அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு கழகம் கண்டனம்!

தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்துகொண்டு திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடியே இராமன் தான் என்று பேசியுள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுகிற சமத்துவம் – சமூகநீதிக் கொள்கையை அன்றைக்கே பேசியவர் இராமன். எனவே இராமன் தான் திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடியாக திகழ்கிறார் என்று பேசியுள்ளார்.
இந்த பேச்சு மிகவும் அதிர்ச்சிகரமான, திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களையே சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மிகவும் அபத்தமான மனுவாத சிந்தனைகளை விதைக்கக் கூடிய ஒரு பார்ப்பன உரை என்றுதான் இவரது பேச்சைக் குறிப்பிட வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சிக்கும் இராமாயணத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஆரியத்தை எதிர்த்து தான் திராவிடமே வந்தது. ஆரியம் கொண்டாடுகிற காவியங்களில் ஒன்று இராமாயணம். அதனால் தான் இந்துத்துவா சக்திகள் இராமனை தேசிய நாயகனாக மாற்றத் துடிக்கிறார்கள். இந்துத்துவா, பார்ப்பனிய சக்திகளுக்கு இராமன் தேசிய நாயகன். ஆனால் திராவிட மாடல் அரசுக்கும் இராமன் தேசிய நாயகனா? அப்படி பேசுகிற ஒருவர் திராவிட மாடல் அமைச்சரவையில் அமைச்சராக நீடிக்கலாமா? என்ற கேள்வியையும் நாம் வேதனையுடன் கேட்க வேண்டி இருக்கிறது.
பெரியார் இராமாயணத்தை எதிர்த்துக் கடுமையானப் பரப்புரைகளை மேற்கொண்டார். திராவிட இன மக்களை அது இழிவுபடுத்துகிறது என்று வீதிதோறும் முழங்கினார். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, விவேகானந்தர் ஆகியோர் இராமாயணத்தைக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். பெரியார் இராமன் படத்தை எரித்தார். அண்ணா, கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகியவை எரிக்கப்பட வேண்டும் என்று ரா.பி.சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதி ஆகியோருடன் நேருக்கு நேர் வாதிட்டார்.
இராவணன் ஒரு “இரக்கமில்லாத அரக்கன்” என்று கம்பன் எழுதிய போது இராவணன் கம்பனைக் கூண்டில் ஏற்றி கேள்வி கேட்கின்ற நாடகத்தை “நீதி தேவன் மயக்கம்” என்ற பெயரில் உருவாக்கினார்அண்ணா. கம்பராமாயணத்தின் ஆபாசங்களை “கம்பரசம்” என்ற பெயரில் அம்பலப்படுத்தினார்.
இராஜகோபாலாச்சாரி கம்பனை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடினார். பிராமணர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் இராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று கூறினார். அரசியலில் தோல்வியடைந்த இராஜகோபாலாச்சாரி, கல்கியில் இராமனைப் புகழ்ந்து தொடர் கட்டுரைகளை எழுதினார். அதற்கு பதிலடி தரும் விதமாக மூகாஜி என்ற பெயரில் முரசொலியில் கட்டுரைகளைத் தீட்டினார் கலைஞர்.
இராமாயணம் என்ன கூறுகிறது? சம்பூகன் ஒரு சூத்திரன். அவன் இடைத்தரகர்களான பிராமணர்களை ஒதுக்கி வைத்துவிட்டு நேரடியாக கடவுளை நோக்கி தலைகீழாகத் தொங்கி தவம் செய்தான் என்பதற்காக பிராமணர்கள் இராமனிடன் சென்று இராமா! இராமராஜ்ஜிய ஆட்சியில் பிராமணர்கள் செய்ய வேண்டிய தவத்தை சூத்திரன் செய்கிறானே இது நியாயம் தானா? இதனால் அக்ரகாரத்தில் உள்ள ஒரு வீட்டில் பிராமணக் குழந்தை ஒன்று இறந்துவிட்டது என்று சொன்னவுடன், நேரடியாக வாளை எடுத்துக்கொண்டு சூத்திரனான சம்பூகனை கண்டங்கண்டமாக வெட்டிவிடுகிறான் இராமன் என்று இராமாயணம் கூறுகிறது.
காட்டில் இருந்து திரும்பிய பிறகு அவன் செய்த முதல் நிகழ்வு இதுதான். சூத்திரன் தலை கீழே விழுந்தவுடன் பிராமணக் குழந்தை உயிர் பிழைத்துக் கொண்டது என்று அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இராமன் அயோத்தியில் இருந்து காட்டிற்குப் புறப்படும் சமயம், தன்னிடம் இருக்கிற பணத்தையும், நகைகளையும், சொத்துக்களையும் பார்ப்பனர்களிடம் கொடுத்துவிட்டுத்தான் காட்டிற்கு சென்றான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. பரதன் தன்னை சந்திக்க வந்த போது, பரதா! தன்னுடைய ஆட்சியில் பிராமணர்கள் சௌக்கியமாக உள்ளனரா? அவர்களைப் பகைத்துவிடாதே! அவர்களுடைய சாபம் நம்மை கெடுத்துவிடும் என்று அவர்களைப் பற்றியே விசாரித்தான் இராமன். ஆனால் மக்களைப் பற்றி விசாரிக்கவே இல்லை.
இன்னும் சொல்லப்போனால் திருமாலை விட, சிவ பெருமானை விட, பஞ்ச பூதத்தை விட, உண்மையை விட பிராமணர்களைத்தான் நாம் போற்ற வேண்டும் என்று கம்பர் அயோத்தியா காண்டத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் பாடல்களும் இருக்கிறது.
இந்துத்துவா மாடல் இராமனை தேசிய நாயகனாக்குகிறது. ஆனால் திராவிட மாடல் ஆட்சிக்கும் இராமன் தான் முன்னோடி என்று ஒரு அமைச்சர் பேசுகிறார். ஒருவேளை அவர் ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா இராமனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று சொன்ன கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு திமுகவில் அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு இந்துத்துவா கொள்கைகளை திராவிட இயக்க கொள்கைகளாக பேசிக்கொண்டிருக்கிருப்பது மிகவும் ஆபத்தான போக்கு.
தமிழ்நாடு முதலமைச்சர் இப்படிப்பட்ட பேச்சுக்களின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை அடித்தளம், அதன் அடையாளம் அடியோடு அழிந்துவிடும் அபாயம் உள்ளது என்பதை கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம்.
விடுதலை இராசேந்திரன்
கழகப் பொதுச்செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

You may also like...