குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் குருவரெட்டியூர் தோழர் நாத்திகசோதி அவர்களின் இணையர் தோழர் மகேஸ்வரி அவர்கள் 13.03.2024 காலை மறைவுற்றார். அவரது கண்கள் ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
திராவிடர் விடுதலைக் கழக பெண் தோழர்கள் மறைந்த அம்மையாரின் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர்.
இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது, சுடுகாடு வரை பெண்கள் வர கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து. மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வு குருவரெட்டியூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக, மாநில மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக மறைந்த தோழர் மகேஸ்வரி அவர்களின் பட திறப்பும் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. கழக மாநில பொறுப்பாளர்கள் இரங்கல் உரையாற்றினார்கள். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பல்வேறு நினைவுகளை பகிர்ந்ததோடு பெரியார் இயக்கத்தின் பண்புகளை விளக்கி இரங்கல் உரையாற்றினார்.
முடிவில் தோழர் நாத்திக சோதி அவர்கள் தன் நினைவுகளை பகிர்ந்து கலந்து கொண்ட தோழர்களுக்கு நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 21032024 இதழ்