28. உண்மை வெளியாய்விட்டது

என் கைக்கு அதிகாரம் வந்தால் நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை (இந்தியை மாத்திரமல்லாமல்) சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன்.

என தோழர் எஸ்.சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் சென்னை லயோலா காலேஜில் மாணவர்கள் கூட்டத்தில் பேசும்போது திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

அதோடு நிற்காமல் அவர் அதே சமயத்தில் சர்க்கார் உத்தியோகங்களுக்கும் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் ஏற்படுத்தி விடுவேன். என்று கூறி இருக்கிறார். இவ்வளவோடு அவர் திருப்தியடைந்தாரா? இல்லை இல்லை.

காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இந்தியாவில் ராமராஜ்ய மேற்பட்டு விடவேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன் என்றும் பேசி இருக்கிறார். ஏனென்றால் மக்கள் சமஸ்கிருதம் படித்தால் பிறகு ராமராஜ்யம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்பது அவரது நம்பிக்கை. உண்மையும் அதுதான். ஆங்கிலம் படித்ததால் ஆங்கில நாகரிகம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுவதுபோல் ஆரியம் படித்தால் ஆரிய நாகரிகம் தானாகவே ஏற்பட்டு விடுமல்லவா? ராமராஜ்யம் என்பது ஆரிய நாகரிகம்தானே. அதனால் அவர் சமஸ்கிருதம் கட்டாயப்பாடமாக்கப்பட்டவுடன் ராமராஜ்யத்திற்கு வியாக்கியானம் சொல்ல ஆரம்பித்த ராமராஜ்ய மென்பது வர்ணாச்சிரமமுறைப்படி ஒவ்வொருவனும் அவனவன் ஜாதி தர்மப்படி நடந்துகொள்ள வேண்டியது தான் என்று ராமர்காலத்தில் மக்கள் இந்த வருணாச்சிரம முறைப்படியே அதாவது பிராணமணன்  க்ஷத்திரியன் வைசியன் சூத்திரன் எனப் பிரிக்கப்பட்டு அவனவனுக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மங்களை அவனவன் செய்து கொண்டு திருப்தியாய் இருந்தானென்றால் அதனால் யார் மீதும் யாரும் வருத்தப்படவில்லை என்றும் யாருக்கும் கெடுதி ஏற்பட்டு விடவில்லை என்றும் சொல்லுகிறார்.

மேலும் அவர் பேசும்போது ஒரு திராவிட கவியாகிய கம்பர் இதை ஒப்புக்கொண்டு தமிழில் மொழியெர்த்து இருக்கிறார் என்பதாகவும் சொல்லி தமிழ் மக்களை அந்த ராமராஜ்யத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

(இது 25ந்தேதி மெயில் பத்திரிகையில் வெளியாயிருக்கிறது)

நமது கருத்து

எனவே பார்ப்பன ஆட்சி நமக்கு கூடவே கூடாது என்றும் ராமராஜ்யம் என்னும் ஆரிய வருணாச்சிரம ராஜ்யம் நமக்கு கூடவே கூடாது என்றும் நாம் சொல்லி வந்ததின் கருத்து என்ன என்பது இப்போதாவது உண்மைத் தமிழர்களுக்கு விளங்கி இருக்குமென்று கருதுகிறோம்.

பிராமணன் க்ஷத்திரியன் வைசியன் சூத்திரன் என்ற 4 ஜாதிகளுக்கும் குறித்திருக்கும் யோக்கியதையும் விதித்திருக்கும் கடமையும் யாரும் அறியாததல்ல என்பதோடு பார்ப்பனர் ஒழிந்த மற்ற வகுப்பு மக்கள் எல்லோரும் சூத்திரன் என்ற தலைப்பில்தான் வருகிறார்கள் என்பதை நாம் சொல்லி யாரும் அறிந்துகொள்ள வேண்டிய நிலையில் இல்லை.

நிற்க, இந்தி பாஷை என்றும் அது சமஸ்கிருதத்தின் மற்றொரு ரூபம் என்றும் அப்பாஷை களாலான வேதம், சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணம் இதிகாசம் ஆகியவைகள் தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாகய் புகுத்தப்படுவதன் மூலம் பரப்பப்பட்டு செல்வாக்கு பெறப்படுமானால் தமிழ் மக்களின் சுதந்திரத்தன்மை வாய்ந்த தமிழும் தமிழ்க் கலைகளும் அழிய நேரிடுவதோடு தமிழரின் சுதந்திரமும் தன் மானமும் அடியோடு இழக்க நேரிட்டு தமிழர்கள் ஆரியர்களுக்கு பரம்பரை அடிமையாக இருக்க நேரிட்டு விடுமென்று கருதியே நாம் இந்தியை எதிர்க்கிறோம் என்று பலதடவை சொல்லி வந்திருக்கிறோம். இதை பார்ப்பனர்களுக்கு அடிமையான பல தமிழ் மக்கள் அதாவது பார்ப்பன கலைகளை நம்பி அதற்கு தகுந்தபடி தங்களை ஆக்கிக்கொண்ட தமிழர்களும் – அப்படி ? எண்ணிக்கொண்டவர்களுமான தமிழர்களும் இந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது என்று தமிழ் கலை அழியாது ஒழியாது என்றும் தமிழனின் தன் மானத்துக்கும் சுதந்திரத்துக்கும் கேடுவராது என்றும் சொல்லி எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த எதிர் பிரச்சாரம் செய்பவர்கள் தாங்கள் யார் தாங்கள் எந்நிலையிலிருக்கிறோம், தங்களுக்கு இப்போது எம்மாதிரி சுதந்தரிரமும் மான உணர்ச்சியும் இருக்கின்றன என்று எண்ணிப் பார்ப்பார்களே யானால், நாம் சொல்வது சரியோ தாங்கள்மறுப்பது சரியோ என்பது அவர்களுக்கே நன்கு விளங்கிவிடும்.

எவ்வளவு கேவலமாகக் கருதிக்கொண்டிருக்கிறார்?

இந்தியின் நிலையே இப்படி இருக்கும்போது இந்தியர்களுக்கு இந்தி மாத்திரமே போதாது இது ஆச்சாரியார் பங்குக்கு சரியாய் போய்விட்டது; இனி என்பங்குக்கு சமஸ்கிருதம் கட்டாய பாடமாக்க வேண்டும். நான் சர்வாதிகாரி ஆன உடன் அதைத்தான் செய்யப் போகிறேன் அப்போது தான் ராமராஜ்யம் சீக்கிரத்தில் ஏற்படுத்த முடியும் என்ற தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் சொல்வாரே யானால் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இவர் எவ்வளவு கேவலமாய் கரதிக்கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லையா? என்று கேட்கின்றோம்.

இந்திய நாட்டில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் இந்திய நாட்டில் சமஸ்கிருதம் எத்தனை மக்கள் படிக்கிறார்கள் என்றும், சமஸ்கிருதத்தினால் இந்திய நாட்டில் எத்தகைய மக்களுக்கு மாத்திரம் உயர்வு கிடைக்கும் என்றும் இதனால் மக்களின் வாழ்வுக்கோ ஒழுக்கத்திற்கோ, வீரத்திற்கோ, மானத்திற்கோ ஏதாவது பயன் உண்டா? என்றும் ஆலோசிப்போமேயானால் சமஸ்கிருதம் பேசுகிறவர்கள் 1000-ல் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள் என்பது அதனால் மேன்மை அடைகிறவர்கள் 100-க்கு 3 பேர்களுக்கும் குறைவானவர்களாகவே இருப்பார்கள் என்பதும் அது பார்ப்பனர் தவிர மற்றவர்களை மிருகத்திலும் கேடான தன்மையில் இழிவு படுத்துவது என்பதும் தெள்ளென விளங்கிவிடும்.

எனவே இப்படிப்பட்ட ஒரு அவசியமில்லாததும் கேடுதரக்கூடுயடிதும் செத்துப்பட்டுப் போனதும் யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் உயர்வளிக்கக்கூடியதாய் இருக்கிற ஒரு பாஷையை தனக்கு சர்வாதிகாரம் ஏற்பட்டால் தமிழ்நாடில் தமிழ் மக்களுக்கு கட்டாய பாடமாக ஆக்குவேன் என்று சொல்லுவாரே யானால் இதிலிருந்து தோழர் சத்தியமூர்த்தி அவர்களை மகா தைரியசாலி என்று சொல்லுவதா -அல்லது இதை கேட்டுக்கொண்டிருக்கிற தமிழ் மக்களை தோழர் சத்தியமூர்த்தி சொல்லுவதுபோல் உண்மையான சூத்திரத்தன்மை பொருந்திய இழிகுலமக்கள் என்று சொல்லுவதா? என்பது நமக்கு விளங்கவில்லை.

எப்படி பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள்?

பாஷையாலும் கலையாலும் இயற்கையாலும் வீரம் பொருந்திய சுதந்திரமுள்ள தன் மானக்காரர்காகிய தமிழ் மக்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற ஒரு கூட்டத்தார் இதை எப்படி பொறுத்துக்கொண்டு சத்திய மூர்த்தி அய்யருக்கு பூர்ண ஆதிக்கம் வரும்படியான சுயராஜ்யத்துக்கு எப்படி பாடுபடத் துணிகிறார்கள் என்பதும் அவர் பின்னால் சூத்திரர்களாய் திரிந்து வயிறு வளர்க்கிறார்கள் என்பதும் நமக்கு மிக மிக அதிசயமாக இருக்கிறது.

எந்த முறையில் இந்நாட்டில் சமஸ்கிருதம் புகுத்தப்பட்டாலும் அது கண்டிப்பாக தமிழ் மக்களுக்கு கேட்டையும் இழிவையுமே உண்டாக்குமென்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம்.

சமஸ்கிருத புராணங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்காவிட்டால்? நமது பண்டிதர்கள் அந்தப் புராணங்களை தமிழர்களின் இடையில் பிரச்சாரம் செய்து ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கா விட்டால் தமிழ் நாட்டில் இந்த தன்மான எழுச்சியான இக்காலத்தில் ஆரிய சமயத்துக்கும் ஆரியக் கடவுள்களுக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் இவ்வளவு மதிப்பும் இவ்வளவு தமிழர் அடிமைகளும் ஏற்பட்டு இருக்கமுடியுமா? என்று கேட்பதோடு ஆரியபாஷை ஆரியகலை வேண்டாம் என்று சொல்லும் தமிழ்ப்பண்டிதர்கள், உண்மைத் தமிழர் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்கள், ஆரிய கலைகளை தங்கள் கலைகள் என்றும் ஆரியகலை வேண்டாம் என்று சொல்லும் தமிழ்ப்பண்டிதர்கள் உண்மைத் தமிழர் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்கள் ஆரிய கலைகளை தங்கள் கலைகள் என்றும் அரிய கடவுள்களை தங்கள் கடவுள்கள் என்றும் இவற்றை ஆரியர்கள் திருடிக்கொண்டார்கள் என்றும் சொல்லிக் கொண்டாடி இராவிட்டால்? இப்படிப்பட்ட இழிவு நிலை ஏற்பட்டிருக்குமா? என்றும் கேட்கின்றோம்.

மற்றும் ஆரிய புராண கதைகளை கம்பனைப் போன்ற சில குலத்துரோகப் பண்டிதர்கள் தமிழில் மொழி பெயர்த்து அதன் மூலம் ஆரியர்களுக்கு தங்களை சற் சூத்திரராக ஆக்கிக்கொண்டு வயிறுவளர்க்க ஆசைப்பட்டு இழி தன்மையே தோழர் சத்தியமூர்த்தியாரை அவ்வளவு தெளிவாக பேசச் செய்தது என்று சொல்லுவோம்.

சமஸ்கிருதத்தை கட்டாயபாடமாக்கினால்?

ஆகவே இப்பண்டிதர்கள் செய்து கொடுத்த புராணமொழி பெயர்ப்புகளே இன்று தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் இவ்வளவு கேடுகளை உண்டாக்கி இருக்கும் போது இனி தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சொல்வது போல் சமஸ்கிருதத்தை அதாவது அவற்றின் மூலத்தையே இந்தியர்களுக்கு கட்டாய பாடமாக ஆக்கிவிட்டால் எல்லா தமிழனும் தங்கள் முன்னோர்கள் ஆரியர்கள் தான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைய ஆசைப்படுவான் என்பது மாத்திரமல்லாமல் இந்தியர்கள் என்கின்ற முறையில் முஸ்லிம்களுங்கூட எங்கள் முன்னோர்களும் கூட ஆரியர்கள் தான் என்று சொல்லிப்பெருமை அடையவேண்டிய அளவுக்கு வந்து விடக்கூடும் என்பதில் அதிசயமொன்று மிருக்காது.

தமிழ்நாடு தமிழருக்கு என்கின்ற வீரச்சொல்லானது காரியத்தில் வெற்றி பெறவேண்டுமானால் பார்ப்பனர்களின் இந்த உள் எண்ணத்தை அறிந்த பிறகாவது சமஸ்கிருத சம்மந்தத்தையும் அதற்கு வழி கோலியான இந்தியையும் இவ்விரண்டையும் கட்டாயமாக புகுத்த சூழ்ச்சிசெய்யும் ஆரிய சமய சம்மந்தத்தையும் ஆட்சியையும் அடியோடு வெறுத்து ஒதுக்கி தள்ளி உண்மைத் தமிழர்களாக வாழ ஆசைப்பட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

தோழர் ஆச்சாரியார் இந்தியை புகுத்துவதற்கு சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று இந்தி படித்தால் சமஸ்கிருதம் சுலபமாக படிக்க வரும் என்று சொன்னது யாவருக்கும் ஞாபகமிருக்கும்.

இப்பொழுது தோழர் சத்திய மூர்த்தியார் ஆச்சாரியார் சர்வாதிகாரத்தில் இந்தியைப் படியுங்கள் என் சர்வாதிகாரத்தில் சமஸ்கிருதத்தைப் படியுங்கள் என்று சொல்ல துணிந்துவிட்டார். தமிழர் களுடைய கோழைத் தனமும் எதை விற்றும் வயிறு வளர்த்தால் போதும், விளம்பரம் பெற்றால் போதும் என்கின்ற சூத்திரத் தன்மையான இழி தன்மையும்தான் தமிழுக்கு தமிழர்களுக்கு இந்த நிலை கொண்டுவந்து விட்டது என்பதை கூசாமல் கூறுவோம்.

ராமராஜ்யத்தைப் பற்றி மற்றொரு சமயம் ஆராய்வோம்.

குடிஅரசு, தலையங்கம் -30.07.1939

You may also like...