சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!
பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சு
தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 03.05.2025 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திராவிடம் – பெரியார் யாருக்கு எதிரி? என்ற தலைப்பில் கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சுயமரியாதைச் சுடரொளி கூ.சு.ரா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குறும்பை. அரு. மாசிலாமணி தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. செயலாளர் செட்டியூர் சேர்மத்துரை திப்பணம்பட்டி தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தி.வி.க. செயலாளர் பொ.பெ.சு.அன்பரசு வரவேற்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினர்.
அவர் தனது உரையில் இந்தியா எனும் மதச் சார்ப்பற்ற நாட்டை ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு RSS ன் கொள்கையான சனாதனக் கொள்கையை இந்தியாவின் சட்டமாக்கிட இந்தியாவை வேத காலத்திற்கு கொண்டு சென்று வேறுபாடு நிறைந்த ஜாதி வேற்றுமை கூடிய நாடாக மாற்றத் துடிக்கிறார்கள். சனாதனக் கொள்கையை எதிர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு மட்டும்தான் இருக்கிறது இதற்குக் காரணம் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மக்கள் மத்தியில் விதைத்த சமூக நீதி கொள்கையே காரணம் இந்த சமூகநீதி கொள்கையை நீர்த்து போக விடாமல் கருத்தியல் பரப்புரை செய்யும் பெரியார் இயக்கங்களும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் பாதுகாத்து வருகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி, மருத்துவக் கட்டமைப்பு போன்றவற்றிற்கு அடித்தளமான சமூக நீதி கொள்கை இருக்கும் வரை தமிழ்நாட்டை சனாதனக் கொள்கை நெருங்க முடியாது என்பதால் பல்வேறு வழிகளில் புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த கட்டயப்படுத்துதல், பல்கலைக்கழகம் புதிய விதி முறைகள், கல்விக்கான நிதியை விடுவிக்க மறுப்பு, G.S.T. நிலுவைத் தொகை தர மறுப்பு, பேரிடர் கால நிதி தரமறுப்பு, மீண்டும் குலத் தொழிலை செய்விக்க விஷ்வகர்மா யோஷனா என பிற்போக்கு கொள்கையை ஒன்றியரசு தமிழ்நாட்டில் திணிக்க பார்க்கிறது. இதனை எதிர்க்க கல்விப் புரட்சியை -நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி இன்றைய தி.மு.க.அரசு முறியடித்து வருகிறது. சனாதனம் எனும் பிரிவினைவாத பிற்போக்குக் கொள்கையை எதிர்த்திட தமிழர்கள் தயாராக வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்வில் திராவிடர் தமிழர் கட்சி நிதிச்செயலாளர் சு.க. சங்கர், கீழப்பாவூர் வி.சி.க. மாவட்ட அமைப்பாளர் பாக்கிய ராஜ் ஆதித்தமிழர் பேரவை தென்காசி மாவட்டச் செயலாளர் கலிவரதன் கிழப்பாவூர் தி.மு.க. நகரச்செயலாளர் ஜெகதீசன் தி.வி.க. தி.மு.க. இளம்பேச்சாளர் இள. கார்த்திக், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வடகரை சண்முகம், திராவிடர் தமிழர் கட்சி பண்பொழி சேகர், ஹேமா, பெரியார் பெருந்தொண்டர் பொ.பெ.சுடலையாண்டி தமிழ்நாடு அறிவியல் மன்றம் தமிழ்செல்வன், தென்காசி அ.பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி சந்திரசேகர் பால் அறிவழகன், உதயக்குமார் மற்றும் தி.மு.க. திராவிடர் தமிழர் கட்சி வி.சி.க. திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை தி.வி.க. தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர் நிறைவாக கிழப்பாவூர் ஒன்றியத் தலைவர் அருணாபேரி ச.சுப்பையா நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 08052025இதழ்
