விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!
`கடவுள் வணக்கம்’ கூறுவதைப் போல இனி நாம் எல்லா நிகழ்ச்சிகளும் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்லித்தான் தொடங்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார் பெரியார். அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கடவுள் மறுப்பு வாசகம் சொல்லப்படுவது வழக்கமான ஒன்று. அத்தகைய வரலாற்றுச்சிறப்பு மிக்க வாசகம் முதன்முதலில் சொல்லப்பட்ட இடம் விடையபுரம்.”
2018-ஆம் ஆண்டு திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. அதைப்போல தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை ஒருநாள் உடைக்கப்படும் என்று பதிவிட்டார் ஒருவர். எதிர்ப்புகள், வழக்குகளுக்குப் பிறகு தனது அட்மின் மீது பழியைத் தூக்கிப்போட்டார். அதுபோல, பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசுவார்கள், செருப்பு மாலை அணிவிப்பார்கள். நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டால், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுசொல்லி பிணை கேட்பார்கள். மறைந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகும் எதிரிகளை இப்படி பெரியார் அச்சுறுத்துகிறார் என்றால், அவருடைய சித்தாந்தம் ஒரு காரணம். மற்றொன்று, அவரது சிலைக்குக் கீழே பீடத்தில் தவறாமல் எழுதப்பட்டிருக்கும் கடவுள் மறுப்பு வாசகம்.
அந்த கடவுள் மறுப்பு வாசகத்தை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார்கள். “யாருக்குச் சிலை வைக்கப்படுகிறதோ அவரின் கருத்துகள் சிலை பீடத்தில் பொறிக்கப்படுவது சரியானதே” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அப்படி கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் முதன்முதலில் கூறிய இடம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விடையபுரம் கிராமத்தில்தான்.
1967-ஆம் ஆண்டு திருவாரூர் பகுதியில் ஒரு பயிற்சிப்பள்ளி நடத்த விரும்பிய பெரியார், தனது அணுக்கத் தொண்டரான வி.எஸ்.பி.யாகூப்பிடம் கூறினார். காவாலக்குடியைச் சேர்ந்த ச.மாரிமுத்து, ப.நடேசன், வி.எம்.ஆர்.பதி ஆகியோரிடம் வி.எஸ்.பி.யாகூப் ஆலோசித்ததில், அவர்கள் கூறிய இடம் விடையபுரம் பண்ணைத்தோட்டம். இதுதொடர்பாக, வாசுதேவ நாயுடுவிடம் அவர்கள் பேசினர். தனது தந்தையான அப்புசாமி நாயுடு பண்ணையாரிடம் வாசுதேவ நாயுடு இதனைத் தெரிவிக்க, மகிழ்ச்சியோடு ஏற்பாடுகளைச் செய்தார். விடையபுரம் பண்ணை அப்புசாமி நாயுடுவுக்கும் பண்ணையாட்களுக்கும் ஏற்பட்டிருந்த தகராறுகளை பெரியார் தலையிட்டுத் தீர்த்துவைத்தார். அதற்கு விசுவாசமாக இந்த பயிற்சிப் பள்ளியைப் பயன்படுத்திக்கொண்டார் அப்புசாமி நாயுடு. 24.05.1967 அன்று அங்கே பயிற்சிப்பள்ளி தொடங்கியவுடன், பெரியார் தனது கைப்பட கடவுள் மறுப்பு வாசகம் ஒன்றை எழுதித்தந்தார்.
‘கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைப் உண்டாக்கியவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை’
என்று அவர் எழுதியதை பெரியாரின் உதவியாளர் மகாலிங்கம் வாசிக்க, மாணவர்கள் எல்லோரும் திரும்பக் கூறினர். 07.06.1967 ‘விடுதலை’ இதழில் இதை பதிவுசெய்து, ‘கடவுள் வணக்கம்’ கூறுவதைப் போல இனி நாம் எல்லா நிகழ்ச்சிகளும் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்லித்தான் தொடங்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார் பெரியார். அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கடவுள் மறுப்பு வாசகம் சொல்லப்படுவது வழக்கமான ஒன்று. அத்தகைய வரலாற்றுச்சிறப்பு மிக்க வாசகம் முதன்முதலில் சொல்லப்பட்ட இடம் விடையபுரம். இன்றும் அதற்கான கல்வெட்டு அடையாளங்கள் விடையபுரத்தில் உள்ளன.
காலத்தால் அழியாத இந்த கல்வெட்டு அடையாளம் மட்டுமல்ல, கருப்புச் சட்டைகளும் விடையபுரம் சுற்றியுள்ள பல கிராமங்களில் திராவிடர் கழகத்தின் வீரியமிக்க வரலாற்றுக்குச் சான்றாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
-ர.பிரகாசு முரசொலியில் எழுதியது 30.05.2025.
பெரியார் முழக்கம் 01062025இதழ்
