27. ஈ.வெ.ரா மதராஸ் மெயில் நிருபர் பேட்டி
தம்முடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த தென்னிந்திய நல உரிமைச்த் தலைவர் 60 வயது முதிர்ந்த பெரியார் நேற்றிரவு மதராஸ் மெயில் நிருபரைக் கண்டவுடன் புன்முறுவல் பூத்தார். 6 மாத சிறைவாசம் பெரியாருடைய சுகத்தில் பெரிய மாற்றத்தை செய்துவிட்டது. மிகவும் களைத்தும் மெலிந்தும் காணப்பட்டார்.
பெரியாரைக் கண்டு தரிசிப்பதற்காக மக்கள் மாலைகளுடனும் பூச்செண்டுகளுடனும் வந்து குவிந்த வண்ணமாக இருந்தார்கள்.
பெரியார் சாதாரண பாயில் தரையில் உட்கார்ந்துகொண்டு நண்பர்களைக் குறித்தும் கட்சியினர்களைக் குறித்தும் அன்போடு விசாரித்துக்கொண்டிருந்தார்.
அவருடைய உடல் நிலையைக்குறித்து கேட்டதற்கு தாம் அன்று மாலை டாக்டர் எம்.ஆர். குருசாமி முதலியார் அவர்களிடம் உடல்நிலை பரி சோதித்துப் பார்த்ததாகவும் டாக்டர் அவர்கள் சிகிச்சை சொல்லி பூரண ஒய்வு எடுக்க வேண்டுமென்று தெரிவித்ததாகவும் பெரியார் சொன்னார். மற்றும் சில வாரங்கள் அவர் ஒரு குளிர்ச்சியான இடத்தில் தங்கி ஓய்வு எடுத்தால் அவருடைய ஆரோக்கியத்துக்கு நலமாயிருக்கும் என்று சொன்னார்.
சென்னையில் மெயில் பத்திரிகை நிருபர் பெரியாரை பேட்டி கண்டு கேட்ட விஷயங்களுக்கு பெரியார் அளித்த பதில்.
ஆம் காங்கரஸ் மந்திரிகள் தாங்கள் பதவியைவிட்டு விலகிவிட்டால் பிற்போக்காளர்களான ஜஸ்டிஸ் கட்சியினர் ³ மந்திரி ஸ்தானங்களை கைப்பற்றி விடுவார்கள் என்று நமது எதிரிகள் சொல்வதாக நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஜஸ்டிஸ்கட்சி அவ்வளவு மோசமாக ஒரு நாளும் நடக்காது என்பதை அவர்கள் உணர்வார்களாக,
இப்பொழுது காங்கரஸ் மந்திரிகள் தங்கள் பதவிகளை எக்காரணத்தைக் கொண்டு காலி செய்ய நேரிட்டாலும் ஜஸ்டிஸ் கட்சி உடனே அம்மந்திரி சபையை ஏற்றுக்கொள்ள மாட்டாது. அப்படி சந்தர்ப்பம் ஏற்பட்டால் தேர்தலுக்கு நிற்கும். காங்கரஸ் நிர்வாக யோக்கியதையை உணர்ந்த மக்களுடைய பெருவாரியான வாக்கைப் பெற்ற பிறகே ஜஸ்டிஸ்கட்சி பதவியை ஒப்புக்கொள்ளும் என பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்தி எதிர்ப்பு இயக்கம்
அடுத்தபடியாக இந்தி எதிர்ப்பு இயக்கத்தைக் குறித்து அவரைக் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
கட்டாய இந்தி நீக்கப்படும் வரையிலும் தாய்மொழியிடத்தில் மக்களுக்கிருக்கும் ஆர்வம் குறையாதவரையிலும் அக்கிளர்ச்சி இருந்தே தீரும்.
மேற்கொண்டும் 100 பள்ளிக்கூடங்களில் இந்தியைச் சர்க்கார் புகுத்த யோசித்து வருகிறார்களே என்று தெரிவித்த உடன் அப்படியானால் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியும் 100 மடங்கு அதிகரிக்கும் எனப் பெரியார் பதிலளித்தார்.
அவர் பேசுகையில் தமிழ்மொழி, தமிழ்க்கலை ஆகியவைகளிடத்தில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பது அவருடைய முகத்தைப் பார்த்தவர்களுக்கு விளங்காமல் போகாது. மேற்கொண்டும் அவர் சொன்னதாவது:?
அதைக் குறித்து யாதொரு தப்பான எண்ணமுமிருக்க கூடாது. இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியல்ல. வகுப்பு துவேஷத்தின் மீதோ சமூகத்துவேஷத்தின் மீதோ ஏற்பட்டதல்ல. தாய் மொழி, கலை ஆகியவைகளிடத்தில் ஒருவனுக்குள்ள அடக்க முடியாத ஆசையை வெளிப்படுத்தும் ஒரு செய்கை யாகும். அவ்வியக்கத்தின் செய்கையை பற்றி திரித்திக்கூறி அதற்கு நாட்டில் உள்ள அபரிமிதமான செல்வாக்கை ? ஆதரவை மறைக்க எண்ணுவது பெரிய அநீதியாகும்!
விற்பனை வரித் திட்டம்
சர்க்காரின் புதுவரி திட்டங்களைக் குறித்து அதிலும் விற்பனை வரியைக் குறித்து பெரியார் ராமசாமி அவர்கள் கூறியதாவது:?
விற்பனை வரி விதிப்பது மிக வெறுக்கத்தக்க செய்கையாகும். முன்னிருந்த சர்க்கார் அவசியமும் நியாயமுமான வரிகள் போட்ட போதெல்லாம் எதிர்த்து வந்த அதே பேர்வழிகள் பதவி வகித்த சிறிது காலத்திற்குள் வறுமையால் கஷ்டப்படும் இம் மாகாண மக்களின் மீது வரிமேல் வரி விதிப்பது விந்தையாகவேயிருக்கிறது.
தமிழ் நாட்டில் வியாபாரிகளுக்குள் வாங்கப்படும் மகிமைக்கு சமமானது விற்பனைவரி என்று சொல்லப்பட்டதைக் குறித்து கேட்டதற்கு பெரியார் சொன்னதாவது:
உவமை சரியானதல்ல; தப்பெண்ணத்தை புகுத்தக் கூடியது. மகிமை என்பது விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளுக்குத் தாங்களாகவே கொடுப்பது. இந்தத் தொகை சிறப்பாக வர்த்தக நலனுக்கும் பொதுவாக கிராமத்தின் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சமயத்தில் மாத்திரம் அதுவும் தாங்களாகவே கொடுக்கும் (மகிமை) தோகையையும் பொருள் உற்பத்தி செய்பவனிடமும் வாங்குபவனிடமும் கை மாறும்போதெல்லாம் அடிக்கடி விதிக்கப்படும் வரியையும் ஒப்பிடுவது புரட்டான காரியமாகும்.
மதுவிலக்கு விஷயம்
மதுவிலக்குத் திட்டத்தினால் எற்பட்ட நஷ்டத்தை சர்க்கார் எப்படி சரிக்கட்டுவது? என்று மற்றொரு கேள்வி கேட்டதற்கு பெரியார் சொன்னதாவது:?
மதுவிலக்கு செய்யவேண்டியதுதான். குடிக்கிற ஒருசிறு கூட்டத்தாரை பரிசுத்தப்படுத்துவது என்ற சாக்கை வைத்துக்கொண்டு குடிக்காத பெரும்பாலான மக்களை தொல்லைப் படுத்தவது நியாயமாகாது.
நிதானமாக நல்ல பிரச்சாரத்தின் மூலமாகவே பொதுஜனங்களை பாதிக்காத முறையில் சர்க்கார் அக் காரியத்தைச் செய்யவேண்டும்.
அவர்கள் இப்பொழுது செய்யும் சீர்திருத்தம் என்பது எல்லாம் ஓட்டுப் பெறுவதற்காக செய்யப்படும் சூழ்ச்சி என்பதையும் நாம் அறிவோம் என ஒளி பொருந்திய கண்களோடு கூறினார்.
ஜஸ்டிஸ் கட்சியின் எதிர்கால வேலை
ஜஸ்டிஸ் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டத்தைக் குறித்து அவரைக் கேட்டதற்கு பெரியார் சொன்னதாவது:
நான் எனது கூட்டுத் தோழர்களைக் கண்டுகலந்த பிறகுதான் எல்லா விஷயங்களையும் முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது. கட்சியின் கொள்கையில் பிரமாதமான மாற்றம் ஏற்படாது. இதற்குமுன் எப்படி கட்சி வேலைசெய்து வந்ததோ அதுபோலவே இனியும் செய்யும்.
எல்லா மக்களின் சமத்துவத்திற்கும் சம உரிமைக்குமாகவே தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் பாடுபடுகிறது; இம்மாகாணத்தில் சமூகத்துறையிலும், பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் உள்ள வேற்றுமை அடியோடு ஒழியும்வரை ? எங்கள் உடலில் சக்தியிருக்கும் வரை போராடியே தீருவோம்.
சமதர்மத் திட்டம்
சில வருடங்களுக்கு முன் அவர் ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்தபிறகு பிரச்சாரம் செய்து வந்த சமதர்மத்தை தென்னிந்திய நலஉரிமைச் சங்கக் கொள்கையில் புகுத்தப் போகிறீர்களா? என்று கேட்டதற்கு பெரியார் சொன்னதாவது:
1935ம் வருஷம் பொப்பிலிராஜா சாஹிப் அவர்கள் தலைமையில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் நான் தயாரித்த சமதர்மத் திட்டம் ஒப்புக் கொள்ளப்பட்டது. அத்திட்டமே தற்கால இந்நாட்டின் தேவைக்குப் பொருத்தமானது. இப்பொழுது கட்சி திட்டத்தில் பெரிய மாறுதல் ஒன்றும் ஏற்படக் காரணமில்லை. நமது கட்சி இம்மாகாணத்தின் பாமர மக்களின் கட்சியாக விளங்க வேண்டும்.
மேலும் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து சில காலத்திற்கு முன் விலகியவர்களையும் ஒன்று சேர்க்க நான் வழி கண்டு வருகிறேன். ஜஸ்டிஸ் கட்சியின் பெயர் மாறினால் ஏரானமான பேர்கள் வந்து சேர்வதாகச் சொல்கிறார்கள். எக்காரணம் கொண்டும் கக்ஷிபின் பெயர் மாற்றப்படுவதை விரும்பாதவர்களு மிருக்கின்றனர். அடுத்த மாதத்தில் மதுரையில் நடைபெறவிருந்த மகாநாடு இதுபோன்ற சில பிரச்சினைகளைக் குறித்து முடிவு தெரிவதற்காக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
கிளர்ச்சி தளர்ந்திருப்பதேன்?
தம்முடைய உடலை தேற்றிக்கொண்டு மீண்டும் சிறை செல்வதாக நேற்று வெளியிட்ட அறிக்கையைக் குறித்து கேட்டதற்கு அவர் விளக்கியதாவது:
கோடைகால விடுமுறைக்காக பள்ளிக்கூடங்களும், காலேஜ்களும் மூடியிருப்பதால் கட்டாய இந்தியை எதிர்த்து நடைபெற்று வந்த கிளர்ச்சி சிறிது தளர்ந்திருக்கிறது. பள்ளிக்கூடங்கள் திறந்த உடன் கட்டாய இந்தி திட்டத்தை சர்க்கார் வாபஸ் வாங்காவிட்டால் மீண்டும் பழையபடி கிளர்ச்சி முன்னை விட வேகமாக நடக்கும். அச்சமயத்தில் என்னை மீண்டும் சிறைக்கு அழைக்கக்கூடும். ஆனால் பிரதம மந்திரியார் நிலைமையை முற்றிலும் யோசித்து பிடிவாதத்தை பெரியதாகக் கருதாமல் கட்டாய இந்தியை கைவிடுவார் என நாங்கள் கருதுகிறோம்.
ஆந்திர மாகாணப் பிரச்சனை
ஆந்திர மாகாணம் தனியாக பிரிந்துபோவதைக் குறித்து கேட்டதற்கு பெரியார் தெரிவித்த தாவது:
அவர்கள் கோருவது நியாயமான உரிமையாகும். பாஷா வாரியாக மாகாணங்களை பிரிப்பதற்கு காங்கரஸ் ஒப்புக்கொண்டிருப்பதால் இப்பொழுது மந்திரி சபையினர் நியாயமாக அந்தப்படி பிரித்தே தீரவேண்டும். அவர்கள் அதற்குக் கடமைப் பட்டிருக்கிறார்கள். எப்படி தமிழர்கள் தமிழ்நாடு தமிழர்க்கு என தங்கள் உரிமைகளை கோருகிறார்களோ அதுபோல ஆந்திரர்கள் தங்களுடைய உரிமைய கோருவது நியாயமென தென்னிந்திய நல உரிமைச் சங்கம் கருதுகிறது.
குடிஅரசு – 28.05.1939