இந்தியாவில் பொருளாதாரக் குவிப்பை நிர்ணயிப்பதே ஜாதிக் கட்டமைப்பு தான் – முனைவர் கலையரசன் தமிழில் ர. பிரகாசு

ஜாதிய சமூகத்தில் சமூக மாற்றத்துக்கான அடிப்படையில் முதன்மையாகக் களையப்பட வேண்டியது ஜாதி அமைப்பு; பொருளாதாரம், அதற்கு துணை சேர்க்கும் காரணி தான் என்பதே பெரியாரியலின் அடிப்படை. ஜாதியைவிட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து விட்டால் ஜாதியப் பாகுபாடுகள் பலவீனமாகி விடும் என்பது இடதுசாரிகளின் பார்வை. இப்போது சமூகக் கல்வி ரீதியான இடஒதுக்கீட்டில் முதன்மைக் காரணியாகக் கருதப்படும் ஜாதியைப் புறந்தள்ளி பொருளாதாரத்தை அளவுகோலாக மற்றும் முயற்சியே 10 சதவீத உயர்ஜாதி இடஒதுக்கீடு.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கே ஜாதி அடிப்படையாக இருக்கிறது என்பதை ஆய்வு ரீதியாக நிறுவுகிறார், முனைவர் கலையரசன் – இக்கட்டுரையில்.

நாட்டின் சொத்து ஏழை, பணக்காரர் என்ற வர்க்கப் பிரிவில் பகிர்ந்து கிடக்காமல், உயர்ஜாதி யினரிடம் அதிகமாகவும், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பிரிவினரிடம் குறைவாகவும் குவிந்திருப்பதைத் தரவுகளுடன் நிறுவுகிறார். ‘புரட்சிக் பெரியார் முழக்கம்’ வாசகர்களுக்கு ஆழமான இந்தக் கட்டுரையைத் தமிழில் தருகிறோம்.

இட ஒதுக்கீட்டால் தகுதி, திறமை பாழ்பட்டு விட்டது, நாட்டின் வளர்ச்சியே முடங்கிவிட்டது என ஐம்பது ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து வந்த கூட்டத்திற்குப் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டைத் தூக்கிக் கொடுத்திருக் கிறது ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு. ஜாதிய அடிப்படையில் சமமற்ற, இந்த அடுக்குமுறை சமுதாயத்தில் அனைவரையும் சமன்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு முறையை ஒழிக்கப் போராடி வந்த பார்ப்பனியக் கூட்டம், அது முடியாமல் போகவே இப்போது அதன் நோக்கத்தை சிதைக்கும் வகையில் பொருளாதார அடிப்படை யிலான இட ஒதுக்கீட்டை அரசியலமைப்புக்குப் புறம்பாக சட்டத்தில் திணித்திருக்கிறது.

கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய வர்களுக்கே இட ஒதுக்கீடு என்ற அரசியல் சாசன விதிகளை கணக்கிலோ கருத்திலோ கொள்ளாமல், உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று நவம்பர் 7ஆம் தேதி உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்டது. உயர் ஜாதியிலும் ஏழைகள் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த 10 விழுக்காடு இட ஒதுக்கீடு உதவும் என்கிறார்கள். ஆனால் இடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல, அரசியலமைப்புச் சட்டத்திலும் அப்படி எங்கும் கூறவில்லை. 10 விழுக்காடு எந்த அளவு கோலில் வழங்கப்பட்டது? ஆண்டு வருமானமாக ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப் பட்டது எப்படி? என்றெல்லாம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன.

அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அவாள்களின் வாதப்படியே பார்த்தாலும் கூட செல்வம் யாரிடம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் இங்கு ஜாதிதான் நிர்ணயிக்கிறது. கடந்த ஆண்டில் வெளியான  “அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வறிக்கை- 2019” ஜாதி அடிப்படை யிலான செல்வ சமத்துவமின்மையைத் தெளிவாக விளக்குகிறது. இதுதொடர்பாக எம்.ஐ.டி.எஸ். துணைப் பேராசிரியர் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவன இணை ஆராய்ச்சியாளர் கலையரசன் டிசம்பர் 8ஆம் தேதி “தி இந்து” ஆங்கில நாளேட்டில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் உள்ளடக்கம் இதோ.

பொருளாதார அடிப்படையிலான உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டமும், அதை செல்லுபடியாகும் என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மரபு பற்றிய விவாதத்தைக் கிளப்பி யுள்ளன. ஆனால் ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு சமத்துவமின்மையைப் பற்றி இந்தத் தீர்ப்பு கணக்கில் கொள்ளவே இல்லை.

2020ஆம் ஆண்டில் வெளியான ‘அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு’-2019 செல்வ வளத்தில் நிலவும் ஜாதிய சமத்துவமின்மையைத் துல்லியமாக விளக்குகிறது. நிலம், கால்நடைகள், கட்டடங்கள், வேளாண் கருவிகள், வாகனங்கள், வங்கி வைப்புத் தொகை, பிற சொத்துக்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  வருமானம் மற்றும் நுகர்வை வைத்து பொருளாதார நிலைகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

1990 முதல் 2020 வரையிலான 30 ஆண்டுகளில் சமத்துவமின்மை அதாவது ஏற்றத் தாழ்வுகளின் இடைவெளி மிக வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த இடைவெளி கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் உயர் ஜாதியினரின் சராசரி சொத்து மதிப்பு 8,03,977 ரூபாயாக இருந்தது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரின் சராசரி சொத்து மதிப்பு 4,09,792 ரூபாயாகவும், பட்டியல் சமூகங்களின் சராசரி சொத்து மதிப்பு 2,28,388 ரூபாயாகவுமே இருந்தது. பழங்குடி மக்களின் சராசரி சொத்து மதிப்பு 2,32,349 ரூபாயாகும். அதாவது உயர் ஜாதியினரின் சொத்து மதிப்பானது பட்டியல் மற்றும் பழங்குடி மக்களைவிட 3 மடங்கு அதிக மாகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை விட 2 மடங்கு அதிகமாகவும் இருப்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

நாட்டின் 45 விழுக்காடு சொத்து உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினரிடம் 40 விழுக்காடு சொத்துக்களும், பட்டியல் சமூகங்களிடம்

10 விழுக்காடு சொத்துக்களும், பழங்குடி மக்களிடம் 5 விழுக்காடு சொத்துக்களும் மட்டுமே உள்ளன.

இந்த செல்வ இடைவெளி என்பது திடீரென முளைத்தது அல்ல. வரலாற்றில் பரம்பரை பரம்பரையாக நீண்டு வருகிறது. குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே நிலம் அனைத்து குழுக்கள் இடத்திலும் சமமாக இல்லை. காலனிய ஆட்சிக் காலத்தில் நில உரிமை குறிப்பிட்ட சில ஜாதிகளின் கைகளுக்குக் கிட்டியது. காலனிய ஆட்சிக்குப் பிந்தைய காலத்தில் அது மேலும் விரிவடைந்தது. இந்தியாவின் நில சீர்திருத்த நடவடிக்கைகள் அந்த பாரம்பரியத்தை உடைக்கவில்லை. 1990-களில் ரியல் எஸ்டேட் துறை அபரிதமாக வளர்ந்தபோது நிலங்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்புகள் பன்மடங்கு அதிகரித்தன. இதனால் 1980-களில் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் தனியாரின் விகிதம் 290 விழுக்காடாக இருந்தது 2020ஆம் ஆண்டில் அது 555 விழுக்காடாக உயர்ந்தது. இது உலகிலேயே மிக அதிகம் என்று உலக சமத்துவமின்மை அறிக்கை-2022 கூறுகிறது.  செல்வம் மற்றும் பரம்பரைச் சொத்துக்களுக்கு இந்தியாவில் வரி இல்லை என்பதால் இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இத்தகைய ஆழமான சொத்துடைமைகளில் ஜாதி அடிப்படையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை செல்வச் சமத்துவமின்மை நிலவும் இந்தச் சூழலில் நமக்கான பொதுக் கொள்கையை எப்படி உருவாக்குவது? ஜாதி-நடுநிலைக் (ஊயளவந – நேரவசயட ஜாதி நடுநிலை என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைப் போல உயர்ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உயரத்தையும், பள்ளத்தையும் சமப்படுத்தும் வாதம்) கொள்கையால் இந்த செல்வ இடை வெளியை தடுக்க முடியுமா? அதற்காக வாதாடுபவர்கள் சமத்துவமின்மையைக் கவனக் குறைவாக நியாயப்படுத்துகிறார்கள்.  இந்தியாவில் ஜாதி அடிப்படையிலான சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான ஒற்றைக் கொள்கை கருவியாக இட ஒதுக்கீடு மட்டுமே உள்ளது. எனினும் இதனால் கல்வி, வேலை, மேம்பட்ட வருவாய் ஈட்டுதலில் இதன்மூலம் அடைந்த பலன்கள் இன்னமும் அடக்கமான அளவுக்குள் கட்டுப் பாட்டுக்குள் தான் இருக்கிறது. சமத்துவமின்மை கட்டமைப்பைத் தகர்த்திட இது போதுமானதாக இல்லை.

ஜாதி அடிப்படையிலான செல்வ இடைவெளி கல்வி, வேலை, வருமானம் ஆகியவற்றில் மட்டும் இல்லை. ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றொரு தலைமுறைக்கும் ஜாதி அடிப்படையிலான செல்வ இடைவெளி கடத்தப்படுகிறது. கல்வியில் மேம்படுவதும், வேலைவாய்ப்பைப் பெறுவதும் மட்டுமே இந்த இடைவெளியை போக்கிவிடாது. அதற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறையைத் திருத்தி, பொருளாதார அடிப்படை யிலான இட ஒதுக்கீட்டை நுழைத்துவிட்டால் ஏற்கெனவே அடைந்துள்ள குறைவான வளர்ச்சியும் தலைகீழாய் மாறிவிடும். சமத்துவ மின்மை மேலும் பன்மடங்கு பெருகிவிடும்.

சமூகப் படிநிலையில் கீழே இருப்பவர்களை மேலே உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, ஏற்கெனவே மேலே இருப்பவர்கள் அதனால் தங்கள் அந்தஸ்தை இழப்பதை விரும்பாத போக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்ட உறுதி மிக்க நடவடிக்கைகள் வெள்ளைக் காரர்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. அதைப்போலவே இந்தியாவிலும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு உச்சத்தை அடைந்து, அதன் காரணமாக உருவானதே உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு.

வரலாற்றில் பன்னெடுங் காலமாக நீடித்து வரும் ஜாதி மற்றும் இனப் பாகுபாடுகள்தான் சமத்துவத்தை சீர்குலைக்கும் இரட்டை நிறுவனங்களாக உள்ளன. ஜாதியப் பாகுபாடும் நிற அடிப்படையிலான இனப் பாகுபாடும் ஒன்றுக்கொன்று மரபு ரீதியாக ஒப்பிட இயலாதவை என்றாலும், நிற அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலுக்கும், இந்தியாவில் ஜாதிய- நடுநிலை கொள்கை சார்ந்த விவாதமும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளை கொண்டுள்ளன. அமெரிக்காவில் கருப்பின மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டு வந்த உறுதிமிக்க நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் ஆட்சிக் காலத்தில் நிறுத்திவைக்க முயற்சி நடந்தது. ஆனால் பைடன் தலைமையிலான புதிய அரசாங்கம் அதற்கு முயற்சிக்கவில்லை.

எந்தவொரு சமூகத்திலும் சமத்துவமின்மை அளவு அரசியல் தேர்வை பொறுத்தே இருக்கிறது. “செல்வம் அதாவது சொத்து பரவலாக்கப்படும் வரலாறுகள் எப்போதுமே ஆழமான அரசியலோடு சார்ந்தது” என்கிறார் பொருளாதார  அறிஞர்  தாமஸ் பிக்கெட்டி. கடந்த 2 நூற்றாண்டுகளின் செல்வ விநியோக நிலைகளை விரிவாக அலசி அவர் இதனைக் கூறுகிறார். ஒரு நியாயமான சமூகத்தை உருவாக்க சமமான களம் அவசியமானதாக இருக்கிறது – சமதளத்தில்.

பெரியார் முழக்கம் 15122022 இதழ்

 

You may also like...