த்து, பல மாதங்கள், வருடங்கள் சிறையில் ஒன்றாக தியாக வாழ்க்கை வாழ்ந்த பொற்காலம் அது.
தியாகக் குருதி நிறைந்த அந்தப் போராட்டக் களத்தில் ஒரு சில நிகழ்வுகள் தான் இவை.
ஜாதி ஒழிப்பு மாவீரர்களின் இலட்சி யத்தை அதே பாதையில் தொடர இளைய சமுதாயம் உறுதி ஏற்கிறது.
(திருச்சி செல்வேந்திரன் எழுதி, பெரியார் திராவிடர் கழகம் தொடுத்த “சாதியை ஒழிக்க சட்ட எரிப்புப் போராட்டம்” வரலாற்று ஆவணத்திலிருந்து தொகுக்கப்பட்ட தகவல்கள்)
நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்