பீகாரில் பில்லி சூனிய நம்பிக்கையால் 200 பேர் முன்னிலையில் ஒரே குடும்பத்தில் ஐவர் எரித்து கொலை!
பில்லி சூனியக்காரர் என்று ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகாரில் அரங்கேறி உள்ளது. பியூரின் மாவட்டத்தில் டெட்காமா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் ராம்தேவ் மகத்தோ என்பவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் சிகிச்சைக்கு கிராம வைத்தியர் பாபுலால் ஒரன் (50) என்பவரிடம் சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு ஊர்த் தலைவர் முன்னிலையில் கிராம மக்கள் கூடினார்கள்.
சிகிச்சை அளித்த கிராம வைத்தியர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பில்லி சூனியக்காரர்கள் என்று கிராமத்தினர் முடிவு செய்தனர். அவர்களை கட்டையால் அடித்து சாகடித்து பிறகு தீ வைத்து எரித்து சடலங்களை ட்ராக்டர் ஒன்றில் ஏற்றி கிராமத்தில் குழித் தோண்டி புதைத்தனர். இதில் உயிர் தப்பிய வைத்தியரின் 16 வயது மகன் இந்த தகவலை தங்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தார்.
மாவட்ட காவல்துறை அதிகாரி பிரமோத்குமார் மண்டல் இந்த கொடூரத்தை செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது குடும்பத்திலிருந்து உயிர் தப்பிய சம்பவத்தை நேரில் பார்த்த 16 வயது இளைஞனும் இதை செய்தியாளரிடம் கண்ணீர்விட்டு கதறிக்கொண்டே கூறினார். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் மாநிலம் காட்டுமிராண்டித் தனத்தின் உச்சத்தில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
பெரியார் முழக்கம் 10072025இதழ்
