பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!
கருப்பு உடை தரித்து பெரியாரியப் பெண்கள் தீச்சட்டிகளுடன் அலகுகுத்திக் கொண்டும் கடவுள் இல்லை என்றும் பேரணியாக அணிவகுத்த காட்சியை கொளத்தூர் கண்டது. “நாங்கள் பெரியாரியப் பெண்கள்; எங்களுக்கு கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, தோழியர்களே! இந்த நம்பிக்கைகள் தான் நம்மை அடிமையில் ஆழ்த்துகின்றன” என்ற செய்தியை மக்களுக்கு கூறினார்கள்.
மேட்டூர் வட்டத்தின் ஒரு சின்னஞ்சிறு கிராமம் கொளத்தூர். அந்த ஊரைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணியினர் ஒரு புரட்சிகர முடிவை எடுத்தனர். நாத்திகர் விழா நடத்துவது என்று அறிவித்து களம் இறங்கினர். கழகத் தலைமைக்கு அந்த முடிவை தெரிவித்தனர்.
பெண்களே நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பெண்களே பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். கடவுள், மதத்தை எதிர்த்து இப்படி பெண்கள் களத்தில் இறங்கி செயல்பட்டு பேரணியையும் விழாவையும் நடத்தி அதை வெற்றியாக்கி சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுதும் இருந்து கழகத் தோழர்கள் பெண்களும் ஆண்களுமாக கொளத்தூர் நோக்கி திரண்டனர். கரைபுரண்டது உற்சாகம். ” இப்படி துளியும் கூட பயமின்றி கடவுள் மதத்தை எதிர்க்கிறார்களே” என்று பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். ஆனாலும் அவர்களின் கடவுள் சிந்தனையை இந்த பேரணி அசைத்திருக்கும் என்பதை நாம் உறுதியாக கூற முடியும்.
கடவுளை மறுத்து பெண்கள் தீச்சட்டி ஏந்துவதையும், வாயில் அலகு குத்துவதையும் பார்க்கும்போது கடவுள் அச்சத்தின் பிடி பொதுமக்கள் உள்ளத்தில் நிச்சயம் தளரவே செய்யும்.
இப்படி நாத்திகப் பேரணியை கண்டு ஏராளமான தோழர்கள் பெரியார் கொள்கைக்கு வந்துள்ளதை வரலாறு கூறுகிறது.
உலகில் நாத்திகர் எண்ணிக்கையில் பெண்கள் மிக மிக குறைவாகவே இடம்பெற்றுள்ளனர். கூகுள், சாட்ஜிபிடி போன்ற தகவல் தரும் ஊடகங்களில் தேடிய போது விரல்விட்டு எண்ணக்கூடிய 9 பெயர்கள் மட்டுமே வந்தன. ஆனால் பெரியார் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் நாத்திகர்களாக மட்டுமல்லாமல் நாத்திக பரப்புரைக்கும் தயாராகி மக்களிடம் தங்களை வருத்திக் கொண்டு மூட நம்பிக்கைகளைத் தோலுரிக்கவும் முன்வந்துள்ளனர். கொளத்தூர் பெண்கள் நடத்திய நாத்திகப் பேரணி உலக வரலாற்றில் முதன்மையானது என்று நாம் என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறலாம். கழகத்திற்கு பெருமை சேர்த்து விட்டனர் நமது பெண் தோழர்கள். பொதுகூட்டம் என்ற அறிவிப்பை மாநாடாக மாற்றிவிட்டார்கள்.
-வாழ்த்துகள் தோழியர்களே!
-பெரியார் முழக்கம் 29052025இதழ்
