தலையங்கம் – சமஸ்கிருத வாரம்!
‘சமஸ்கிருத வாரம்’ கடைபிடிக்க வேண்டும் என்று மோடி ஆட்சியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியிருப்பது, சி.பி.எஸ்.ஈ. போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தமிழக அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும்தான். பல்வேறு அரசியல் கட்சிகள் இதை எதிர்த்திருப்பதோடு, தமிழக முதல்வரும் எதிர்த்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி ஒன்றைத் தவிர, அநேகமாக அனைத்துக் கட்சிகளும் இந்தத் திணிப்புக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும்!
சமஸ்கிருதம் – ஒரு மொழி மட்டுமல்ல; அது, பார்ப்பன மேலாதிக்கத்தின் குறியீடும் ஆகும். மோடியின் பா.ஜ.க. ஆட்சி, பார்ப்பனப் பண்பாடே இந்தியப் பண்பாடு என்ற கொள்கைப் பார்வையோடு இந்த முயற்சிகளில் இறங்கி யிருப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே ‘சமஸ்கிருதத்தை’ பேசுவதாக 2001 மக்கள் தொகை அறிக்கையில் பதிவு செய்திருப்போர் 14,135 பேர் மட்டுமே. இதுவும்கூட 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 49,736 ஆக இருந்து 10 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து விட்டது. சடங்குகள், சாஸ்திரங்கள், வழிபாடுகளின் மொழிக்கான தகுதி சமஸ்கிருதத்துக்கு மட்டுமே உண்டு என்று பார்ப்பனர்கள் தங்களின் ‘வேத கலாச்சாரத்தை’ திணிக்கிறார்கள். இந்தியாவின் தேசிய மொழிக்கான தகுதியுடையது ‘சமஸ்கிருதம்’ தான் என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை. இதை ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கொள்கை வகுத்த அதன் தலைவர் கோல்வாக்கர் எழுத்து மூலம் பதிவு செய்துள்ளார். (‘க்ஷரnஉh டிக வாடிரபாவள’ நூல்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது தமிழ். இந்தோ-ஜெர்மானிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததுதான் சமஸ்கிருதம் 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆய்வாளர் சர். வில்லியம் ஜோன்ஸ் முன் வைத்த கருத்து இது. அப்படியே ஹும்போல்ட், மாக்ஸ்முல்லர் போன்றோர் இதை வழி மொழிந்து, ஆரிய பெருமையைப் பேசினர்.
“பிராமணர்கள் தங்கள் சொந்த மொழி (சமஸ்கிருதம்), இலக்கியம், மதம் ஆகியவற்றின் தாக்கத்துக்கு உட்பட்டிருக்கும் உன்னதமான இந்துக்கள்” என்று உச்சி மீது தூக்கி வைத்து ஆடினார், ஜெர்மானியரான மாக்ஸ் முல்லர்.
பார்ப்பனப் பண்பாட்டின் அடையாளமாக சமஸ்கிருதத்தை முன்வைத்து, ‘இந்து’, ‘இந்திய தேசியம்’, ‘இந்தியப் பண்பாடு’ என்ற கருத்தாக்கத்தை அமெரிக்காவில் 1875 இல் உருவான ‘தியாசபிக்கல் சொசைட்டி’ (பிரம்ம ஞான சபை) முன் மொழிந்தது. இதை உருவாக்கிய கர்னல் ஓல்காட், பிளாவுட்ஸ்கி அம்மையார் போன்றோர்‘சமஸ்கிருதத்தை’ தேசியப் பொது மொழியாக்கி, ‘இந்திய தேசிய உணர்வை’ வளர்த்தெடுக்க தியாசபிக்கல் சொசைட்டியின் தலைமையகத்தை பம்பாய்க்கு மாற்றினார்கள். ‘ஆரிய வர்த்தத்தைச் சார்ந்தவர்கள்’ என்ற பெருமிதத்தை உருவாக்குவதே தமது தலையாய நோக்கம் என்று புறப்பட்ட பிரம்ம ஞான சபையில், அயர்லாந்து நாட்டிலிருந்து வந்த அன்னிபெசன்ட்டும் சேர்ந்து கொண்டார். பார்ப்பனர்கள் பூரித்து மகிழ்ந்தார்கள். பார்ப்பன மேலாதிக்கத் திணிப்பு இப்போதும் தொடரவே செய்கிறது. அதனால்தான் மோடி ஆட்சியில் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் சமஸ்கிருதம் என்று கூறுகிறது.
இந்தியாவில் நடுவண் ஆட்சியில் அதிகாரத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வரும் பார்ப்பன அதிகார வர்க்கம், சமஸ்கிருதப் பண்பாட்டைத் திணிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. 1967 இல் சாகித்ய அகாடமி, சிறந்த சமஸ்கிருத படைப்புகளுக்கு விருது வழங்கும் திட்டத்தை அறிவித்தது. ஆனால், எந்தப் படைப்பும் வரவில்லை. 2009 இல் தான் சத்யவாத் சாஸ்திரி எனும் பார்ப்பனர், சமஸ்கிருத படைப்புக்காக ‘ஞான பீட’ விருது பெற்றார். 1974 முதல் அகில இந்திய வானொலி சமஸ்கிருத செய்தியை நாள்தோறும் ஒலிபரப்பி வருகிறது. 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கத்திலுள்ள இந்திய விண்வெளித் துறை அதன் முதல் அய்ந்து செயற்கைக் கோள்களுக்கும் ‘பிரித்வி, அக்னி, ஆகாஷ், நாகீ, திரிசூல்’ என்ற சமஸ்கிருதப் பெயர்களையே சூட்டியது. இந்தியாவின் முதல் போர் விமானத்துக்கும் ‘எச்.ஏ.எல்.தேஜாஸ்’ என்ற சமஸ்கிருதப் பெயரையே சூட்டினார்கள். சமஸ்கிருதத்துக்காக இந்தியா முழுதும் 17 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இதில் நடுவண் அரசே புதுடில்லியில் மட்டும் இரண்டு சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை நடத்துகிறது. ஒன்று 1962 இல் தொடங்கப்பட்ட “லால்பகதூர் சாஸ்திரி கேந்திய சமஸ்கிருத வித்யா பீடம்”; மற்றொன்று 1970 இல் தொடங்கப்பட்ட “இராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்த் தான்”. இந்திய அரசு சின்னத்தில் இலட்சினையாக பொறிக்கப்பட்டுள்ள ‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்)வும்கூட சமஸ்கிருதம்தான்.
“ஆதிக்கம் செலுத்த விரும்பும் எந்த ஒரு வர்க்கமும் தன்னையே
ஒரு தேசமாக்கிக் கொண்டு ஒரு தேசம் முழுமைக்கும் தனது ஆளுமைக்குட்பட்டதாகவே வெளிப்படுத்த விரும்பும்”
என்று கூறுகிறார், இத்தாலிய மார்க்சிய அறிஞரான கிராம்ஷி.
இதே கருத்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார்:
“ஆரியர்கள் இந்நாட்டில் என்று காலடி வைத்தார்களோ அன்று முதல் இன்று வரை, பலவித வஞ்சகங்களாலும், சூழ்ச்சிகளாலும் இந்நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களைச் சின்னாபின்னமாகப் பிரித்து, ஆபாசக் கற்பனைகளையும், நடத்தைகளையும், வேதமாகவும், மோட்ச சாதனமாகவும் ஆக்கி, இந்நாட்டு மக்களுக்கு அவர்களே ஆதிக்கக்காரர்களாகவும், ‘இகம்’, ‘பரம்’ இரண்டிற்கும் தர்மகர்த்தாக்களாகவும், சமுதாயம், அரசியல் இரண்டிற்கும் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், எஜமானர்களாகவும்கூடத் தங்களை ஆக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.” (‘குடிஅரசு’ 10.9.1949)
இன்றைக்கும் சமுதாயம் – அரசியல் இரண்டுக்கும் தாங்களே ‘எஜமானர்கள்’ என்பதை பார்ப்பனர்கள் வெளிப்படுத்துவதுதான் இந்த ‘சமஸ்கிருத வார’ அறிவிப்பு.
பெரியார் முழக்கம் 24072014 இதழ்