ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்புக்கு அதிருப்தி!

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் ஜி.ஆர்.சாமிநாதன் மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் உடனே விசாரணைக்கு எடுத்ததாகக் கூறினார் ஜி.ஆர்.சாமிநாதன். அத்துடன் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்தார். நீதிபதி பாலாஜி குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யாததால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது.
“நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. காவல்துறைக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார். பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எந்தவொரு நபரும் நியாயமான விசாரணை இல்லாமல் தீர்ப்பளிக்கக்கூடாது என்பது சட்டக்கல்லூரிகளில் கற்பிக்கப்படும் முதல் பாடம்” என்று நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஒருதலைப்பட்சமாக உள்நோக்கத்தோடு ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு வழங்குகிறார் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக நீதிபதி ஜெயச்சந்திரனின் கருத்து அமைந்துள்ளது.

பெரியார் முழக்கம் 13.06.2024 இதழ்

You may also like...