26. பெரியார் விடுதலை
நமது தலைவர், ஈ.வே.ராமசாமிப் பெரியார், கோவைச் சிறையிலிருந்து 22-05-1939ந் தேதி காலை 12-மணிக்கு, எதிர்பாராதவிதமாக எந்த விதமான நிபந்தனையுமின்றி, விடுதலை அடைந்தார்! தமிழ்நாடு இச்சேதி கேட்டு, துள்ளிக்குதித்து ஆனந்த தாண்டவமாடும் என்பதில் சந்தேகமேது! தமிழரின் தலைவர், சிறையில் வாடியிருக்கிறார் என்பது கேட்டுக் கேட்டு, தமிழர் இல்லமெல்லாம், சோக சித்திரமாகவே இருந்து வந்தன! பெரியார் சிறைப்பட்டார் என்ற சேதி கேட்ட தமிழருக்கு, எத்துணை கொதிப்பு, எவ்வளவு ஆவேசம் பொங்கிற்று! எங்கெங்கும் கண்டனங்கள் எழும்பின. பெரியார் பெல்லாரிக்கு வெப்பத்தின் உறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது கேட்ட தமிழர், எவ்வளவு சீற்றங்கொண்டனர்! கோவைக்கு அவர் மாற்றப்பட்டார் என்ற சேதி கிடைத்ததும், தமிழரின் மனம் எவ்வளவு குளிர்ந்தது. ஆம்! அவர் துக்கம் தம் துக்கமெனவும், அவர் கஷ்டம் தம் கஷ்டமெனவும், அவர் களிப்பே தம் களிப்பெனவும், தமிழர்கள் கொள்கின்றனர். இப்படியன்றோ, இருத்தல் வேண்டும், ஒரு தலைவரின் நிலை!.
கோவையில், பெரியாருக்கு உடல் நலம் குன்றியே இருந்ததாம். நான்கைந்து நாட்களுக்கு முன்னம், வயிற்றுப் போக்கு ஆரம்பித்து நமது பெரியாரை மிகவும் வாட்டிவிட்டதாம். அக்காரணம் பற்றியோ, அன்றி பொதுவாக அவரது உடல்நிலை குன்றியிருக்கும் காரணம் பற்றியோ 22-05-1939 ல் பகல் பெரியார் கோவை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
கோவை நகரில், பெரியார் விடுதலைச் சேதி பரவிற்று. திரண்டனர் தமிழர்கள் தம் தலைவரைக்காண! எங்கும் களிப்பு! எங்கும் கொண்டாட்டம்! வந்து விட்டார் பெரியார்! நமது தலைவர் வந்துள்ளார்! வாழ்க ஈ.வெ.ரா.! பெரியார் வாழ்க! என்று ஒலி கோவை வானைப் பிளந்தது. பிறிதோரிடத்தில் விவரம் காணலாம். அன்றிரவு அங்கு ஊர்வலம். அதற்குப் பிறகு கோவையை விட்டு ஈரோட்டுக்கு இரண்டாவது மெயிலில் வந்தார் நம் பெரியார். திருப்பூர் வாசிகள் திரளாகக் கூடி, பெரியாரை வாழ்த்தினர். ஈரோட்டிலோ வென்றால் என்றுங் காணாக் காட்சி! புகைவண்டி நிலையத்தில், பூரிப்புடன் புன்னகை பூத்த முகத்துடன், ஆயிரக்கணக்கில், ஆர்வமுள்ள தமிழர்கள், கூடி நின்றனர். அவர்கள் முகமெலாம் மகிழ்வு ததும்பி வீசிற்று! அவர்கள் வாயெல்லாம் வாழ்க! வாழ்க என்று ஒலித்தபடி இருந்தன.
ஈரோட்டிலே நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திலே குமாராஜா முத்தையா செட்டியார், பட்டிவீரன்பட்டி சௌந்திர பாண்டியன், சேலம் நெட்டோ, திருச்சி விசுவநாதம், உள்ளிட்ட பல இயக்கத் தலைவர்கள், பெரியாரின் விடுதலை தங்களுக்கு அளவிட முடியா மகிழ்ச்சியை அளிப்பதைக் கூறி பெரியாரின் புகழைப் பாராட்டிப் பேசினர். பெரியாருக்கு வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தபடி உள்ளன. சர்.கே.வி.ரெட்டி நாயுடு, சர்.பன்னீர் செல்வம், மாஜி மந்திரி தோழர் எஸ்.முத்தைய முதலியார், தமிழ்ப் பேராசிரியர் சோமசுந்திர பாரதியார் ஆகியோர், பெரியாருக்கு வாழ்த்தும், வரவேற்பும் அளித்துள்ளனர்.
தமிழர் யாவரும் இங்கனம் ஒரு மனதுடன் களிப்புக் கடலில் மூழ்கினர். எனினும் பெரியார் யாது எண்ணுகிறார்? என்ன கூறுகிறார்? விடுதலைச் சேதி அவருக்கு என்ன எண்ணத்தைத் தந்துள்ளது. வேலை முடியவில்லையே! நான் வெளி வந்து யாது பயன்? என்று கேட்கிறார் தமிழர்களை. எந்தக் காரியத்தின் பொருட்டு சிறை செல்ல வேண்டிவந்ததோ அது வெற்றிகரமாக முடிந்திருந்து நான் வெளி வந்தாலல்லவா நீங்களும் நானும் மகிழ்வெய்த முடியும் என்று கேட்கிறார் இயக்கத் தோழர்களை நோக்கி. என் கிளர்ச்சிக்கு மதிப்புத் தராது என்னையும், தமிழரையும் வாட்டும் கட்டாய இந்திப்பாடையை ஒழிக்காது என்னை மட்டும் வெளியே அனுப்பினீர்களே இது ஏன்? என்று கேட்கிறார் சர்க்காரை.
தமிழர் யாது பதில் கூறுவர்! சர்க்கார் என்ன பதில் கூற இருக்கிறது? சர்.பன்னீர்செல்வம் கூறுவதுபோல் சர்க்கார் மனமாற்றமடைந்து பெரியாரை விடுதலை செய்திருப்பது போலவே, கட்டாய இந்தியையும் கைவிட்டுவிட வேண்டும் இது நடைபெறா முன்னம், பெரியார் மகிழ்வு அடையார், பெரியார் போர் முடிந்து அதில் வெற்றி காணா முன்னம், தான் உள்ளே இருப்பதும் வெளியே இருப்பதும் இரண்டும் ஒன்றே எனவே கருதுகிறார்.
அது மட்டுமா? நான் சிறையிலேயே இறந்துவிட்டிருந்தால் இயக்கம் எவ்வளவோ உச்ச நிலைக்குச் சென்றிருக்கும் என்று, அன்று ஈரோடு கூட்டத்தில் பெரியார் முழக்கினார்.
அது கேட்ட தமிழர் கலங்கினர்! எதிரிகள் என்ன இரும்பு நெஞ்சப்பா இவருக்கு என திகைத்தனர். ஆனால், பெரியார், தியாகத்தின் இருப்பிடம்; தமிழர் பொருட்டு எதையும் தியாகம் செய்ய முனைந்து நிற்கிறார்.
தமிழர் இயக்கம் தளராது! போரும் நிற்காது! சர்க்கார் பிடிவாதம் காரணமாக, மீண்டும் 100 பள்ளிகளில் கட்டாய இந்தியை நுழைத்தால், இந்தி எதிர்ப்பு 100 பங்கு வளரும் என்கிறார் நம் பெரியார். நான் மறுபடியும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவேன் என்கிறார். தமிழரின் தலைவர் நீங்கள் குன்றா ஊக்கத்துடன் நீதிக்கட்சியின் சங்கங்களை ஆங்காங்கே நிறுவி இயக்கத்தை பலப்படுத்துங்கள் என்கிறார் நீதிக் கட்சியின் தலைவர்.
பெரியார் இடும்பணியை வரவேற்று வேலைசெய்து அவருடைய கையில் இன்று வந்துள்ள நீதிக்கட்சியை வலுப்படுத்த வேண்டியது தமிழர் கடன்!
தலைவர் சிறையினின்றும் வெளி வந்தார் என்று மகிழ்ச்சி அடையும் தமிழர்கள் அவரை வாழ்த்தி வரவேற்று விட்டால் போதுமா? அதுவா அவருக்கு தமிழர் செய்ய வேண்டிய கடன். அவர் கட்டளைப்படி நின்று தமிழரின் தன்மானத்தைத் தேடி நிலைக்க வைக்கவே தோற்றுவிக்கப் பட்டு பணியாற்றி வரும் நீதிக்கட்சியைத் தமிழர் பலப்படுத்தி தமிழரின் சம உரிமைப் போர் வெற்றி பெறும்படி செய்வார்களாக!
குடி அரசு, தலையங்கம் – 28.05.1939