எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

ஜனவரி: பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என குறிப்பிட மறுத்தது, தமிழ்நாடு அரசின் இலச்சினையை பயன்படுத்த மறுத்தது,  பின்னர் எதிர்ப்புகளுக்கு அடிபணிந்தது என ஆளுநரின் அதிகார மீறல்களோடுதான் 2023 தொடங்கியது. சட்டப்பேரவையில் ஜனவரி 9-ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என்.ரவி, சில முக்கியப் பகுதிகளை வெட்டியும் ஒட்டியும் திரித்தும் வாசித்தார். திராவிட மாடல், சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், காமாராசர் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அரசு தயாரித்த உரைதான் பதிவேட்டில் இடம்பெறும் என முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்ததால், வேறு வழியின்றி சட்டமன்றத்தை விட்டு ஓட்டம்பிடித்தார் ஆர்.என். ரவி. ஆணவம் பிடித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மேட்டூர், சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கழகத்தின் சார்பில் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஜனவரி 13-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மாவட்டக் கழகம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி அவர்கள், “அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்” என்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் அவர்களின் நூலை வெளியிட்டார். மிகச் சிறப்பான அட்டைப் படத்தோடு, மிகக் குறுகிய காலத்தில் இந்நூலை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி பேசும்போது பாராட்டினார்.

சென்னை புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என அறிவித்தார். அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பெரியாருடைய எழுத்துக்களும் சிந்தனைகளும் உலகம் முழுவதும் பரவ வேண்டுமென்பதற்காக, குடி அரசு இதழை 28 தொகுதிகளாக வெளியிட்டு, அதற்கான சட்டப் போராட்டங்களையும் நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். அந்தவகையில் கழகத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பாக முதலமைச்சரின் பேச்சு அமைந்தது.

ஜனவரி 28-ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர் மாவட்டக் கழகங்கள் சார்பில் “காந்தி முதல் கவுரி லங்கேஷ்” வரை என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆகியோர் கருத்துரையாற்றினர்.

காரைக்குடியில் கழகத் தோழர் இளங்கோவன் புதிதாகக் கட்டிய தனது இல்ல வளாகத்திற்குள் மார்பளவு பெரியார் சிலை நிறுவினார். சிலை திறக்கப்படுவதற்கு முன்பே, வருவாய்த்துறை- காவல்துறை திரண்டு வந்து ஜனவரி 29-ஆம் தேதி சிலையை அகற்றினர். எச்.ராஜாவின் பண்ணை இல்லம் அருகில் இருந்ததால், பா.ஜ.க-வினர் முறையீட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டது. செய்தி அறிந்தவுடன் அமைச்சர் உதயநிதி, கழகத் தலைவரை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். அதன்படி மீண்டும் அந்த இடத்தில் பெரியார் சிலை வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

 

பிப்ரவரி : 02.02.2023 அன்று சேலம் திருமலைகிரி கோயிலுக்குள் ஜாதி பேதமின்றி அனைத்து இந்துக்களையும் வழிபட அனுமதிக்கக்கோரி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

05.02.2023 அன்று ஈரோடு பிரியாணிபாளையத்தில் “பெண்கள் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.

06.02.2023 அன்று சென்னை மந்தைவெளி பகுதியில் “காந்தி படுகொலை நாள்” பொதுக்கூட்டம் நடைபெற்றது. பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையாற்றினார்.

சேலம் ஏ.வி.எஸ். கல்லூரியின் விசுவல் கம்யூனிகேசன் துறையானது ஊடகம் மற்றும் சமூக அறிவியல் மையத்தோடு இணைந்து, “பராசக்தி திரைப்படம் –வாசிப்பு மற்றும் மீள் வாசிப்பு” என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு நடத்தியது. 10.02.2023 அன்று அந்த மாநாட்டில் கலந்துகொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ”பராசக்தி திரைப்படத்தின் சமூக நீதிக் கருத்துக்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

15.02.2023 அன்று சென்னை தலைமை அலுவலகத்தில் கழகத்தின் தலைமைக் குழு கூடியது. ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் சேலத்தில் மாநில மாநாடு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. இது தோழர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

18.02.2023 அன்று “1929 சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும்” என்ற தலைப்பில் கோவையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.

மார்ச்: வயலூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறையால் நிர்ணயம் செய்யப்பட்ட 2 பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். இதனைக் கண்டித்து மார்ச் 9 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

11.03.2023 அன்று கள்ளக்குறிச்சி நைனார்பாளையத்தில் “பறிபோகும் மாநில உரிமைகள்” பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

12.03.2023 அன்று மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை ஒட்டி தலைமை அலுவலகத்தில் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏப்ரல்: 29, 30 ஆகிய 2 நாட்கள் சேலத்தில் ”இது தமிழ்நாடு- இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அரங்க நிகழ்வுகளில் தருமபுரி எம்.பி. செந்தில்குமார், மருத்துவர் எழிலன் (ச.ம.உ), பேராசிரியர் ஜெயராமன், மதுக்கூர் ராமலிங்கம், முனைவர் சுந்தரவள்ளி, மருத்துவர் ரவீந்திரநாத், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், புலவர் செந்தலை கவுதமன், பொழிலன், மருத்துவர் தாயப்பன், பேராசிரியர் மணிகோ. பன்னீர்செல்வம் ஆகியோர் செறிவான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். கழகத் தோழர்களின் உரையும் பரவலாக பாராட்டைப் பெற்றது. குறும்படங்கள், கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள் வரவேற்பைப் பெற்றன.

2-வது நாள் மாலையில் நடந்த பேரணி மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இறுதியாக நடந்த பொதுவெளி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று ஆற்றிய சிறப்புரை முக்கியத்துவம் பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்டோரும் சிறப்புரையாற்றினர். மாநாட்டு மேடையில் தோழர்கள் காயத்ரி- எழிலரசன் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் திரண்டு, 2 நாள் மாநாட்டை மிகப்பெரிய வெற்றியடையச் செய்தனர்.

மே: கொடைக்கானலில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திண்டுக்கல் மாவட்டக் கழகம் சார்பில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

21.05.2023 அன்று சேலத்தில் கழகத்தின் செயலவைக் கூடியது. தமிழ்நாடு முழுவதும் “எது திராவிடம்? எது சனாதனம்?” என்ற தலைப்பில் 1,000 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் கிராமங்களை பட்டியலெடுக்க தோழர்களுக்கு உத்தவிடப்பட்டது.

ஜூன்: விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தீண்டாமை கணக்கெடுப்பு பணி ஈரோடு, கோவை, சேலம் மாவட்டங்களில் தொடங்கியது. திருப்பூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கின.

தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் சுமப்பதைத் தடை செய்யக்கோரி தோழமை அமைப்புகளோடு இணைந்து மயிலாடுதுறையில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

24.06.2023 அன்று சேலம் மாநாட்டு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திமுக ராஜீவ் காந்தி பங்கேற்றனர்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், சனாதன பரப்புரையாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரக்கூடாது என 28.06.2023 அன்று சேலத்தில் கழகத் தலைவர் தலைமையில் கருப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஜூலை: 01.07.2023 அன்று மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

சேலம், சென்னை, தஞ்சை, ஈரோடு மாவட்டங்களில்  “எது திராவிடம்? எது சனாதனம்” தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கப்பட்டு எழுச்சியோடு நடைபெற்றன. “திராவிடர் விடுதலைக் கழகத்தின் இம்முயற்சி மக்கள் மனதில் கொள்கைகளைப் பாய்ச்சும் சிறந்த பாய்ச்சல்” என முரசொலி ஏடு பாராட்டியது.

மணிப்பூரில் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய பாஜக அரசைக் கண்டித்து சேலம் மாவட்டம் கொளத்தூரில் 23.07.2023 அன்று தோழமை அமைப்புகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 29.07.2023 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஆகஸ்ட்: கழகத்தின் 12-ஆம் ஆண்டு தொடக்க நாளையொட்டி 12.08.2023 அன்று மேட்டூரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய பாஜக அரசை கண்டித்து 10.08.2023 அன்று கடலூரில் ஆர்ப்பாட்டம்.

நாங்குநேரியில் தலித் மாணவர் மற்றும் அவரது சகோதரியை வீடு புகுந்து வெட்டிய ஆதிக்க ஜாதி மாணவர்களின் செயலைக் கண்டித்து மதுரை வனவாசியில் 17.08.2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் திமுகவின் மருத்துவ- மாணவர்- இளைஞர் அணிகள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்த போராட்டத்தில் கழகத் தலைவர் கலந்துகொண்டு நீட் தேர்வு திணிக்கப்பட்ட சதி வரலாறுகளை சுட்டிக்காட்டினார்.

18.02.2023 அன்று கோவையில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர்: திண்டுக்கல்லில் மதர் தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

17.09.2023 அன்று பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் “எது திராவிடம்? எது சனாதனம்” 100-வது கூட்டம் நடைபெற்றது. விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் திருமாவளவன் பங்கேற்று சிறப்பித்தார். சனாதனத்திற்கு எதிரான யுத்தம், EWS இடஒதுக்கீடு- 68 ஆண்டுகளுக்குப் பிறகு வஞ்சம் தீர்த்த பார்ப்பனர்கள் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

25.09.2023 அன்று தஞ்சையில் பெரியார் பிறந்தநாள்- வைக்கம் நூற்றாண்டு- கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சை, தருமபுரி, கரூர், ஈரோடு, கோவை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பரப்புரை கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றன.

அக்டோபர்:  சேலம் வனவாசியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் சட்ட விரோதமாக நிறுவப்பட்ட பிள்ளையார் சிலை கழகத் தோழர்களின் முயற்சியால் 03.10.2023 அன்று அகற்றப்பட்டது.

07.10.2023 அன்று சென்னை வில்லிவாக்கத்தில் திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

08.10.2023 அன்று திண்டுக்கல்லில் “எது திராவிடம்? எது சனாதனம்” 100-வது கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி பங்கேற்று உரையாற்றினர்.

21.10.2023 அன்று “நீட் விலக்கு நம் இலக்கு” கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கியது. தருமபுரியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

நவம்பர்: கலைஞர் நூற்றாண்டை ஒட்டி கோவை மாநகரில் 10 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நிறைவாக 04.11.2023 அன்று கவுண்டம்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சென்னையில் “எது திராவிடம்? எது சனாதனம்” 2-ஆம் கட்ட தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கப்பட்டன.

26.11.2023 அன்று கழகத்தின் சார்பில் சென்னை, கோவை, கோபி, ஈரோடு தெற்கு, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சட்ட எரிப்புப் போராளிகளை நினைவுகூறும் வீரவணக்க நாள் நிகழ்வுகள் கடைபிடிக்கப்பட்டன.

 

27.11.2023 அன்று மேட்டூர் அருகே விடுதலைப் புலிகள் 3 ஆண்டுகள் இராணுவப் பயிற்சி எடுத்த புலியூரில் கழகத்தின் சார்பில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வழக்கறிஞர் இரத்தினம் பங்கேற்றார். மதுரையிலும் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.

டிசம்பர்: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் கணேசபுரம், ரூதர்புரம், சைவ முத்தையா தெரு, செல்லம்மாள் தோட்டம், சத்தியவாணி முத்து நகர், சுப்புராயன் சாலை, விசாலாட்சி தோட்டம், கணேசபுரம், முண்டககன்னியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் கழகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

10.12.2023 அன்று மதுரையில் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. வீரஞ் செறிந்த போராட்ட வரலாற்றை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றினார்.

பெரியாரின் 50-வது நினைவுநாளை ஒட்டி 20.12.2023 அன்று சென்னை புரசைவாக்கத்திலும், 23.12.2023 அன்று சேலம் கொளத்தூரிலும், 24.12.2023 அன்று ஈரோடு குருவரெட்டியூரிலும், 31.12.2023 அன்று புவனகிரியிலும் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தொகுப்பு : ர.பிரகாசு

பெரியார் முழக்கம் 04.1.2024 இதழ்

You may also like...