14. ஆச்சாரியார் ஆட்சிப் பலன்

மஞ்சட் பெட்டிக்காரர் மந்திரிமார்ஆன அன்றே நாடு குட்டிச்சுவராகும் என்று அரசியல் ஞானமும் உலக அனுபவமும் உடையவர்கள் எதிர்பார்த்ததுதான். காங்கிரஸ்காரர் பதவிபெற்று 603- நாட்களுக்குள் தேச நிருவாகம் செய்ய அவர்களுக்கு ஆற்றவில்லையென்பதும் சட்டங்களை மிகவும், கறுப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்தவும் கடற்கரை குளக்கரை அந்திக்குடிக் கூட்டங்களில் கூச்சல் போடவும் மட்டுமே அவர்களுக்குத் திறமையுண்டென்பதும் நிரூபணமாகிவிட்டன. தேசீயக் கடனை ஒழிக்கப்போவதாய் காங்கிரஸ் வீரர்கள் கூறியிருந்தும் நமது மாகாண முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் பழைய தேசீயக் கடன்களை ஒப்புக்கொண்டு சுமார் 4 1/2- கோடி ரூபாய் கடனும் வாங்கிவிட்டார். இவ்வருஷம் 1 1/2கோடி கடன் வாங்கப் போகிறாராம். இவ் வண்ணம் 603-நாட்களில் மாகாணத்தின் தலைமீது சுமார் 6கோடி ரூபாய் கடன் பளுவை ஏற்றிய ஒருவருக்கு தேச நிருவாகம் நடத்த ஆற்றலுண்டென யாராவது மனந்துனிந்து கூற முன் வருவார்களா? வரவே மாட்டார்கள். தாங்கமுடியாத வரிப்பளுவால் நாட்டு மக்கள் நசுங்குவதாயும் தாம் பதவியேற்றால் வரிகளையெல்லாம் குறைத்து விடுவதாயும்   பறைசாற்றிய காங்கிரஸ்காரர் பதவியேற் பிறகு ? வரிகளைக் குறைக்க அவர்களுக்குப் பூரணாதிகாரங்கள் இருந்து நிலவரியைக் குறைக்க முடியாதென்று சொல்லிவிட்டார்.

ஆச்சாரியார் கூற்று

அது மிகவும் சிக்கலான பிரச்சினை என்றும் அவ்வாறு கூறத் தாம் வெட்கப்படவில்லை யென்றும் கூட கனம் ஆச்சாரியார் கூறிவிட்டார். வரிகளைக் குறைக்காவிட்டாலும் புது வரிகளாவது போடாமலிருக்க வேண்டாமா? அந்த நற்குணமும் பெருந்தன்மையும் கூட காங்கிரஸ் மந்திரிகளுக்கு இல்லை. இவ்வருஷ பட்ஜெட்டை சரிகட்ட 5 புது வரிகள் போட ஏற்பாடாகியிருக்கின்றது. அவற்றுள் விற்பனை வரி மகா கொடுரமானது – அநியாயமானது. நீசத்தனமானது. சென்னை மாகாண மக்கள் எல்லாம் கட்சி வித்தியாசமின்றி இந்தப்பாழும் விற்பனை வரியை எதிர்க்கிறார்கள். நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கடைகள் அடைக்கப்படுகின்றன. இந்த விற்பனை வரி அநியாயத்தைப்பற்றி காங்கிரஸ் பத்திரிகையான சுதேசமித்திரன் கூறுவதைப்பாருங்கள்.

சுதேசமித்திரன் அபிப்பிராயம்

வரி இனமாக பண்ட விற்பனை வரியை பாவிப்பதை ஆங்கில அர்த்த சாஸ்திரிகள் எக்காலத்திலும் ஆதரித்ததே இல்லை. பிரிட்டிஷ் வரித்திட்டத்தில் இவ்வரி எக்கலத்திலும் இடம் பெற்றதில்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் இரண்டொரு குடியேற்ற நாடுகளில் அவசரராத்தம் இந்த வரிப்பரீக்iக்ஷ செய்யப்பட்டிருக்கிறது.இந்த வரியை வசூலிப் பதற்கு ஏராளமாகச் செலவு வர பிடித்திருக்கிறது. இது தொழில்களை பாதிப்பதோடு வர்த்தகர்களுக்கும் மிகுந்த அதிருப்தியை விளைவித்திருக்கிறது. இவ்வளவையும் அடித்துவிடக் கூடிய அளவுக்கு இதனால் பிரதிபிரயோஜனம் கிடைத்ததாகத் தெரியவில்லை தவிரவும் வருமானவரியே இப்போழுது அதிகப் பளுவானதாயிருக்கையில், பண்ட விற்பனை வரியையும் விதிப்பது தொழில்களின் தலையில் அதிகச் சுமையை ஏற்றுவதாகும். இலாபம் கிடைத்தாலும் கிடையா விட்டாலும் விற்பனைக் கணக்கின் பேரில் பண்ட விற்பனை வரியைச் செலுத்த வேண்டியிருக்குமாகையினால் வருமான வரியை விட இது அதிகப் பளுவான தென்று சொல்லவேண்டும். தொழில்களும், வியாபாரமும் அழியாமலிக்க வேண்டுமாயின் பண்டங்கள் வாங்குவோர் தலையிலேயே இதைச் சுமத்தவேண்டிவரும்.

மூன்று ஆட்சேபணைகளில் முதல் ஆட்சேபணை

பண்ட விற்பனை வரிக்குள்ள ஆட்சேபங்களை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக ஒரே பண்டத்தின் மீது பன்முறை வரிவிதிப்பதற்கு இது இடங்கொடுப்பதாக இருக்கிறது. சர்வதேச வியாபார முறை பெருகி வரும் இக்காலத்தில் பண்டங்களை உற்பத்தி செய்வோருக்கும் அவற்றை உபயோகிப்போருக்கும் நடுவில் பலர் இருந்துதான் ஆகவேண்டும். விற்பனையின் மீது வரி விதிக்கையில் ஒரே பண்டம் பலர் கை மாறுகையில் அந்தப் பண்டத்திற்காக ஒவ்வொருவருக்கும் வரி விதிக்க வேண்டி வந்துவிடும். உற்பத்தி விநியோக சம்பந்தமான பொருளாதாரக் கொள்கைகளுக்கு மிகுந்த பாதகமின்றி நடு மனிதர்களாகிய சங்கிலியில் பல கரணைகளை நறுக்கிவிட முடியாது. ஒரே பண்டத்துக்குத் திரும்பத் திரும்ப வரியை விதிப்பதெனில் அது கடைசியாக உபயோக்கிறவர்கள் கைக்கு வருமுன் அந்த வரி முழுதும் அதன் தலையிலேறி விடும். இது காலக்கிரமத்தில் உபயோகத்தைக் குறைத்து அதன் விளைவாக உற்பத்தியையும் பாதிக்கும். பண்ட விற்பனை வரியானது இப்பொழுது கூறப்படுவதுபோல் பணக்காரர்களுக்கு மட்டில் விதிக்கும் வரியாகாது.

இரண்டாவது ஆட்சேபணை

இரண்டாவதாக இலாபம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இந்த வரியைக் கொடுத்துத் தீரவேண்டும். இது வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரியன்று. இது தொழிலுக்கு விதிக்கும் வரியேயாகும். இவ்விதம் விதிக்கும் வரியானது தொழிலில் கிடைக்கும் இலாபத்திற்குப் பொருந்துவ தாக இருக்கவேண்டும். இதன் அளவானது தொழிலில் கிடைக்கும் இலாபத்தை மட்டிலன்றி தொழிலையே பாதிப்பதாயின் அது ஒன்றே ஆட்சேபகரமான தென்பதை நிரூபணம் செய்வதற்குப் போதியதாகும். நமக்கு இதுவரையில் கிடைத்துள்ள பல விஞ்ஞானங்களிலும் கண்டிருப்பது இதுவே.

மூன்றாவது ஆட்சேபணை

மூன்றாவதாக இந்த வரியானது வருமானத்தை விழுங்கி விடுவதுடன் முதலிலும் கைவைத்து விடுவதாக இருக்கிறது. தங்கம், வெள்ளி, நூல், தோல் வியாபாரங்களை இந்தவரி எவ்விதம் பாதிக்குமென்று தகுந்த ஆதாரங்களுடன் நாம் பிரசுரித்துள்ள கடிதங்களில் நிரூபணம். செய்யப்பட்டிருக்கிறது. சில பண்டங்களின் வியாபாரத்தில் கிடைக்கும் இலாபமானது உத்தேச வரியைவிட மிகவும் குறைவாக இருக்கும்மென்பதை நாம் பல உதாரணங் களால் நிரூபணம் செய்யக்கூடும். இவ்வண்ணம் அபிப்பிராயப்படும் சுதேசமித்திரனுக்கு கனம் ஆச்சாரியார் என்ன விடையளிக்கப்போகிறார்? அவரை ஆதரிக்கும் பத்திரிகைகள் என்ன விடையளிக்கப் போகின்றன? ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிப் பத்திரிகைகள் இவ்வாறு கூறினால் காங்கரஸ் மந்திரிகள் மீதுள்ள துவேஷத்தினால் இவ்வாறு கூறுவதாக கனம் ஆச்சாரியாரும் அவரை ஆதரிக்கும் பத்திரிகைகளும் கூறக்கூடும். ஆனால் காங்கிரஸ் பத்திரிகையான சுதேசமித்திரன் விஷயத்தில் இம்மாதிரி நொண்டிச் சமாதானம் கூறமுடியுமா?

அனுபவஸ்தர் அபிப்பிராயம்

மற்றும் வர்த்தக விஷயங்களில் நிரம்ப அனுபவமுடைய ஒருவர் விடுதலை யில் எழுதியிருப் பதைப் பாருங்கள்.

வரப்போகும் விற்பனை வரிச்சட்டத்தினால் துன்பம் அடையப்போகிறவர்கள் முதலில் வரி கொடுக்கும் விவசாயிகள்தான். இரண்டாவது தொழிலாளர்கள். முதலில் பல சரக்குக்கடை முதலாளிகளை எடுத்துக்கொள்வோம். மிளகாய் மூட்டை ரூபாய் பத்து வீதம் வருகிறதென்று வைத்துக்கொள்வோம். இவ்வாறு 100 மூட்டைகள் வந்தால் உடனே மூட்டை ஒன்றுக்கு 1 அணா இலாபம் கிடைத்தால் போதும்  16 ஆணா 1 ரூபாய் மூட்டைடயாகத்தான் தள்ளிவிடுவார்கள். அப்படி யானால் 100 ரூபாய்க்கு 6-4-0 ரூபாய் தான் இலாபம். இந்த முறையில் அவர்கள் வியாபாரம் செய்வதால் இலட்சக்கணக்கில் விற்பனையாகலாம். இவ்வாறு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை யானால் கிடைக்கும் லாபம் 625 ரூபாய். ஆனால் இந்த ஒரு லட்சத்துக்கு விற்பனை வரி ரூ.500. சில சமயங்களில் இலாபமில்லாமல் பண்டம் விற்றால் போதுமென்று வியாபாரம் செய்யும்படி நேரும். அப்பொழுதும் இந்த 500 ரூபாய் வரி கொடுக்கவேண்டியது தான். இது போலவே 20 ரூபாய் அடக்கமுள்ள ஒரு மூட்டைக்கும் 1 அணா இலாபம் வைத்து விற்பனை செய்வார்களானால் அப்பொழுது அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு 312-8-0 ரூபாய்தான் இலாபம் கிடைக்கும். இவ்வாறு எத்தனை லட்சத்துக்கு வியாபாரம் செய்தாலும் 1 லட்சம் விற்பனைக்கு 500 ரூபாய் வீதம் வரி கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

இது போலவே பாத்திர வியாபாரம், தங்க வியாபாரம் முதலியவைகளில் பெரிய வியாபாரிகள் ஆயிரத்துக்கு 1 ரூபாய் இலாபத்துக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள். பலசரக்கு மொத்த வியாபாரிகளும் பெரும்பாலும் ஆயிரத்துக்கு 2 ரூபாய் 3 ரூபாய் இலாபம் வைத்துக்கொண்டு தள்ளிவிடுகிறார்கள். இனி இவர்கள் இந்த முறையில் வியாபாரம் செய்ய முடியாத. ஆயிரத்துக்கு 2 ரூபாய் இலாபம் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்தவன் இனி விற்பனை வரியையும் சேர்த்து ஆயிரத்துக்கு 7-ரூபாய் லாபம் வைத்துதான் வியாபாரம் செய்தாகவேண்டும். இன்றேல் அவன் நஷ்டமடையவேண்டிவரும். இவ்வாறு அதிகப்படியாக விற்கும் பண்டம் யார் தலையில் விடிகிறது? பெரிய வியாபாரிகள் தலையிலா? பணக்காரர்கள் தலையிலா? இல்லை இல்லை. சாமான்கள் சில்லறையாக வாங்கி உபயோகிப்போர் தலையில்தான் விடியப்போகிறது.

தொழிலாளருக்குத் துன்பம்

மற்றொரு வகையில் தொழிலாளருக்கும் துன்பம் உண்டாகப்போகிறது. பித்தளை வியாபாரம், வெள்ளி வியாபாரம் தங்க வியாபாரம் முதலியவைகளில் மொத்த வியாபாரம் செய்கிறவர்கள் ஆயிரத்துக்கு இரண்டு மூன்று இலாபம் கிடைத்தால் போதுமென்றே செய்து வருகிறார்கள். இந்த வகையில் 20 ஆயிரம் ரூபாய் முதல் வைத்து வியாபாரம் செய்கிறவன் கடையில் 1 வருஷத்துக்கு 20 லக்ஷம் ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் அவ்வியாபாரியின் இலாபம் 5 ஆயிரத்துக்கு மேலிராது. இந்த வியாபாரி இப்பொழுது வரப்போகும் சட்டப்படி 10 ஆயிரம் ரூபாய் வரி கொடுக்க வேண்டும். இவர்கள் இனி என்ன செய்வது? இரண்டு வழிகளில் தங்களுக்கு நஷ்டம் வராதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். ஒன்று அதிக விலை வைப்பது; மற்றொன்று தங்களுக்குப் பொருள்களை உற்பத்தி செய்து தரும் தொழிலாளர்களின் கூலி விகிதத்தைக் குறைப்பது. இவ்விரண்டைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. எனவே தொழிலாளர்களுக்கும் இதனால் தீமை உண்டாகத்தான் போகிறது. இவ்வாறாக இந்தப் பாழும் விற்பனை வரி வர்த்தகர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நஷ்டத்தை உண்டுபண்ணக் கூடியதாயிருந்தும் இது பெரிய வியாபாரி களைத்தான் பாதிக்குமென்றும் சாமானிய ஜனங்களை பாதிக்காதென்றும் காங்கிரஸ் பத்திரிகைகள் கூறுவது பெரிய மோசடியல்லவா?

குடிஅரசு, தலையங்கம் – 12.3.1939

You may also like...