மண் சோறு சாப்பிடுவோர் என் ரசிகர்கள் அல்ல – நடிகர் சூரி.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள திரைப்படம் `மாமன்’. மே 15-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென்று சூரியின் ரசிகர்கள் மதுரையில் மண் சோறு சாப்பிட்டு, அந்த வீடியோவைப் பகிர்ந்தனர். மண் சோறு உண்பது, நடிகர்களின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், மொட்டை அடிப்பது. அலகுக் குத்துவது என விதவிதமான பிற்போக்குத்தனங்களை, பல்வேறு நடிகர்களுக்கு ரசிகர்கள் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இத்தகைய பிற்போக்குத்தனங்களை இதுவரை எந்த நடிகரும் கண்டித்ததில்லை. அல்லது அவை, பிற்போக்குத்தனங்கள், இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வெளிப்படையாகக் கூறியதும் இல்லை.
ஆனால், முதன்முறையாக, தனது ரசிகர்களைக் கடுமையாக எச்சரித்து, முன்னுதாரணமாகியிருக்கிறார் நடிகர் சூரி. ‘மாமன்” படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிட்டவர்களை ‘தம்பிகள்* என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். அதைவிட்டு, மண் சோறு சாப்பிட்டால், படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா என்ன? மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்தப் பணத்தில் 4 பேருக்கு நீர், மோர், உணவு வாங்கிக் கொடுத்திருக்கலாம். இதுபோன்ற செயலைச் செய்பவர்கள் எனது ரசிகர்களாகக் கூட இருக்கத் தகுதியற்றவர்கள்” என வெளிப்படையாக தனது ரசிகர்களைக் கண்டித்து, இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம். என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
சூரியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இத்தகைய பிற்போக்குத்தனங்களில் ஈடுபடும் எல்லா ரசிகர்களுக்கும், இந்த அறிவுரை நிச்சயம் பொருந்தும். கண்மூடித்தனமாகத் தங்களைப் பின்பற்றும் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதே நடிகர்களுக்கு அழகு. அதை நேர்த்தியாகச் செய்த நடிகர் சூரியின் செயல் பாராட்டுக்குரியது.
(நன்றி முரசொலி) பெரியார் முழக்கம்22052025இதழ்
