25. உழைப்பின் பலன்
இப்பொழுது உலகம் எக்காட்சியை வழங்குகிறது? போராட்டக் காட்சியை என்று எவரும் கூறுவர். போராட்டம் ஒவ்வொரிடத்தில் ஒவ்வொருவிதமாக நிகழ்ந்து வருகிறது. போராட்டம் சிலவிடங்களில் வகுப்புவாதமாகவும், சிலவிடங்களில் சுரண்டல் காரணமாகவும், சிலவிடங்களில் பொருளாதாரத்தையொட்டியும் நிகழ்ந்து வருதல் கண்கூடு. போராட்டம் என்பது பொது. அது பல வடிவமாகக் காரியங்களை நிகழ்த்தும்.
என நவசக்தியில், மே 19-ல் தோழர் கலியாணசுந்தரனார் தீட்டியுள்ளார். போருக்குக் காரணம் யாது என்பது பற்றியும், அவர் ஆராய்ச்சி செய்கிறார். யாது அவ்வாராய்ச்சியின் முடிவு? இயற்கை அறத்தின் வழி உலகம் நில்லாது வேறு வழிச் செல்வதே, போராட்டத்திற்குக் காரணம். இது மிக அரியதொரு ஆராய்ச்சி முடிவு.
நெருப்பின்றி புகையாது, நீரின்றி நனையாது, அஃதே போல காரணமின்றி எந்தக் கிளர்ச்சியும், எந்தப் போரும் நிகழாது. போலிக் காரணத்தால் நிகழ்வதாயின் அது பகலவன் முன் பனியெனக் கரைந்து போயே விடும். இதுவே இயற்கை. இந்த ஆராய்ச்சிக் கண்கொண்டே, நம் நாட்டுப் போராட்டங்களைக் கவனிக்க வேண்டுகிறோம். இங்கு போருக்குக் குறைவில்லை. ஆயினும் இன்று நாம் ஈண்டு குறிப்பிட விரும்புவது, அரசியல் கலப்புகொண்ட போராட்டங்களை மட்டுமேயாகும்.
நாகரீக வளர்ச்சிகாரணமாக நம் நாட்டுப் பூசல்கள் யாவும், இன்று அரசியல் பூசல்களாயின. வேட்டு தீர்த்து போக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் முன்பெல்லாம் மக்களுக்கு இருந்தது. இன்று போராட்டங்கள், ஓட் மூலமாக தீர்க்கப் படுகிறது, என்றார் ஒரு மேனாட்டு அரசியல் ஆராய்ச்சியாளர்.
இன்று நாட்டிலுள்ள போர்கள் யாவை? நாட்டுவிடுதலைப்போர் முதன்மையானது என்பதை யாரும் மறுக்கவில்லை. அதை நடத்த காங்கிரஸ் பாடுபட்டு வந்ததையும், யாரும் மறக்கவில்லை. எந்த ஆட்சியும் எமது சொந்த ஆட்சிக்கு நிகராகாது என்று கூறாதவர் இல்லை. அதைப் போற்றாத வரும் புல்லறிவாளர்களேயாவர். பிறிதொரு ஆட்சியைப் புறக்கணித்து, அதனை எப்பாடு பட்டேனும் எத்துணை தியாகம் புரிந்தேனும், ஓட்டி சொந்த ஆட்சி நிறுவவேண்டுமென எண்ணுவது எற்றுக்கெனின் பிற ஆட்சி இருப்பதன் காரணமாக நாடு நலிந்து மக்கள் மெலிந்து, வாழ்க்கையில் வதைந்து வருகின்றனர். நாட்டு மக்களுக்கும் மதிப்பில்லை நாட்டுத் தொழில் நசித்து விடுகிறது, வாணிபம் வளர்வதில்லை, இளைஞர்கள் குறுகிய மார்பும், வளைந்த முதுகும், ஒட்டிய வயிறும், ஒளியிழந்த கண்களும் பெற்றுநடைப் பிணங்களாக வாழ்கின்றனர். நாட்டின் முன்னாள் நிலை அறிந்திலார். அறிய அவர்களுக்குக் கண்களில்லை! இருக்கும் கண்களிலே ஒளியில்லை, (கல்வி இல்லை, கல்வி இருப்பினும் அது கருத்தை வளர்ப்பதாக இல்லை) ஆகவே நம்மாட்சி நாடுவோம், நாடு முன்னேறச் செய்வோம், நாம் வாழ்க்கையில் பெறவேண்டிய பேறுகளைப் பெற்று மகிழ்வோம், என்று எண்ணித்தான் நாட்டு விடுதலைப் போர் எங்கும் எக்காலத்தும் நடத்தப்பட்டு வந்துள்ளது.
இன்றுள்ள இழிநிலை மாறி மற்ற நாட்டாரோடு சரிசமமாய், கூடுமானால், உயர்வாக வாழ எண்ணுவதே, தேசீயத்தின் நோக்கமாக இருக்க முடியும். இதுவே, உள்ளத்தில் எழுச்சியை ஊட்டுவிக்க வல்லது. இந்த எழுச்சி காரணமாக, உலகில், எத்துணை வீரர்கள் தமது ரத்தத்தைச் சிந்தியுள்ளனர்! எத்துணை காதலியர் தம் காதலரை, இரணகளக் காளிக்குப் பலியிட்டனர். எவ்வளவு தாய்மார்கள், தாம் பெற்ற பாலரை பிணமாகக் கண்டனர்! தளர்ந்த கிழவர்கள் தனயர்களைப் பிரிந்தனர்! நாட்டு விடுதலைப் போர், கோழைகளையும் வீரராக்கி, கொற்றவனையும் பணியவைத்துளது.
இவ்வளவு கஷ்டமும், நஷ்டமும் ஏற்றுக்கொண்டு, அதன் காரணமாக, நாட்டு விடுதலை கிடைக்கப் பெற்றால், நாட்டு நடப்பு எங்கனம் இருத்தல் வேண்டும். விடுதலைப் போரில் வெற்றிபெற்றால், இன்பம் காண்போம்! என்று எண்ணிப் போரிட்டபிறகு, அந்நிய நாட்டரசு இருந்த காலையிலும், கேடாய், துன்பம் நிறைந்ததாய், இருப்பின் பெற்ற விடுதலை, பெரும்பாடுபட்டுத் தேடிய சுதந்திரம், இனிக்குமா?இனிக்காது போயினும் நிலைக்குமா? எனக் கேட்கிறோம்.
காலை முதல் கதிரோன் மறையும் வரையில் கடுமையான வேலை செய்து, எழுப்பிய மண் சுவர், தொழிலாளி வீடு திரும்பின உடன், சரிந்து விழுந்துவிட்டால், காலமெல்லாம் காடுகளைந்து, நிலம் திருத்தி நீர்பாய்ச்சி விதை தூவி, அறுவடையின்போது கருகிப்போன நெற்கதிரைக் கண்டால், ஓராறு மாதத்திற்குப்பிறகு, ஓய்ச்சல், களைப்பு நெஞ்சுகுமட்டல் என மருத்துவரிடம் சென்று காட்டும் மாதுக்கு, இஃது சூலன்று, சூதக வாய்வு என்று கூறும் சொல் செவியில் வீழ்ந்தால், நெஞ்சம் என்ன திடுக்கிடும், நிலை எவ்வளவு தடுமாறும், சலிப்பு, வெறுப்பு ஏற்படும். அதைப் போன்றே, வெளி நாட்டவனை ஓட்டிவிட்ட பிறகு, உள்நாட்டில், சாதிப் பூசல், சமயப் பூசல் தலைவிரித்தாடி, வகுப்புக்கலவரம் மிகுந்து முதலாளி தொழிலாளி முடுக்கு அதிகரித்து பாட்டாளி மக்களின் பட்டினி வளர்ந்து விடுமானால் போராடிய வீரர்கள், போருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை, சிந்தித்துப் பார்ப்பது அறிவுடமையாகும்.
இதைத்தான், நமது பெரியார் ஈ.வே.ரா.அடிக்கடி கூறி வருகிறார். நீர் விரும்பும் சுயாட்சி யாங்கனம் இருக்கும்? அது எந்த முறையில் மிளிரும்? அதில் மக்கள் யாங்கனமிருப்பர்? கிறிஸ்தவர் எப்படி இருப்பர்? இவர்களுக்குள் எத்தகைய சம்பந்தம் நிலவும்? ஒரு சமூகத்தை மற்றொன்று பகைத்து, வெறுத்து கெடுத்து வாழ எண்ணினால், போன சனியன் புதிய உருவில் வருங்கதைப் போல பிரிட்டிஷ் ஆதிக்கம் போய், வேறு ஒருவன் ஆதிக்கம் வருமே என்கிறார். இது உண்மையன்றோ?
ஆசிரியர் ரத்தினசாமி என்பவர், முன்னம் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியராக இருந்தவர், இதனை அடிக்கடி அழகுபடக் கூறுவர், சுயராஜ்யம் பெறுவது எளிது அதனை வைத்துக் காப்பாற்றுவது கடினம் என்று.
நமது பெரியார் இந்த உண்மையை போர்க்களத்தில் புகாமலேயோ ஒதுங்கி நின்றோ கூறினாரில்லை. மகாகனம் சாஸ்திரியார், சர்.டேஜ். பகதூர் சாப்ரு, சர்.பி.சிவசாமி ஐயர், டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார் முதலியவர்களைப் போன்று, போராட்டத்தில் ஈடுபடாது, போர் நடந்த காலையில், எதிரியிடம் புகழ்பாடிப் பிழைத்து, பட்டம் பதவி பெற்று வாழ்ந்துகொண்டு, ஓய்ந்த வேளையில், இந்த உபதேசத்தை சாய்வு நாற்காலியிருந்தபடி கூறவில்லை.
போர் நடக்கும்போது அவரும் அதில் பெரும்பங்கெடுத்து கொண்டார். பிரிட்டிஷார் புகுத்திய அடக்குமுறை இன்றைய தேசீயத் தலைவர்களை இருமுறை மும்முறை தாக்கியதென்றால் நமது தாடிக்காரதீரரை ஏழுமுறை எட்டுமுறை தாக்கிற்று. விடுதலைப் போரில், இன்றுள்ள தேசீயத் தலைவர்களுக்கு அங்கு காயம், இங்கு வெட்டு, என்றால் நமது பெரியாருக்கு உடலெங்கும் காயம்! இவ்வளவு பங்கு அந்த போரில் எடுத்துக்கொண்டு, பாடுபட்டு, பிறகுதான் போர் எதற்கு? போர் யாருடன்? போருக்குப்பின் நிகழப்போவது யாது? எனக் கேட்கலானார்.
அதைக் கேட்டகாலையில், அவர் ஒரு புதிய போரைத் தமிழ்நாட்டில் துவக்கிவிட்டார். அன்பர் கலியாண சுதந்தரனார் கூறுகிறபடி, இயற்கை அறத்தின் வழி நாட்டு விடுதலைப் போர் நடத்திய கூட்டம் செல்லாததே, பெரியார் புதிய தொரு போரைத் துவக்கும்படி செய்தது.
அந்தப்போரே சம உரிமைப் போர்! அதிலும், பெரியார் தலைமை தாங்கி நடத்தினார். நடத்தியும் வருகிறார்.
குதிரைக்கு ஒரு கால் நொண்டி, மேலேறிச் செல்லும் வீரனுக்கு ஒருகண் பொட்டை உறையிலுள்ள கத்தியோ துரு ஏறிவிட்டது, அணிந்தள்ள கவசமோ, கழற்ற முடியாதது, எதிரிலுள்ள எதிரியோ டார்டாரி குதிரைமீதமர்ந்து கூரிய வாளேந்தி நிற்கிறான். என்றால் அந்தப் போர் எங்கனம் முடியும்? இது கண்டு படைத்தலைவன், போர் வீரனைக்கூப்பிட்டு நீ வேறு கவசம் அணிய வேண்டும். வேறுவாள், வேறு குதிரை தேவை. அப்போதுதான் நீ யுத்தத்தை நடத்த முடியும் எனக் கட்டளையிடுவானன்றோ? படைத்தலைவனின் கடமையும் அஃதே யன்றோ?
அதைப்போன்றே, பார்ப்பனரல்லாத சமூகத்தை நோக்கி பெரியார், சமுதாயத்திலே புறக்கடையிலுள்ளாய், கல்வியிலே கடைசிப்படியிலுள்ளாய், அரசியலிலே எட்டிப் பார்த்தாலும் கிட்டவராதே என்று பிறர் கூறும் விதத்திலே உன் வாழ்வு அமைந்துவிட்டது. ஆகவே நீ ஒற்றுமைப்படு, உன்னிடமிருக்கும் வேற்றுமைகளைக் களைந்துவிடு, சாதிப் பூசல்களை நீக்கு, சம உரிமையைக் கேள், பிறகே நீ விடுதலைப் போர் வீரனாவாய் என்று கூறலானார். இதுவே, சம உரிமைப் போர் முரசாயிற்று.
இதை வகுப்புவாதமெனக் கூறும் அன்பர்களுக்கு ஒருவினா?
எல்லோரும் இன்புற்றிருக்க நடத்தப்படும் விடுதலைப் போருக்கு, எல்லோரும் பக்குவப் படுத்தப்பட வேண்டாமா? போரில் பங்கெடுக்கும் யாவருக்கும் பொது நீதி இருக்க வேண்டாமா? அப்போதுதானே, போருக்குப் பின்னரும், சமத்துவம் பொங்கும்?
நாட்டு விடுதலைப்போர் நடக்குங் நாளையில் நமக்குள் பகை இருக்கலாமா? என்கின்றனர் தோழர்கள்.
சரி! அதற்குத்தான் நாம் அனைவரும் ஒன்றுபட ஒரு ஒப்பந்தம் தேவை என்கிறோம் நாம்.
சுயாட்சி சண்டை நடக்குங் நாலையில், நமக்குள் சண்டை நிகழின், எதிரி பலமடைவான் என்ற சாக்கைக் கூறி. சம உரிமைப்போருக்கு ஊறுதேடும் அன்பர்கள், நாளை சுயாட்சி வந்த பிறகு யாது கூறுவர்!
இப்போதுதான், அரும்பாடுபட்டு, பலமான எதிரியை ஓட்டினோம்; சுதந்திரம், சுயாட்சி இன்றுதான் அரும்பி உள்ளது. இதுகண்டு, ஜெர்மனியன் பொறாமை கொள்கிறான். இத்தாலியன் இப்பக்கமே நோக்குகிறான். ஜப்பானியன் திட்டம் போடுகிறான். ஆகவே, வந்துள்ள சுயாட்சிக்கு ஆபத்து ஏராளமாக இருக்கிறது. ஆகவே நமக்குள் இப்போது எக்காரணம் பற்றியும், போர் எழலாகாது. ஆகவே சமஉரிமைப் போர் இப்போது கூடாது என்பர்.
சுயாட்சி கிடைக்கு மட்டும், வரப்போகும் சுயாட்சியை, சம உரிமப்போர் தடுக்கிறதென்பர். சுயாட்சி வந்தபின் அது காப்பாற்றப்பட வேண்டும். ஆகவே, சம உரிமைப்போர் எழலாகா தென்பர்.
பிறகு, என்றுதான் பெறுவது சமஉரிமை, என்றே நாம் கேட்கிறோம். பெரியார் கூறுவதே உண்மை. சுதந்திரப் போர் என்ற சாக்கைக் காட்டி, சமஉரிமைப் போர் நசுக்கப்படுகிறது. சமஉரிமைப் போரை நசுக்கி, சமஉரிமை வழங்காது போனால் நாடு சுயாட்சி பெறாது; பெற்றாலும், அந்த ஆட்சி அன்பு ஆட்சியா இராது. அதிருப்தி நிறைந்த சுயாட்சி நாடுகளை, அயலிலுள்ள வல்லரசுகள் விழுங்கி வருவதை இன்று ஐரோப்பாவிலே காண்கிறோம். இதைக் கண்டேனும், நாம் உணமை உணர்ந்து முதலில் நாட்டில் நாமனைவரும் சமம் என்பதை நிலைநாட்டுவோமாக. அந்த ஒரு கொள்கை நிலை நாட்டப்பட்டுவிட்டால், எந்த வல்லரசும் நம்மை ஒன்றும் செய்யாது. அனைவரும் சமம் என்ற கொள்கைக்காகவே, பெரியார் உழைக்கிறார்.
அவரது உழைப்பின் பலனும், உருண்டு திரண்டு வந்து கொண்டே இருக்கிறது.
குடிஅரசு, தலையங்கம் -21.05.1939