15. காந்தீய வெற்றியா? கபட நாடக வெற்றியா?
திரிபுர காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு சில மாகாண காங்கிரஸ் கமிட்டியார் பாபு சுபாஷ் சந்திரபோஸ் பெயரை இரண்டாம் முறையும் சிபார்சு செய்தார்கள்; சில மாகாணத்தார் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரையும், டாக்டர் பட்டாபி சீதாராமய்யா பெயரையும் சிபார்சு செய்தார்கள். ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் இரண்டாம் முறையும் காங்கிரஸ் தலைவராவது காந்தியாருக்குப் பிடிக்க வில்லையாம். ஆகவே தேர்தலுக்கு நிற்கக் கூடாதென்று காந்தியார் ஒரு தந்திச் செய்தியனுப்பினாராம். இது காந்தி கோஷ்டியாருக்கு மட்டுமே தெரியும். பொது ஜனங்களுக்கோ ஏனைய காங்கிரஸ் வாதிகளுக்கோ தெரியாது. பட்டாபி சீதாராமய்யா தலைவராக வேண்டுமென்பது காந்தியார் விருப்பமாம். இதையுணர்ந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதுமை காரணமாகத் தாம் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லையென்றும் பட்டாபி சீதாராமய்யாவை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென்றும் நாசூக்காக ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டுப் பின் மாறிக்கொண்டார். மௌலானா சாகிப் பட்டாபியை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென்று சிபார்சு செய்தது பாபு சுபாஷ் போசுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அத்துடன் சர்தார் படேல் உட்பட காங்கிரஸ் காரியக்கமிட்டி மெம்பர்கள் 7 பேர் சுபாஷ் போஸை இரண்டாம் முறையும் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் கூடாதென்றும் அவர் ஆபத்தானவர் என்றும் பட்டாபியையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். இவ்வறிக்கையில் காரியக்கமிட்டி மெம்பர்கள் எல்லாம் கையொப்பம் செய்யவில்லை யாயினும் காரியக்கமிட்டி மெம்பரான சுபாஷ் சந்திர போஸின் தமயனார் சரத் போசும் தலைவர் சுபாஷ் சந்திர போசும் அறியாமலே ஏனைய காரியக்கமிட்டி மெம்பர்கள் எல்லாம் சுபாஷை மறுமுறையும் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் கூடாதென்று அந்தரங்கமாக முடிவுசெய்திருந்தார்களாம்.
சுபாஷ் ஆத்திரம்
காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சந்திரபோஸினால் காங்கிரஸ் விதிப்படி நியமனம் செய்யப்பட்ட காரியக் கமிட்டி மெம்பர்கள் சிலர் அவரை அறியாமல் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் கூடாதென்று ஒரு அறிக்கை வெளியிட்டால் யாருக்குத்தான் கோபம் வராது. ஆகவே அவ்வறிக்கை சுபாஷ் சந்திரபோசுக்கு மிக்க ஆத்திரத்தை உண்டு பண்ணியது. சில காங்கிரஸ் கமிட்டியார் தன் பெயரை தலைவர் பதவிக்கு சிபார்சு செய்யும்போது தலைவர் பதவிக்குப் போட்டி போடாமல் பின்வாங்கத் தாம் தயாரில்லை என்றும் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு திரிபுரக் காங்கிரஸ் பிரதிநிதிகளுடையதென்றும் அந்நியர் குறுக்கிட்டு இன்னாருக்குத்தான் வோட்டளிக்கவேண்டுமென சிபார்சு செய்யக்கூடாதென்றும் அது ஜனநாயக முறைக்கு முரணானதென்றும் தம்மால் நியமனம் செய்யப்பெற்ற காரியக்கமிட்டி மெம்பர்களுக்கு தமது அறிவில்லாமல் தம்மைத் தேர்ந்தெடுக்க கூடாதென்று அறிக்கை வெளியிட உரிமையில்லையென்றும் தம்மை அவர்கள் எதிர்ப்பதன் நோக்கம் என்னவென்றும் ஒருகால் சமஷ்டியை ஒப்புக்கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பிரிட்டிஷ் சர்க்காரோடு பேரம் பேசி வருவதாயும் சமஷ்டி மந்திரிகள் ஜாபிதா கூட்டாரோடு விட்டதென்றும் ஒருவனோடு உலாவுவதினால் தாம் அதற்கு முட்டுக்கட்டை போடக் கூடுமென சந்தேகித்து நம்மை எதிர்க்கிறார்களோ என்றும் சுபாஷ் போஸ் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
படேல் மழுப்பல்
அதற்குப் பதிலாக படேல் கோஷ்டியார் வெளியிட்ட அறிக்கையில் இன்னாரைத்தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கவேண்டுமென்று பிரதிநிதிகளுக்கு யோசனை கூற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டென்றும் அந்த உரிமைப்படியே பட்டாபியின் பெயரை அவர்கள் சிபார்சு செய்ததாகவும் சமஷ்டியை ஒப்புக்கொள்ளச் சிலர் பேரம் பேசுவதாய் சுபாஷ் கூறியது அவர்களுக்கு அவதூறானது என்றும் அதை சுபாஷ் போஸ் வாபீஸ் வாங்கவேண்டுமென்றும் வற்புறுத்திருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் பண்டித ஜவஹர்லாலும் ஒரு அறிக்கை வெளியிட்டார். சுபாஷ் மீண்டும் தலைவர் தேர்தலில் போட்டி போடக்கூடாதென்று முன்னமேயே சுபாஷிடம் தாம் தெரிவித்திருப்பதாய் அதில் குறிப்பிடப்பட்டிருந்தார். இப்படியெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் சச்சரவு செய்துகொண்டாலும் தலைவர் தேர்தலில் சுபாஷ் வெற்றிபெற்றார்.
காந்தியார் சூழ்ச்சி
அவ் வெற்றிச் செய்தி வெளிவந்ததும் சுபாஷின் வெற்றி தமது தோல்வி என்றும் சுபாஷ் அவருக்கு இஷ்டமானவர்களை காரியக் கமிட்டி மெம்பர்களாக நியமித்துக்கொண்டு காங்கிரஸ் காரியங்களை நடத்தவேண்டுமென்றும் குற்றச்சாட்டை வாபீஸ் பெறாத வரை பழைய காங்கிரஸ் கமிட்டி மெம்பர்கள் சுபாஷுடன் ஒத்துழைக்க மாட்டார்கள் என்றும் காந்தியார் வயிறெரிந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அத்துடன் காரியக்கமிட்டி மெம்பர்கள் 13 பேரும் ராஜிநாமாச் செய்தனர். அக்காலத்து சுபாஷ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தாம் எவரையும் பெயர் குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லையென்றும் நாட்டில் உலாவும் வதந்தியையே தாம் தெரிவித்தாகவும் சமாதானம் கூறியிருந்தார். அந்த சமாதானம் காந்தி கோஷ்டியாருக்குத் திருப்தியளிக்கவில்லை. சுபாஷ் சந்திரபோஸ் காலை வார அவர்கள் உறுதி செய்து விட்டது போலவே தோன்றினது.
காந்தியர்கள் விளம்பரம்
அப்பால் காந்தியார் மீதும் பழைய காரியக் கமிட்டி மெம்பர்கள் மீதும் நம்பிக்கையிருப்பதாய்பல இடங்களிலிருந்து அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காந்தியாரிடம் நம்பிக்கையிருப்பதாய காங்கிரஸ் மெம்பர்களிடமிருந்து ஒரு அத்தாட்சிப் பத்திரம் வாங்கி வெளியிட்டார். காந்தி கோஷ்டியினிடம் பூரண நம்பிக்கையிருப்பதாய் சென்னைஅசம்பிளி காங்கிரஸ் மெம்பர்களும் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். வடநாட்டில் சிலர் சுபாஷ்போஸ் மீது நம்பிக்கையில்லையெனத் தீர்மானங்கள் கொண்டு வரப்போவதாயும் செய்திகள் வெளி வந்தன. இந்த நெருக்கடிக்கிடையில் சுபாஷ் போசும் நோய்வாய்ப்பட்டார். காங்கிரஸ் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டுமென்று அவர் செய்துகொண்ட விண்ணப்பத்தையும் திரிபுர காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர் நிராகரித்து விட்டார். எக்காரணம் கொண்டும் மாநாட்டுக்குச் செல்லக்கூடாதென்று சுபாஷ் போசின் டாக்டர்கள் கூறினார். எனினும் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றே தீர்வதென்று சுபாஷ் போஸ் முடிவு செய்தார்.
காந்தியார் தந்திரம்
சுபாஷ் போஸ் நிலைமை இங்ஙனமாக காந்தியார் போக்கை கவனிப்போம். தமது விருப்பத்துக்கு மாறாக சுபாஷ்போஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது காந்தியார் உள்ளத்தை மிகவும் சுட்டுவிட்டதாகவே தெரிகிறது. காங்கிரசிலே தமக்கு இருந்து வரும் செல்வாக்கு குறைந்து வருவதை உணர்ந்த காந்தியார் திடீரென ராஜ்கோட் சமஸ்தான விஷயத்தில் ஈடுபட முடிவுசெய்து பிப்ரவரி 27-ந் தேதியே ராஜ்கோட் சத்யாக்கிரகிகள் கூறும் புகார்களை நேரில் விசாரணை செய்து முடிவு தேடும் எண்ணத்துடன் தான் சமாதான தூதராக ராஜ்கோட்டுக்குச் செல்வதாக அவர் ஒரு அறிக்கையும் வெளியிட்டார். ஆகவே ராஜ்கோட் மன்னரும் சமஸ்தான உத்தியோகஸ்தர்களும் அவரை வரவேற்று உபசரித்து அவருடைய சத்திய சோதனைக்குத் தேவையான உதவிகளும் செய்தனர். காந்தியார் காணவேண்டியவர்களைக் கண்டு பேசி, விசாரணை செய்யவேண்டியவர்களை விசாரணை செய்தபிறகு 7 நிபந்தனைகளடங்கிய ஒரு அறிக்கையை ராஜ்கோட் மகாராஜாவுக்கு அனுப்பி அவ்வறிக்கைக்கு மார்ச் 3-ந் தேதி பகல் 12 மணிக்குள் திருப்திகரமான பதில் வராவிட்டால் தம் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதமிருப்பதாக ஒரு வெடி குண்டைப் போட்டார். அவ்வறிக்கை அரசியல் உலகத்திலே பெருந்திகிலை உண்டு பண்ணியது. குறிப்பிட்ட நேரத்துக்குள் ராஜ்கோட் மன்னர் பதில் வராததினால் காந்தியார் பட்டினி விரதமும் தொடங்கினார். கடைசியில் காங்கரஸ் மந்திரிகள் ராஜிநாமாச் செய்து விடுவதாய்ப் பூச்சாண்டி காட்டியதும் வைஸ்ராய் தலையிட்டதும் காந்தியார் பட்டினி விரதத்தை நிறுத்தி வெற்றிமாலை சூடியதும் யாவரும் அறிந்ததே. காந்தியார் திரிபுரத்துக்குச் செல்லாதிருந்தாலும் அவரது பட்டினி விரத வெற்றி திரிபுராகாங்கிரஸ் பிரதிநிதிகளை மயக்கிவிட்டது. காந்தியார் அடைந்த அந்த வெற்றியினால் இந்திய சுதந்தரப் போரை வெற்றிகரமாக நடத்த அவருக்குந்தான் ஆற்றலுண்டென திரிபுர காங்கிரஸ் பிரதிநிதிகளில் பெரும்பாலோர் முடிவு செய்து விட்டனர்.
பந்த் தீர்மானம்
கடைசியில் காங்கிரஸ் மாநாடு கூடும் நாளும் வந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முதல் நாள் சுபாஷ்போஸ் தலைமை வகித்தார். அந்தக் கூட்டத்தில் காந்தியார் மீதும், ராஜிநாமாச் செய்த காங்கிரஸ் கமிட்டியார் மீதும் காங்கிரசுக்குப் பூரண நம்பிக்கையிருப்பதாயும் அவர்களுக்கு அவதூறுண்டாகும் முறையில் சுபாஷ் போஸ் அறிக்கை வெளியிட்டது கண்டிக்கத்தக்கதென்றும் காந்தியார் திட்டப்படியே மேலும் காங்கிரஸ் காரியங்கள் நடக்க வேண்டும் என்றும் காந்தியார் இஷ்டப்படியே சுபாஷ் சந்திரபோஸ் காரியக் கமிட்டி மெம்பர்களை நியமிக்கவேண்மென்றும் ஐக்கிய மாகாண முதன் மந்திரி கனம் கோவிந்த வல்லபபந்த் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அத்தீர்மானத்தைப் பார்த்து சுபாஷ் போஸ் அஞ்சவில்லை. அது காங்கிரஸ் கொள்கையிலும், அமைப்பிலும் மாற்றம் உண்டு பண்ணக்கூடியதாயிருப்பதினால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அதைப்பற்றி விவாதிக்கக் கூடாதென்றும் விஷயாலோசனை கமிட்டியார் விவாதித்து திறந்த காங்கிரஸ் மாநாட்டு முடிவுக்கு விடவேண்டும் என்றும் சுபாஷ் போஸ் கூறி அதை அ.இ.கா கமிட்டியில் விவாதிக்க அனுமதிமறுத்து விட்டார்.
அனுமதி மறுப்பின் நோக்கம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மெம்பர்களே விஷயாலோசனைக் கமிட்டி மெம்பர் களாகையினால் அங்கு அத்தீர்மானம் நிறைவேறுவது நிச்சயமென்று சுபாஷ் போசுக்கு தெரியாம லில்லை. எது நடந்தாலும் காங்கிரஸ் விதிப்படி நடக்க வேண்டுமென்பதே அவரது கருத்து. அப்பால் பண்டித பந்தின் தீர்மானம் விஷயாலோசனைக்கமிட்டிக்கு வந்தது. அன்று சுபாஷ் போசுக்கு தலைமை வகிக்க முடியவில்லை. மௌலான அபுல்கலாம் ஆசாத் தலைமை வகித்தார். பண்டித பந்தின் தீர்மானத்தை எதிர்த்துப்பேசியவர்கள் அது சுபாஷ் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமாகவே ஏற்படுமென்றும் காரியக்கமிட்டி மெம்பர்கள் பெயரைக் குறிப்பிட்டுத்தாம் எதுவும் கூறவில்லை யென்றும் நாட்டில் வழங்கும் வதந்தியைப்பற்றியே குறிப்பிட்டதாகவும் சுபாஷ் சந்திர போஸ் கூறியிருப்பதினால் அவதூறு கூறும் பகுதியை நீக்கிவிட வேண்டும் என்றும் காந்தியாரிடம் நம்பிக்கையிருப்பதாய்க் கூறும் தீர்மானத்தின் பகுதியை யாரும் ஆடசேபிக்கவில்லையென்றும் காந்தியாரின் விருப்பப்படி காரியக் கமிட்டி மெம்பர்களை நியமிக்க வேண்டும் என்ற பகுதியை காந்தியாருடன் கலந்துகொண்டு எனத்திருத்த வேண்டுமென்று வற்புறுத்தினர்.
சுபாஷை ஆதரித்தவர்கள் பல்டி
காந்தி கோஷ்டியாருக்கு எட்டு மாகாண மந்திரிகளுடைய ஆதரவு இருந்ததினால் தலைவர் தேர்தலில் சுபாஷை ஆதரித்தவர்களும் காந்தி கோஷ்டியில் சேர்ந்து விட்டதினாலும் அபேதவாதிகள் நடுநிலைமை வகித்ததினாலும் விஷயாலோசனைக் கமிட்டியிலும் திறந்த காங்கிரஸ் மாநாட்டிலும் பண்டித பந்தின் தீர்மானம் பெருவாரியான வோட்டுகளால் நிறைவேறியது. தமது தீர்மானம் பெருவாரியான வோட்டுகளால் நிறைவேறியது. தமது தீர்மானம் சுபாஷ மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகாதென்றும் காந்தியார் மீதும் அவரது கொள்கைகள் மீதும் காங்கிரசுக்கு நம்பிக்கை யிருப்பதாய் வற்புறுத்தும் தீர்மானமே என்றும் பண்டித பந்த் கூறியது ஓரளவு பலருக்கு திருப்தியளித்திருப்பதாய்த் தெரிகிறது. அந்தத் தீர்மானம் நம்பிக்கையில்லா தீர்மானம் என்று சுபாஷ போஸை ஆதரித்த தோழர்கள் எம்.எஸ்.ஆனே ஸ்ரீநிவாஸய்யங்கார், நரிமன் முதலிய பிரபலஸ்தர்கள் கூறுகிறார்கள். சுபாஷ் போஸ் நோய் காரணமாக காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கவில்லை. மௌலானா அபுல்கலாம் ஆசாத் தலைமையிலேயே காங்கிரஸ் மாநாடு நடந்தேறியது. சமஷ்டி எதிர்ப்பை காங்கிரஸ் தீர்மானம் வற்புறுத்தியிருப்பதினால் தமது லக்ஷ்சியம் கைகூடிவிட்டதென்றும் தாம் ராஜிநாமாச் செய்யப்போவதில்லையென்றும் சுபாஷ் போஸ் தெரிவித்து விட்டதாகத் தெரிகிறது. நோய் குணமடைந்தவுடன் காந்தியாரை சந்தித்து அவரது யோசனைப்படி காரியக்கமிட்டி அமைக்க சுபாஷ் முடிவு செய்திருப்பதாக காந்தி கோஷ்டியார் கும்மாளம் போடுகிறார்கள். ஆனால் அரசியல் விஷயங்களில் பூரண ஞானமுடையவர்கள் வெற்றிபெற்றது காந்தியமல்லவென்றும் கபட நாடகமே என்றும் கூறுகிறார்கள். வெற்றிபெற்றது எது என்பது காலக்கிரமத்தில் விளங்கிவிடும்.
காந்தீயம் வெற்றி பெற்றாலும்?
ஒருகால் காந்தீயமே வெற்றி பெற்றுவிட்டாலும் நாம் சங்கடப்படப் போவதில்லை. காந்தீயத் தினால் நாட்டுக்கு நன்மை ஏற்படுமானால் இரு கையாலும் காந்தீயத்தை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் காந்தீயம் நாட்டுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இல்லையே. அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க வேண்டுமென்று காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது. காந்தியாரின் சமமந்தியார் சென்னை மாகாணத்திலே அடக்கு முறைச் சட்டங்களைப் பிரயோகம் செய்கிறார். அது சரியா என்று காந்தியாரைக் கேட்டால் காங்கிரஸ் தீர்மானத்தை அவ்வளவு பிரமாதப்படுத்த வேண்டாம். சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி நடக்கவேண்டியதுதான். ஆச்சாரியார் தப்புச் செய்யவே மாட்டார் என்கிறார். இந்த காந்தீயத்தை யாராவது வர வேற்பார்களா? திருவிதாங்கூரிலே ஸர்.ஸி.பி.யின் யதேச்சாதிகாரம் தாங்க முடியாததாயிருக்கிறது. சமஸ்தான காங்கிரசை நசுக்க அவர் கொடிய முறைகளைக் கையாளுகிறார். பெண்கள் பகிரங்கமாக அவமதிக்கப்படுகிறார்கள். இந்தக் கொடுமைகள் காந்தியார் உள்ளத்தில் தைக்கவில்லை. ராஜ்கோட் கொடுமைகள் தான் அவரது நெஞ்சை உருக்கிவிட்டனவாம். பட்டினி கிடந்து அவைகளை ஒழிக்க காந்தியார் முடிவு செய்து பட்டினி கிடந்து வெற்றி பெற்று விட்டாராம். இவ்வண்ணம் சமஸ்தான விஷயங்களில் பாரபட்சம் காட்டும் காந்தீயம் யாருக்கு வேண்டும். அத்தகைய காந்தியத்தால் நன்மையை விடத் தீமைதானே அதிகமுண்டாகும்.
குடிஅரசு, தலையங்கம்- 19.3.1939