பெரியாரின் உருக்கமான கட்டுரை (2) விலக நினைக்கிறேன்; விலகுவதால் என்ன இலாபம்?
“ஆரம்பத்திலிருந்து இதுவரை முன்னாற் குறிப்பிட்ட கொள்கைகளில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக்கொண்டபடி நடந்து வந்திருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்டோம். ஆகவே, “குடிஅரசு” குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் இந்நாலாயிரத்து ஐந்நூறைக் கொண்டு நான் சந்தோஷமடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடையவில்லை. அன்றியும், எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர் களை ஏற்படுத்திக் கொடுத்தும் இனியும் இருநூற்றைம்பது சந்தாதாரர்களை ஒரு மாதத்தில் சேர்ப்பதாய் வாக்களித்த சிங்கப்பூர் நண்பர்களுக்கும், மற்றும் 250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எனது மன மார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டிலும், ஊர்கள் தோறும் “குடி அரசின்” வளர்ச்சியையும் பரவுதலையும் எம்மைவிட அதிக கவலை கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள், என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் “குடி அரசு”க்காக உழைத்து வந்ததற்கும், சந்தாதாரர் களைச் சேர்த்துக் கொடுத்ததற்காகவும் “குடி அரசு”க் கொள்கைகளைப் பரப்பப் பாடுபட்டதற்கும், நான் மனப்பூர்வமாய் நன்றி செலுத்துகிறேன். “குடி அரசு”க்கு இரண்டாவது வருடத்தில் நஷ்டமில்லை. முதல் வருடத்தின் நஷ்டம் அடைபட வேண்டும். ஆனால் இன்னமும் கொஞ்சம் நல்ல இதழில் இன்னும் நாலு பக்கம் அதிகப்படுத்த வேண்டும் என்கிற ஆவல் இருந்து வருகிறது. இக் காரியங்களுக்கு இப்போது ஆகும் செலவை விட இன்னமும் வருஷம் ஒன்றுக்கு 2000 ரூ. அதிகமாகச் செலவு பிடிக்கும். இனியும் கொஞ்சம் சந்தாதாரர்கள் அதிகமானால் இவைகளைச் செய்ய சௌகரிய மாயிருக்கும். இவ்வருஷம் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் அதிகமாய் இல்லை என்றே நினைக்கிறேன்.
பொதுவாக நமது பிரசங்கத்தினாலும் “குடிஅரசி”னாலும் நான் செய்து வந்த பிரசாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித்தேன், அரசியல் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதம் என்பதைக் கண்டித்தேன், மதத்தலைவர்கள் என்ப வர்களைக் கண்டித்தேன், மதச்சடங்கு என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; குருக்கள் என்பவர்களைக் கண்டித் திருக்கிறேன்; கோவில் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; சாமி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; வேதம் என்று சொல்வதைக் கண்டித்திருக்கிறேன்; சாஸ்திரம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; புராணம் என்பதைக் கண்டித் திருக்கிறேன்; பார்ப்பனீயம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; ஜாதி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன்; நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; பிரதிநிதிகள் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கிறேன்;
கல்வி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; சுயராஜ்யம் என்பதைக் கண்டித்திருக் கிறேன்; ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, சி. ராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கிறேன்; இன்னும் என்னென்னவற்றையோ யார் யாரையோ கண்டித்திருக்கிறேன், கோபம் வரும்படி வைதும் இருக்கிறேன்; எதைக் கண்டித்திருக்கிறேன், எதைக்கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும் வையவும் துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத்தகாத, வையத்தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது. இவைகளன்றி எனது வார்த்தைகளும், எழுத்துகளும், செய்கைகளும் தேசத் துரோகமென்றும், வகுப்புத் துவேஷமென்றும், பிராமணத் துவேசமென்றும், மான நஷ்டமென்றும், அவதூறு என்றும், ராஜதுரோகம் என்றும், ராஜத் துவேஷமென்றும், நாஸ்திக மென்றும், மத தூஷணை என்றும், சிலர் சொல்லவும் ஆத்திரப் படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேசபக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும் என்னை தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன். இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? சிலருக்காவது மன வருத்தத்தையும், அதிருப்தியையும் கொடுக்கத்தக்க காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? என்று நானே யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும், நாம் ஏன் இக்கவலையும் இவ்வளவு தொல்லையும் அடையவேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா? ஒரு தலைவராவது உதவியுண்டா? ஒரு தேச பக்தராவது உதவியுண்டா? இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல் இருக்கிறது என்பதாக நினைத்து விலகி விடலாமா என்று யோசிப்பதுமுண்டு. ஆனால் விலகுவதில் தான் என்ன லாபம்? ஏறக்குறைய நமது ஆயுள் காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ அய்ந்தோ அல்லது அதிகமாயிருந்தால் பத்து வயது காலமோ இருக்கலாம். இந்த கொஞ்ச காலத்தை ஏன் நமது மன சாட்சிக்கு விட்டு விடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்பதாகக் கருதி மறுபடியும் இதிலேயே உழன்று கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறில்லை. உண்மையில் நாம் முன் சொன்ன அரசியல் மத விஷயம் முதலியதுகளைக் கண்டிக்க நேரிட்டபோது உண்மையான அரசியல் மத இயல் இவைகளை நாம் கண்டிக் கவே இல்லை. எதைப் பார்த்தாலும் புரட்டும், பித்தலாட்டமும் பெயரைப் பார்த்து ஏமாறத் தகுந்ததாயிருக்கிறதே அல்லாமல் தத்துவங்கள் எல்லாம் நமக்கும் நமது நாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் கொஞ்சங் கூட ரிபேர் செய்வதற்கில்லாமல் அடியோடு அழித்து மறுபடியும் புதிதாய் உண்டாக்க வேண்டியதாகவே இருக்கிறது. நமது காலத்தில் இவை திருத்தப்பாடடையும் என்கின்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லா விட்டாலும் வேறு யாராவது மகாத்மாவைப் போன்ற மகான்கள் வந்தால் அவர்களுக்கு பக்குவம் செய்து வைத்திருக்கக் கூடாதா என்றும், அதுவும் முடியாவிட்டால் பலன் எப்படி யானாலும் கடமையைச் செய்ய வேண்டியதுதானே என்கிற முடிவும் கிடைக்கிறது. ஆகவே, இக்கஷ்டமானதும், மனதுக்கு இன்பத்தைக் கொடுக்கக்கூடுமானதுமான இக்காரியத்தில் இறங்கிவிட்டோம். உலகம் ஒப்புக் கொண்டாலும் சரி தள்ளிவிட்டாலும் சரி நமக்கு அதைப்பற்றி கவலையில்லை. நமது கடமையை எப்படி நாம் பிரதானமாய்க் கருதி இறங்கி இருக்கிறோமோ அது போலவே பொது ஜனங்களும், அதாவது இக்கடமையைச் சரி என்று எண்ணியவர்கள் தங்கள் தங்களது கடமையையும் எண்ணி அக்கடமையைச் செலுத்துவார்கள் என்று நம்புகிறோம்.
(குடிஅரசு, தலையங்கம் – 01.05.1927)
பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்