நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

சென்னை மேற்கு மாம்பலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014-2023 வரை ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு வழங்கிய வரி ரூ.6.23 இலட்சம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.6.96 கோடி. தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட கூடுதலான நிதியினை நாங்கள் வழங்கிவருகிறோம் என்று உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளார். அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு, கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை, நிறைவேற்றவே முடியாது என்று எதிரிகளால் விமர்சிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசாக ரூ.1000 என ஒன்றிய அரசின் எந்தவித ஒத்துழைப்புமின்றி தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனது திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

 

ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்தில் இருந்து வரியாக பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசாவை மட்டுமே திரும்ப வழங்குகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வரியை விட கூடுதல் நிதியை ஒதுக்குகிறது ஒன்றிய பாஜக அரசு. உதாரணமாக 2014 – 2015ம் ஆண்டு முதல் 2022 – 2023ம் ஆண்டு வரை பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலம் ரூ.2.23 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு வரி கொடுத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு உத்தர பிரதேசத்துக்கு ரூ.15.35 லட்சம் கோடியை திரும்ப வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.72,000 கொடுக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ரூ.1.68 லட்சம் கொடுக்கிறது. அதேபோல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.1,50 லட்சம் கொடுக்கிறது. ஆனால், தமிழக அரசு ரூ.7 லட்சம் தருகிறது.

மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.6000 வழங்கியுள்ளது. ரூ.63,246 கோடி செலவில் நடைபெற்றுவரும் சென்னை மெட்ரோ 2வது கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு தனது பங்களிப்பாக 50 விழுக்காடு நிதியினை வழங்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் நிதி கூட ஒதுக்கவில்லை, முழுவதும் தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்றுவருகிறது.

ஒன்றிய அரசிடம் கூடுதல் நிதியினைப் பெறும் பாஜக ஆளும் மாநிலங்கள், தொழில்வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு, நகர்ப்புற கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் இன்றுவரை பின்தங்கியே உள்ளது. ஆனால் ஒன்றிய அரசின் எந்தவித ஆதரவும் இல்லாமல் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழ்கிறது ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு!

பெரியார் முழக்கம் 11012024 இதழ்

You may also like...