“கொள்கைக் களமான கோவை!”

கோவை மாநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 14.07.2024 அன்று கோவை ஆர்.எஸ்புரம், தடாகம் ரோட்டிலுள்ள திருமூர்த்தி லேஅவுட்டில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது.
இதற்கு கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமை தாங்கினார். பயிலரங்கின் நோக்கம் குறித்து மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் விளக்கிக் கூறி வரவேற்புரையாற்றினார்.
பயிலரங்கைத் தொடங்கி வைத்து கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார்.
தோழர்கள் அறிமுகத்திற்கு பின் “பார்ப்பனரல்லாதாரின் வளர்ச்சிக்கு வித்திட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” என்ற தலைப்பில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வகுப்புரிமை வரலாற்றையும் பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார் உரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராக திராவிடர் இயக்கம் செய்த பணிகளையும், உரிமைகளைக் கற்றுக்கொடுத்த தலைவர் களின் உறுதித் தன்மையையும் விரிவாக எடுத்துக் கூறினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பெரியாரியலாளர் சிற்பி இராசன் “மந்திரமல்ல தந்திரமே!” அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். சாமியார்களின் மோசடிகளையும் மக்களின் மூடநம்பிக்கைகளையும் விளக்கினார். அறிவியல் மனப்பான்மையோடு நாம் வாழப் பழகிட வேண்டும் என்பதை விளக்கினார்.
நிறைவாக “சுயமரியாதை இயக்கத்தின் தாக்கமும்; பெரியார் தொண்டர்களின் அர்ப்பணிப்பும்” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவரது உரை பெரியார் – சுயமரியாதை இயக்கம் – பெரியார் தொண்டர்களின் அர்ப்பணிப்புகள் குறித்து புதிய தோழர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் அமைந்தது.
தலைவர் உரைக்கு பின் கேள்வி பதில் நிகழ்வில் புதிய தோழர்கள் எழுதிக்கொடுத்த வினாக்களுக்கு விரிவாக பதில் அளித்தார்.
நிறைவாக பயிலரங்கில் பங்குபெற்ற தோழர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட செய்திகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
இயக்க தோழர்களின் அணுகு முறை சிறப்பாக செயல்பட்ட விதம் குறித்தும் மனநிறைவான பயிலரங்கமாக அமைந்ததாக பயிலரங்கில் கலந்து கொண்ட தோழர்கள் பாராட்டு தெரிவித்தனர். மாநகரச் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூற பயிலரங்கம் நிறைவு பெற்றது.
கோவை மாநகர் மாவட்டக் கழகத் தோழர்கள், கழக ஆதரவாளர்கள் என நாற்பது தோழர்கள் கலந்து கொண்ட பயிலரங்கம் கொள்கைக்களமாக மாற்றியது.
தோழர்கள் நிர்மல்குமார், வெங்கட், கிருஷ்ணன், ஸ்டாலின், மாதவன், சதீஸ் மற்றும் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
விடியல் பதிப்பகம் சௌந்தர் கட்டணம் ஏதுமின்றி தனது அரங்கத்தை வழங்கி பயிலரங்கம் வெற்றி பெற உதவினார்.
செய்தி:
சூலூர் இரா.பன்னீர்செல்வம்
மாவட்டச் செயலாளர், கோவை
திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 18.07.2024 இதழ்

You may also like...