22. தலைவர்கள் சிறையில்! தமிழர் கடன் யாது?

தமிழ்நாட்டில், பன்னெடு நாட்களாகத் தாண்டவமாடி வந்த ஜாதீயம், வகுப்புணர்ச்சி, மூடப்பழக்க வழக்கங்கள், ஒரு பெரிய இருளாகக் கிடந்தது. அதன் வயப்பட்டு அழிந்த சமூகத்தினர் பலர். அதனை எதிர்த்தொழிக்க இயலாது திகைத்தனர் வேறு பலர்.  அதனை ஓட்ட முயன்று தோற்றனர் சிலர். ஆனால் அந்த இருள் மட்டும் மிக இருமாப்புடன் நந்தமிழ் நாட்டைக் கப்பிக்கொண்டு நின்ற வண்ணம் இருந்தது. எங்கும் தேசீயம் பேசப்பட்டு வந்ததேயன்றி, காரியத்தில், நாட்டுப்பிளவிற்குக் காரணமான கேடுகள் களையப்படவில்லை. அந்த காரத்தில் அகப்பட்டுத் தவித்துக்கொண்டிருந்த தமிழ் நாட்டில் பதினைந்து ஆண்டுகட்கு முன்பு ஓரொளி தென்பட்டது. அது ஈரோட்டிலிருந்து எழும்பி சிறுகச் சிறுக அந்த காரத்தில் ஊடுருவிப் பாய்ந்து, தமிழ் நாட்டில் பல இடங்களிலும், பழைய சம்பிரதாயங்களைப் பறக்கடித்தது. கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக ?எனவும் ? ஜாதி மதபேத மெலாம் பித்துப்பிள்ளை விளையாட்டு என்றும் அருட்பா அடிகள் கூறிய உண்மையை நாடறியச் செய்ததுடன், சீர்திருத்தவாதிகளின் இயக்கத்தையும் உற்பத்தி செய்தது. அந்த ஒளியே, சுயமரியாதை இயக்கம். அதன் சுடரே குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு போன்ற நமது பத்திரிகைகள்.

அந்த அற்புத ஒளியை உண்டாக்கிப் பரப்ப, ஈரோட்டுப் பெரியாராம், நந்தம் தனிப் பெருந்தலைவர் ஈ.வெ.ராவின் குடும்பம் பூராவும் பல ஆண்டுகளாக ஓயாது உழைத்து வந்தது. அக்குடும்பம், பொது வாழ்க்கைக் காரணமாக எத்துணை சகிப்புத்தன்மை, தியாகபுத்தி, சேவைச் சிந்தனை காட்டி வந்ததென்பது எதிர்கால சரித்திராசிரியரின் ஆராய்ச்சிக்குரிய விஷயம். எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள், இடுக்கண்களையும் பொருட் படுத்தாது எதிர்த்து நின்று வெற்றிபெற்ற குடும்பம் அது. பெரியார் தமிழர் இயக்கத்தின் சார்பாகச் சிறைசென்றார். உடனே, அவருடன் ஒத்துழைத்து, அவரது கொள்கைகளைப் பரப்புவதில் பெரும் பங்கெடுத்துக்கொண்டு வந்தவரும் தமிழ் வைத்தியத்திலே ஆராய்ச்சியாளரும், பலகாலமாகத் தமது தகப்பனார்     பெயரில் தர்ம வைத்தியசாலை வைத்து நடத்தி பொதுமக்களுக்குப் பணியாற்றி வருபவரும் பெரியாரின் பெரியாருமான தோழர் ஈ.வெ.கிருஷ்ண சாமி அவர்கள் விடுதலைத் தேரை ஓட்டலானார்! அப்பத்திரிகையில், வகுப்புத்துவேஷம், ராஜத்துவேஷம் உள்ள கட்டுரை வெளியிடப்பட்டனவென அவரும், பத்திரிகை ஆசிரியர், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் பழங்கிழவர், பேனா முனையில் பெரிய போராட்டங்களை நடத்திய பண்டித முத்துசாமிப் பிள்ளையும் இ.பி.கோ.153, 124 செக்ஷன்கள்படி கைது செய்யப்பட்டனர். கோவையில் விசாரணை நடந்து, 124 தள்ளப்பட்டு, 153 அதாவது வகுப்புத் துவேஷக் குற்றமிருப்பதாகக் கருதப்பட்டு, 6-மாதசிறை வாசத் தண்டனை தரப்பட்டது. அதனை மாற்ற சென்னை ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கு இவர்தம் அப்பீல் தள்ளப்பட்டது. கோவை கோர்ட்டில் தள்ளப்பட்ட 124 செக்ஷனும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டுமென சென்னை சர்க்கார் அப்பீல் செய்திருந்தனர். அந்த அப்பீல் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அதற்காக 6 மாதம் தண்டனை எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இரு தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிப்பதெனத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அவ்விரு பெரியார்களும் சிறைக்குச் செல்கின்றனர். ஓராறு திங்கள் அவர்கள் உழைப்பைத் தமிழகம் பெறுவதற்கில்லை.

ஈ.வே.கி., பெரியாரின் அண்ணனார்! முதுமையில் மூத்தவர்! அவர் தமிழர் பொருட்டு ஆறு திங்கள் சிறைக்கோட்டம் புகுகிறார். தமிழ் நாட்டாரின் அன்பிற்குப் பாத்திரமான தோழர் ஈ.வெ.கி, அரச விருந்தினராகவும் ஆறு திங்கள் இருப்பார்! சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு நகரசபை உபதேர்தலிலே ஈரோடு மக்கள் தங்களுக்கு அவர்பால் உள்ள அன்பின் பெருக்கைக் காட்டினர். அவர் சிறை செல்வதைப் பாராட்டி, ஈரோடு தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தார் அளித்த உபச்சாரத்தின் போது நகர பிரமுகர்கள் தோழர் ஈ.வெ.கி, சிறையில் இருப்பினும் மீண்டும் இடைக்காலத் தேர்தல் வந்தால் அவரையே தேர்ந்தெடுக்கப் போவது உறுதி எனக் கூறினர். அவ்வளவு அன்பு கொண்டுள்ளனர் அப்பெரியாரிடம்.

அவர் சிறையில் இருக்கும்போது, பெரியாராலும் அவராலும் பாதுகாக்கப்பட்டு நடத்திக்கொண்டு வரப்பட்ட பத்திரிகைகளை வரப்பட்ட  வளரச் செய்வது தமிழர் கடனல்லவா? அக் கடன் ஆற்ற தமிழர் முன்வரல் வேண்டும்.

குடி அரசு, தலையங்கம்- 7.5.1939

You may also like...