17. காந்தியார் தோல்வி
பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரைப் பலகாலம் ஏமாற்றலம்; ஆனால் எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாதென்பார்கள். இப் பழமொழி காந்தியார் விஷயத்தில் சரியாகப் பலித்து விட்டது. போக்கு முட்டும் போது பட்டினி கிடந்து உலகத்தை ஏமாற்றுவது காந்தியாரின் வாடிக்கையாக இருந்து வந்தது. 1914-ல் தென்னாப்பிரிக்காவில் 14 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உண்ணாவிரத அரிச்சுவடி கற்றார். 1915-ல் ஆமதாபாத் ஆலைத்தொழிலாளர்கள் பலாத்காரத்தில் இறங்கியதற்காக 3 நாள் உண்ணாவிரதமிருந்து ஆலைத்தொழிலாளரை நல்வழிப்படுத்த முயன்றார். 1922-ல் சௌரி சௌரா பலாத்காரக் கொடுமைக்காக உண்ணாமிருந்து, கண் மூடித்தனமாய் சட்டத்தை மீற உபதேசம் செய்ததற்குப் பிராய்சித்தம் செய்து கொண்டார். 1924-ல் ஹிந்து முஸ்லிம் பிணக்கை ஒழிக்க 21 நாள் உண்ணாவிரதமிருந்தார். பலன் பூச்சியம்தான். இந்து-முஸ்லிம் பிணக்கு இன்னும் ஒழியவில்லை. 1924-ல்சபர்மதி ஆச்சிரம ஒழுங்கீனக்ளைப் போக்க உண்ணாவிரதமிருந்தார். ஆச்சிரம வாசிகள் ஒழுக்க முடையவர்களானார்களா! இல்லவே இல்லை. கடைசியில் ஆசிரமந்தான் கலைக்கப்பட்டது. 1932-ல் ஹரிஜனங்களுக்குத் தனித் தொகுதியளித்ததை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதமிருந்தார். கண்ட பலன் என்ன? ஒடுக்கப்பட்டவர்கள் அவர்களை ஒடுக்கியவர்களுக்கு அடிமைப்பட்டு உழலுகிறார்கள்.
காந்தி ஆத்மா சுத்தியாயிற்றா?
1933ல் ஆத்ம சுத்திக்காக உண்ணாவிரதமிருந்தார். ஆத்மா சுத்தியாயிற்றா? காந்தியாரைத் தான் கேட்க வேண்டும். 1933-ல் புனா சிறையில் உண்ணாவிரதமிருந்தார். எதற்காக? ஹரிஜன ஊழியம் செய்ய வசதி வேண்டுமென்று சாக்குப்போக்குச் சொல்லி விடுதலை பெற உண்ணா விரதமிருந்ததாகப் பெரும்பாலார் அபிப்பிராயம். அத்துடன் உண்ணாவிரதப் புரளி ஒழியுமென்று உலகம் எதிர்பார்த்தது. ஆனால் புரளியினாலேயே தமது பெயரை விளம்பரப்படுத்தி மகாத்மா பட்டமும் பெற்ற காந்தியார் பட்டினிப் புரளியை அவ்வளவு சுலபமாக விடுவாரா? விட்டால் அவருக்கு மதிப்பேது? அவரது அட்டூழியங்களை மறைக்க பட்டினிப் புரளி ஒரு கருவிதானே அவரிடம் உண்டு. ஆகவே உயிர்போமளவும் அவர் பட்டினிப் புரளியைக் கைவிடவே மாட்டார். எனவே இவ்வருஷத்திலும் ராஜ்கோட்டையில் பட்டினி கிடந்தார். எதற்காக? ராஜ்கோட்டை மன்னர் ஆத்மாவைச் சுத்தப்படுத்தி வாக்குறுதிப்படி நடக்கும்படி செய்யவும் கத்தியவார் சமஸ்தானங்களிலுள்ள பிரஜைகளின் விடுதலைக்கு அடிகோலவும். ஆனால் நாகூர் சாஹிப் ஆத்மா சுத்தியடைந்ததா? வாக்குறுதிப்படி நடக்க அவர் முன் வந்தாரா? கத்தியவார் சமஸ்தானங்களிலுள்ள மக்கள் விடுதலை பெற்றார்களா?
சிக்கலான கேள்விகள்
இக்கேள்விகள் மிகவும் சிக்கலானவை எல்லாக் கேள்விகளுக்கும் ஆம் அன்று இல்லையென்று ஒரே வார்த்தையில் பதிலளிக்க முடியாது. முதலில் இக்கேள்விகள்தான் சரிதானா என ஆராய வேண்டும். தாகூர் சாஹிப் ஆத்மா சுத்தமாகவே இருந்தது. இப்பொழுதும் சுத்தமாகவே இருக்கிறது. காந்தியார் பட்டினி கிடந்து தாகூர் சாஹிப் ஆத்மாவைச் சுத்தப்படுத்தத் தேவையே இல்லை. ராஜ்கோட் பிரஜைகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க அவர் தயாராகவே இருக்கிறார். சர்தார் படேல், காந்தியார் பிடிவாதமே எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம். பிரஜாப் பரிஷத் ராஜ்கோட்டைப் பிரஜைகளின் பொதுவான பிரதிநிதி ஸ்தாபனம் அல்ல என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது. மைனாரட்டி சமுகங்களான முஸ்லிம்களும் பாயாத்துகளும் ஒடுக்கப்பட்டவர்களும் ஏனையோரும் பிரஜா பரிஷத்தை ஆதரிக்கவில்லை. அது படேல்கோஷ்டியின் கிளர்ச்சி ஸ்தாபன மென்பதும் தெளிவாகி விட்டது. ஆகவே அந்த குறிப்பிட்ட கோஷ்டியார் தான் சீர்திருத்தக் கமிட்டியில் மெஜாரட்டியாக இருக்கவேண்டுமெனப் பிடிவாதம் செய்வது மிக மிக அக்கிரமமாகும். ராஜ்கோட்டைப் பிரஜைகலல்லாத காந்தியாருக்கும் படேலுக்கும் அவ்வாறு பிடிவாதம் செய்ய உரிமையுமில்லை; அதிகாரமும்மில்லை. மற்றும் சீர்திருத்தக் கமிட்டியில் மெம்பர்களாக இருக்க படேல் சிபார்சு செய்த 7 பேரில் 6 பேர் சமஸ்தானப் பிரஜைகள் தானா என தாகூர் சாஹிப் எழுப்பிய சந்தேகம் திருப்திகரமாக நிவர்த்தி செய்யப்படவுமில்லை.
மகாத்மா வாக்குறுதி மீறலாமா?
அந்த ஆறுபேரும் மெய்யாகவே ராஜ்கேட்டைப் பிரஜைகளாக இருந்திருப்பின் காந்தியார் ராஜ்கோட்டையிலிருந்து வெறுங்கையோடு திரும்பியிருக்கவும் மாட்டார். படேல் சிபார்சு செய்பவர்கள் ராஜ்கோட்டைப் பிரஜைகளாக இருப்பின் அவர்களை தாகூர் சாஹிப் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டுமென சமஷ்டிக் கோர்ட்டுப்பிரதம நீதிபதி தீர்ப்புக் கூறியிருக்கையில் அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு காந்தியார் பெருங்கிளர்ச்சி செய்திருக்கமாட்டாரா? ஆகவே அந்த ஆறுபேரும் ராஜ்கோட்டைப் பிரஜைகள் அல்லவென்றே முடிவு கட்ட வேண்டியதாக இருக்கிறது. மற்றும் முஸ்லீம்களுக்குப் பிரதிநிதித்துவ மளிப்பதாய் வாக்களித்த காந்தியார் அவர்கள் தமக்கு தாசானுதாசம் பாடமாட்டார்கள் எனக் கண்டவுடனே தாம் அளித்த வாக்குறுதி நிபந்தனையற்றதல்ல வென்றும் பிரஜா பரிஷத்தை ஆதரிக்கக் கூடிய முஸ்லீம்கள் பிரஜாபரிஷத்துடன் ஒத்துழைக்க மறுப்பதினால் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமளிக்க முடியாதென்றும் கூறுவது நியாயமே அல்ல. தாகூர் சாஹிப் வாக்குறுதியை மீறியதாய்க் குற்றம் சாட்டிய காந்தியார் முஸ்லிம்கள் விஷயத்தில் வாக்குறுதியை மீறுவது எங்ஙனம் ஒழுங்காகும்? காந்தியார் மட்டும் அவர் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி வியாக்யானம் கூறலாமா? மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனியாக ஸ்தானம் வழங்க முடியாதென்றும் பிரஜா பரிஷத் மெம்பர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் nக்ஷமலாபங்களை கவனித்துக்கொள்வார்கள் என்றும் காந்தியார் கூறுவது ஜனநாயகக் கொள்கைக்குப் பொருத்தமானதுமல்ல. மைனாரட்டி சமூகங்களுக்கு பிரஜாபரிஷத்திடம் நம்பிக்கையில்லாதிருக்கையில் காந்தியார் இஷ்டப்படி சீர்திருத்த கமிட்டி அமைக்க தாகூர் சாஹிப் மறுப்பது நியாயமே. அவரது மறுப்பு நியாயமாக இருப்பதினாலேயே காந்தியார் வேறுவழியின்றி தம் தோல்வியை ஒப்புக்கொண்டு பம்பாய்க்குத் திரும்பினார்.
மைனாரட்டிகளை அலக்ஷ்யம் செய்வதேன்?
காந்தியார் நேர்மையும் ராஜ்கோட்டைப் பிரஜைகளிடம் பாரபட்சமற்ற அன்பும் உடையவராயின் மைனாரட்டி சமூகங்களுக்குப் பிரதிநிதித்துவமளிக்கத் தடைகூறாது ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். படேல் கும்பலை ராஜ்கோட்டையில் சர்வாதிகாரிகளாக்குவதே காந்தியாரின் அந்தரங்க எண்ணம். அதனாலேயே மைனாரட்டிகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க மறுத்தார். அந்த வீண் பிடிவாதத்தினால் தோல்வியும் அடைந்தார். என்னையும் படேலையும் மறந்து விடுங்கள். தாகூர் சாஹிப் மனமுவந்து அளிக்கும். எவ்வளவு குறைந்த பக்ஷ சீர் திருத்தங்களையும் பெரிதாக மதித்து ஒப்புக் கொள்ளுங்கள் என ராஜ்கோட்டைப் பிரதிநிதிகளுக்கு உபதேசம் செய்துவிட்டு பம்பாய்க்கு திரும்பினார். இத்துடனாவது பிரஜா பரிஷத் கோஷ்டியார் வீண் கிளர்ச்சி செய்யாமல்லிருந்தால் சமஸ்தான நிலைமைக்குப் பொருத்தமான சீர்திருத்தங்களை தாகூர் சாஹிப் வழங்கக்கூடும். சமஸ்தான சீர்திருத்த விஷயத்தில் வைஸ்ராயும் அக்கரையுடையவராயிருப்பதினால் தாகூர் சாஹிப் அலட்சியமாக இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். ஆனால் பிரஜா பரிஷத் காரர் இத்துடன் சும்மா இருப்பார்களா? காந்தியார்தான் சும்மா இருப்பாரா? பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளைப் பார்த்தால் சந்தேகமாகவே இருக்கிறது.
மீண்டும் புரளியா?
காந்தியார் மீண்டும் மே 7-ந் தேதி ராஜ்கோட்டைக்குத் திரும்புவாரென்றும் சமரசம் பேசுவதற்கு தாகூர் சாஹிபுக்கு மேலுமொரு சந்தர்ப்பம் கொடுப்பாரென்றும் இதற்கு தாகூர் சாஹிப் இணங்கி வராவிட்டால் காந்தியார் கடுமையான முறையிலிறங்குவாரென்றும் இதன் பலனாக அகில இந்தியப் போராட்டம் ஏற்படுமென்றும் இல்லையேல் ராஜ்கோட்டையிலேயே பெருத்த போராட்டம் நிகழு மென்றும் சொல்லப்படுகிறது. ராஜ்கோட்டைக்குத் திரும்பியதும் காந்தியார் தாகூர் சாஸிப்புக்கும் ரெஸிடண்டு ஜிம்சனுக்கும் இன்னொரு கடிதம் அனுப்புவாராம். டிசம்பர் 26-ந்தேதி அறிக்கையை அமலுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் வற்புறுத்துவாராம். இம்மாதிரியாக பம்பாய் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 24-ந் தேதி காந்தியார் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியிட்ட அறிக்கையின் போக்கை கவனித்தவர்கள் அவர் ராஜ்கோட்டை பிரச்சினையை தலைமுழுகி விட்டார் என்றே எண்ணியிருப்பார்கள். ஆனால் இப்பொழுது வெளிவரும் செய்திகளோ அவ்வறிக்கையின் கருத்துக்கு நேர்மாறாக இருக்கின்றன. காந்தியார் போக்கே விநோதப் போக்காகையினால் மீண்டும் ஏதாவது புரளி செய்தாலும் செய்யக்கூடும். இனி என்ன செய்யப்போகிறார் என்பதை கொஞ்சம் காத்திருந்து பார்ப்போமாக.
குடிஅரசு, தலையங்கம் -30.4.1939