அப்பட்டமான மதவெறி!

ஒவ்வொரு ஆண்டும் சிவபக்தர்கள் டெல்லியில் இருந்து ஜூலை மாதத்தில் முதல் உத்தரப்பிரதேசம் வழியாக உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் இந்தப் பயணத்தை கான்வார் யாத்திரை என்று அழைக்கிறார்கள். இந்த பக்தர்கள் வசதிக்காக அவர்கள் செல்லும் வழியில் பலர் தற்காலிக உணவு மையம் அமைப்பது வழக்கம். இந்த முறை அப்படி உணவு கூடம் அமைப்பவர்கள் தங்கள் உரிமையாளரின் பெயர், முகவரி, செல்போன் ஆகியவற்றை கடைகளில் நன்றாக தெரியும்படி, கடை போர்டுகளில் எழுத வேண்டும் என்று உபி மாநிலம் முசாபர்நகர் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
பயணம் செல்லும் வழியில் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதனால் இயல்பாகவே இசுலாமியர்களின் கடைகளோ அல்லது, கடைகளில் பணிபுரிபவர்கள் இசுலாமியர்களாகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம். சிவபக்தர்கள் அத்தகைய கடைகளை தவிர்க்க வேண்டும் என்கிற உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட நோக்கத்தோடு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்தன. அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்டோர் மட்டுமின்றி, ஒன்றிய அரசில் அமைச்சராக இருக்கும் சிராக் பஸ்வான், கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார் போன்றோரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் சதிச்செயல் இதில் இருப்பதாக கண்டனங்கள் எழுந்தன. உத்திரப்பிரதேச அரசைப் பார்த்து, உத்தராகண்ட் அரசும் இந்த உத்தரவை விதித்தது.
இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உத்திரப்பிரதேசம், உத்தராகண்ட் மாநில அரசுகளின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தின் பெயரால் மதக்கலவரத்தை தூண்டும் பாஜக அரசின் சதி அம்பலமாகி, சாமியார் யோகி ஆதித்யநாத்தின் முகத்திரை கிழிந்திருக்கிறது.

பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

You may also like...