சமூகப் போக்கைப் புரட்டிப்போட்ட ‘குடிஅரசு’ 100 ஆண்டுகள் ஆகியும் அடங்காத அதிர்வலைகள் – க. இரவிபாரதி

(சென்னை மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில், 19.05.2024 அன்று நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பில், காஞ்சிபுரம் மாவட்டக் கழக அமைப்பாளர் தோழர் இரவிபாரதி ‘தமிழ்ச் சூழலில் குடிஅரசு ஏற்படுத்திய அதிர்வலைகள்’ என்னும் தலைப்பில் ஆற்றிய உரை)
“நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் பத்திரிகை நடத்துவதை நிறுத்த மாட்டேன், ‘குடிஅரசை’ தொடர்ந்து வெளியிட்டு வருவேன். என் கருத்துக்களை எதிர்வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை” என்ற காத்திரமான எழுத்துக்களுடன் இதழியல் களத்திற்கு வந்தவர் பெரியார்.
லோகோபகாரி, தேசோபகாரி, தேசபிமானி, ஜனாநுகூலன், சுதேச அபிமானி’, சுதேசமித்திரன், மஹாராணி’, கலாதரங்கிணி இதெல்லாம் அந்தக் காலத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் பெயர்கள். இந்தப் பெயர்கள் எளிதில் உச்சரிக்கக்கூடியதாக இல்லை. பத்திரிகைகள் தமிழில் வந்தன, ஆனால் அதன் பெயர்கள் தமிழில் இல்லை. காரணம் அப்போது மேட்டுக்குடிகளிடம் மட்டுமே இதழியல் இருந்தது.
தமிழ் குடிகளுக்காக இதழ் நடத்த வேண்டும் என்ற எண்ணம் பெரியார் மனதில் நெடுங்காலமாக கனன்று கொண்டிருந்தது. 1924ல் கேரளாவில் வைக்கம் என்ற ஊரில், கோவில் இருக்கும் தெருவில் உழைக்கும் மக்கள் நடக்க திருவிதாங்கூர் அரசு தடை செய்திருந்த தீண்டாமை கொடுமையை எதிர்த்துப் போராடியதால் பெரியார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த போதுகூட பத்திரிகை நடத்த வேண்டும் என்ற எண்ண ஓட்டமே பெரியாரிடம் மேலோங்கி இருந்தது. வெளியே வந்த முதல் வேலையாக, பல நாட்களாக மனதில் உருத்திக் கொண்டிருந்த எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்தார்.
ஆம், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், இதழியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதிமறுப்பு, மத மறுப்பு, இன இழிவு நீக்கம், பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம், சுயமரியாதை, பகுத்தறிவு. பின்னாளில் இறைமறுப்பு, ஆதிக்க எதிர்ப்பு போன்ற சமத்துவ சமூக விடுதலைக் கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க கொள்கை ஏடான ‘குடிஅரசு’ இதழை பெரியார் 02-05-1925-இல் தொடங்கினார்.
ஆரியத்தை அலறவைத்த ‘குடிஅரசு’
குடி அரசு இதழின் நோக்கம் குறித்து முதல் இதழில் இப்படி எழுதினார். “நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காவும், அறிவு வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காவும், மொழி வளர்ச்சிக்காவும் இதன்மூலம் உழைத்துவருவோம். ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்துத் ‘தேசம், தேசம்’ என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. மக்களுள் தன்மதிப்பும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கிவளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்” என்று இதழின் நோக்கம் குறித்து தெளிவுபடுத்தினார்.
ஞாயிறுதோறும் வார இதழாக ‘குடிஅரசு’ வெளிவந்தது. ஆண்டு சந்தா 3 ரூபாய், மாத சந்தா 1 ரூபாய் 12 அணா, வெளிநாட்டு சந்தா 4 ரூபாய், திராவிட சங்கங்களுக்கு பாதி சந்தா என நிர்ணயித்து குடிஅரசு தனது பயணத்தை தொடங்கியது.
தமிழ் பத்தரிகை உலகம் இதற்கு முன் கேள்விப்படாத காத்திரமான சொற்களுடன் இதழியல் உலகில் செயற்கரிய செயல்களைச் செய்ய பெரியார் குடிஅரசை தொடங்கினார். தொடக்கத்தில் தனது நண்பர் வ.மு.தங்கபெருமாள் பிள்ளையுடன் இதழின் ஆசிரியர் பணியை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் ஆண்டில் தங்கபெருமாள் பிள்ளை பிணியால் அவதியுற 26.7.1925ஆம் நாளிட்ட இதழிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டு, ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்னும் பெயரே ஆசிரியரெனக் குறிக்கப்பட்டது.
25.12.1927ஆம் நாளிட்ட இதழிலிருந்து ஆசிரியர் பெயரில் இருந்த சாதிப்பெயர் நீக்கப்பட்டு ஈ.வெ.இராமசாமி என்று குறிப்பிடப்பட்டது. பெரியார் ஒரு பெரும் அறிஞர் படையை குடிஅரசில் எழுத வைத்தார். கைவல்ய சாமி, சந்திரசேகரப் பாவலர், ஈழத்துச் சிவானந்த அடிகள், சாமி சிதம்பரனார், பண்டித முத்துச்சாமி, கே.எம். பாலசுப்பிரமணியம், மா.சிங்காரவேலர், சீனி. வேங்கடசாமி முதலிய புலவர்களையும், ஆய்வுத்திறன் படைத்த கோவை அய்யாமுத்து, ஜனக சங்கர கண்ணப்பர், சா. குருசாமி, ப. ஜீவானந்தம் முதலிய அறிஞர்களின் முற்போக்குக் கட்டுரைகளையும் தாங்கி வந்தது குடிஅரசு. அத்தோடு பாரதிதாசன், எம்.ஆர்.மத்திரள், ஜீவானந்தம் ஆகியோரின் உணர்ச்சிப் பாக்களையும் பெற்று வெளியிட்டார்.
அறைகூவலாய் அமைந்த அவர்களின் படைப்புகள் ஆரிய வைதீகம் கோலோச்சிய அந்த காலத்தை அலற வைத்தன; தேசியங்களைத் திணறடித்தன. விளைவு, அன்றைக்கு முன்னணி பத்திரிகையாகத் திகழ்ந்த சுதேசமித்திரன் 2000 சந்தாதாரர்களை இழந்தது என்று, அன்றைய ‘திராவிடன்’ நாளிதழ் 07-05-1927-இல் எழுதியது. குடிஅரசின் விற்பனை வாரந்தோறும் 16,000 பிரதிகள் என்ற அளவில் அதிகரித்தது என்று குறிப்புகள் சொல்கின்றன.
குடிஅரசின் கண்ணியம்
3.09.1925 அன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நடைபெற்ற பாலியல் தொழிலாளிகள் கூட்டத்தை மிக கண்ணியத்துடன் ‘தேவதாசிகள் மாநாடு’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது குடிஅரசு பத்திரிகை. பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த மாநாட்டில் வைத்த கோரிக்கை, இனி இந்தத் தொழிலில் பெண் குழந்தைகளை ஈடுபடுத்த மாட்டோம் என அவர்கள் ஏற்ற உறுதிமொழியை, அதன் முக்கியத்துவம் கருதி பொது சமூகத்தின் கவனத்திற்கு செய்தியாகக் கொண்டு போய் சேர்தது குடிஅரசு ஏடு.

02-02-1929-இல் தேவதாசி முறை ஒழிப்பு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் முத்துலட்சுமி ரெட்டி. பழமைவாதிகள் அப்போது அந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியை விமர்சித்து ஒரு தலையங்கத்தை தீட்டினார் பெரியார். திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும், பொட்டுக் கட்டுவதை ஒழிக்கும்’ இந்த மசோதாவானது வெகுகாலமாகவே மக்கள் பிரதிநிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும், பொது மகாநாடுகளிலும், கண்டித்துப் பேசப்பட்டதுடன், இது மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி விவாதிக்கப்பட்டும் வந்திருக்கின்றது.
எப்படியாவது அடுத்த சட்டசபைக் கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறாமல் போகுமானால், சர்க்காரின் யோக்கியத்திலும், ஜஸ்டிஸ் கட்சியாரின் சுயமரியாதையிலும் தெருவில் போகின்றவனுக்குக்கூட மதிப்பும் நம்பிக்கையும் ‘இருக்காதென்றே சொல்வோம்” என்று காட்டமாக எழுதினார். பெரியார் நீதிக்கட்சியின் ஆதரவாளர்தான், ஆனால் அது தனது பாதையில் இருந்து விலகிப் போகும் போது அதைக் கண்டிக்கவும் அவர் தயங்கவில்லை. அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புநீரை மெச்சிக் கொள்ளவில்லை. இந்த தலையங்கம் வெளியான சில மாதங்களிலேயே, 1930-இல் தேவதாசிகள் ஒழிப்பு சட்டம் சென்னை மாகாண சட்டசபையில் நிறைவேறியது.
எதிரிகளும் தவிர்க்க முடியாது!
20-01-1935 இதழிலிருந்து தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார் பெரியார். அந்த இதழின் தலையங்கத்தில் இப்படி எழுதினார்:
“தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகு காலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாக இருந்தாலும் எவரும் தைரியமாய் முன்வராமலே இருக்கிறார்கள் “இவ்வளவு பெரிய காரியத்திற்கு பாஷா ஞானம், இலக்கண ஞானம், பொதுக் கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம், ஆனால் தகுந்த புலமையும், பாஷா ஞானமும், இலக்கண அறிவும் உள்ள எவரும் முயற்சிக்காவிட்டால் என்ன செய்வது? தவம் செய்வதா? அல்லது ஜெபம் செய்வதா?” என்று கேள்வி கேட்டு துணிச்சலாக எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டார் பெரியார்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கியபோது அதை எதிர்த்து, விமர்சித்தவர்கள் இன்று பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.
“பெண்கள் பிள்ளை பெரும் எந்திரங்கள் அல்ல; அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையே அவர்கள் பிள்ளை பெறுவது தான்! ஆகவே அதனை கொஞ்ச காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். மத சம்பிரதாயமோ, கடவுள் சம்பிரதாயமோ, புராண சம்பிரதாயமோ, எது பெண் விடுதலைக்கு விரோதமாக இருந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டியதுதான்” என்று எழுதி தமிழ்நாட்டில் அதிர்வை ஏற்படுத்தியது குடிஅரசு.
குடிஅரசு மீது வழக்கு
29-10-1933 அன்று இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் ஏன்? என்று தலையங்கம் எழுதியதற்காக ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு பெரியார் கைது செய்யப்பட்டார். அவருக்கு 300 ரூபாய் தண்டமும், மூன்று மாதம் வெறுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
குடிஅரசின் வெளியிட்டாளரான பெரியாரின் தங்கை கண்ணம்மாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ‘குடிஅரசு’ தடுக்கப்பட்டால் புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று ‘புரட்சி’ என்ற பத்திரிகை தொடங்கினார். பகுத்தறிவு என்ற இதழையும் தொடங்கினார். அதாவது என்னை நீங்கள் முடக்க நினைத்தால் பெயரை மாற்றுவேன், இடத்தை மாற்றுவேன், ஆனால் ஒருபோதும் பத்திரிகை நடத்துவதை நிறுத்த மாட்டேன் என்றார் பெரியார்.
வாழ்க ‘குடிஅரசு’

பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

You may also like...