23. வகுப்பு வாதம் ஒழிய வழி!

வகுப்புத் துவேஷக் குற்றம் (153 செக்ஷன்படி) இருப்பதாக தோழர்கள் ஈ.வெ.கிருஷ்ணசாமி, பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்களும் தண்டிக்கப்பட்டனர். உள்ளபடி நாட்டிலே வகுப்புவாத உணர்ச்சி இருப்பதாக ஆட்சி நடத்துபவர் கருதினால் அதனை ஒழிக்க முயல வேண்டாமா? அதனை எங்ஙனம் ஒழித்தல் முடியும்? கிளர்ச்சிகளை அடக்குதல் மூலமா? அன்று! அன்று! சரித்திரம், கிளர்ச்சியின் காரணத்தை ஒழித்தால் தான் கிளர்ச்சி அடங்குமெனச் சாற்றுகிறது. ஆகவே இது சமயம் வகுப்பு வாதம் என்ற நோய் ஒழிய நாம் சிற்சில கூறுவோம்.

மனித சமூகத்தில் பலவித வகுப்பு பிரிவுகளைப் பார்க்கின்றோம். ஒரு வகுப்பாரை ஒரு வகுப்பார் அடக்கி ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கின்றோம். ஒரு வகுப்பார் முன்னேற்றத்திற்குப் பலவகுப்பு மக்கள் பாடுபட்டு உழைப்பதைப் பார்க்கின்றோம். பாரதத்தாயின் அருந்தவப் புதல்வர்வர்களில் பறையர், பள்ளர், ஈழுவர், தீயர், பஞ்சமர், ஹரிஜன் என்ற பெயர்களால் 6-கோடிக்கு மேலிட்ட மக்கள் தீண்டாதார் என்று ஒதுக்கி வைத்துக்கொடுமைப் படுத்தி வருவதை பார்க்கிறோம். பல இடங்களில் இத் தீண்டாத வகுப்பு மக்கட்கு ஆலய உரிமை, பள்ளிக்கூடப் பிரவேச உரிமை, குளத்தில், கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமை, பொது ரோடுகளில் நடக்கும் உரிமை மறுக்கப் படுவதைப் பார்க்கிறோம். மற்றும் சிலயிடங்களில் தீண்டாத வகுப்பார் என்று தங்களை எண்ணிக்கொண்டுள்ள மக்களால் வேட்டையாடப் படுவதையும் அவர்கள் சொத்துக்கள் கொள்ளையிடப்படுவதையும் கண்டும் கேட்டும் வருகிறோம். நம் நாட்டில் மதச் சண்டைகட்கு பஞ்சமில்லை. சமயச் சண்டைகட்கும் குறைவில்லை. அரசியல் கட்சிப் பிளவுகள் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் மொழிப்போர்; இந் நிகழ்ச்சிகளே இன்று நம் கண்முன் படுகின்றது.

மனித சமூகத்தில் உயர்ந்த வகுப்பார் என்று தங்களைக் கருதும் வகுப்பார் தங்களைத் தவிர மற்ற எல்லா வகுப்பு மக்களையும் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். சூத்திரன் என்றால் அடிமை, வேசிமகன், என்று எழுதப்பட்ட மநுதர்ம நூல் புத்தகக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்யப்படுவதையும் பார்க்கின்றோம். பார்ப்பனர்கள் நடை, உடை, ஒழுக்கம் வேறு சூத்திரர்கள் நடை, உடை, ஒழுக்கம் வேறு என்று பெருமையாகப் பேசப்படுவதையும் அவ்விதமே நடவடிக்கைகளில் காட்டப்பட்டு வருவதையும் நாம் இன்னும் கண்ணாரப்பார்க்கின்றோம். இவ்விதம் சமூகத்தில் இழிவு படுத்தி தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் துறையில் ஏமாற்றப்பட்ட மக்கள் இங்கு பார்ப்பனர் ? பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதையும் அதன் மூலம் வகுப்புவாதம் உணர்ச்சிபெற்று உயர்நிலையடைந்திருப்பதையும் மறைக்காமல் ஒப்புக்கொள் கின்றோம். இந்த வகுப்புவாதங்கள் ஒழிய மார்க்கமென்ன? என்று அறிஞர்கள் நன்றாக யோசித்து ஒரு முடிவு செய்யவேண்டும். மனித சமூகத்தில் ஒரு வகுப்பாரை பிறவி காரணமாக தீண்டப்படாதவர், சூத்திரன் என்று கூறுவதையும் மற்றொரு வகுப்பாரை (பார்ப்பனர்) உயர்ந்தவர் என்று கூறுவதையும் மனித சமத்துவத்திற்கும் அன்பிற்கும் கேடு விளைவிப்பதுடன் ஆத்திரமும் மனக்கொதிப்பும் உண்டாக்கும் என்பதை நடுநிலைமையுடன் உணர்ந்து சட்டபூர்வமாகத் தடுக்கலாம். சாப்பாடு ஹோட்டல், காபி கிளப் ஆகிய வியாபார ஸ்தலங்களில் பிராமணாள் காபி கிளப், பிராமணாள் சாப்பாட்டு விடுதி, பிராமணாளுக்கு மட்டும் சாப்பாடு போடப்படும் பஞ்சமர்கள், நோயாளிகள், நாய்கள் இங்கு பிரவேசிக்கக்கூடாது என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் சாப்பாடு ஹோட்டல்களையும் காபி கிளப்புகளையும் அவ்விதம் விளம்பரம் செய்யக்கூடாது என்று சர்க்கார் உத்திரவு மூலம் தடை செய்யலாம். லைசென்ஸ் கொடுக்க மறுத்து விடலாம்.

பொது ஆலயங்களிலும் பொதுப் பள்ளிக்கூடங்களிலும், பொதுக்கிணறு குளங்களிலும் சர்க்கார் பொது ஸ்தாபனங்களிலும் எவ்விதத் தடையுமின்றி மக்கள் யாவரும் பிரவேசிக்கவும் உபயோகிக்கவும் உரிமையை வழங்குவதற்கு சட்டம் செய்யலாம்.

மனுதர்ம சாஸ்திரம், ஆனந்த மடம் போன்ற மனித உயர்வு தாழ்வையும் மதப்பூசல்களையும் கிளப்பி குழப்பம் விளைவிக்கும் புத்தகங்களை பறிமுதல் செய்து மதச்சண்டைகளை ஒழிக்கலாம். மனித சமூக அன்பை வளர்க்கலாம்.

பொது ஆலயங்களின் உள்ளே பார்ப்பனர்கள் பிரவேசிக்கும் இடம் வேறு, மற்ற வகுப்பார்கள் பிரவேசிக்கும் இடம் வேறு என்ற பாகுபாட்டினால் பிளவு உண்டாக்கும் செய்கையைக் கண்டித்து யாவரையும் சமமாக நடத்தும்படி செய்யலாம். சர்க்கார் உத்தியோகங்கள், மந்திரி பதவிகள் முதலியவை யாவும் ஒரு வகுப்பாருக்கே அதிகம் கிடைக்கவும், மற்ற வகுப்பார் தங்கள் விகிதாச்சாரம் பங்குகிடைக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்தும் திருப்தியடையாமலிருக்கும் நிலையை மாற்றி எல்லா வகுப்பாருக்கும் எல்லா உத்தியோகங்களிலும் நீதியுடன் உரிமை வழங்குவதின் மூலம் இக்கிளர்ச்சியை தடுத்துவிடலாம்.

பல வகுப்பார் காலமெல்லாம் உழைத்தும் பசி, வறுமை, நோய், கல்வியின்மை, பொருளின் மையால் பீடிக்கப்பட்டு வருந்தி துன்புறவும் ஒரு வகுப்பார் பாடுபடாமல், உழைக்காமல், மதம், காந்தீயம், பூரண சுயராஜ்யம், புரோகிதம், சர்க்கார் உத்தியோகம் ஆகியவைகளின் பேரால் சுகமாக வாழவும் வயிறார உண்டு மனமாரவுடுத்தி மாட மாளிகையில் வாழ்ந்து போகயோக்கியங்களைப் பெற்று உயர்ந்த ஆபரணங்களை அணிந்து எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடையவும் உள்ளவேற்றுமையை நீக்கி சமூக அமைப்பில் உள்ள ஆண்டான் அடிமைத்தனத்தையகற்றி தொழிலாளர்கள், உழைப்பாளர்கள், விவசாயிகள் ஆகிய எல்லா மக்களும் இன்புறும் திட்டம் வகுத்திடவேண்டும்.

இக்காரியங்கள் செய்வதின் மூலம் நாட்டில் வகுப்புவாதத்தையும், வகுப்புத்து வேஷத்தையும் போக்க முயற்சிக்கலாம். மேடைகள் மீது தேச ஒற்றுமை, சத்தியம், ஹரிஜனத்தொண்டு, இந்து முஸ்லிம் ஒற்றுமை பேசப்படுவதினாலல் மட்டும் வகுப்பு வாதம், வகுப்புத் துவேஷம் போய்விடாது. வகுப்புத் துவேஷத்திற்குக் காரணஸ்தர்களை விட்டுவிட்டு வகுப்புத் தாழ்வு மூலம் இழிவுபடுத்தப்பட்டு உரிமைக்குப்போராடும் மக்கள் மீது வகுப்பு துவேஷக் குற்றம் கூறி 153எ. செக்ஷன்படி தண்டித்து விட்டால் மட்டும் வகுப்புவாதம், வகுப்புச் சண்டை, வகுப்புக்கிளர்ச்சி ஒழிந்துவிடாது என்று உறுதியாகக் கூறமுடியும்.

குடிஅரசு துணைத்தலையங்கம் – 07.05.1939

You may also like...