இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?
இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை வைத்து பெங்களூரில் கூட்டம் நடத்தினார், இந்து குழுமத் தலைவர் ராம். அவர் அங்கே வெளியிட்ட கருத்துகளுக்கு மறுப்பு:
“போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக வும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாராட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டி யுள்ளது.”
2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற் கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராமால் இலங்கையின் முன்னாள் அதிபர் இராசபக்சேவிடம் கேட்கப் பட்டதாகும்.
வாகனத்தை ஓட்டினால் தூசி படியத் தான் செய்யும். அதற்காக வாகனத்தை ஓட்டாமல் இருக்க முடியாது. வாகனத்தை ஓட்டிவிட்டு தூசியைத் துடைக்க வேண்டும் என்று சொல்வது போல் இராசபக்சே நடத்திய போரும், அவர் அதை முடிவுக்கு கொண்டு வந்ததையும் அதைக் கொண்டு வந்த விதத்தையும் அங்கீகரித்த வண்ணம் அதனால் படிந்துகிடக்கும் ’தூசி’ பத்தாண்டுகள் ஆன பின்பும் இன்னும் துடைக்கப்படாமல் இருக்கிறது என்றும் என்.ராம் சொல்கிறார்.
எந்த சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஏற்புடன், ”இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்குப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ அந்த சட்டமன்றத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் செயல்படும் ஒரு பத்திரிகை குழுமத்தின் தலைவர் அந்த இனப்படுகொலையின் நாயகனாக அறியப்படும் இராசபக்சேவுக்கு அந்த இனப்படுகொலை நடந்து முடிந்து பத்தாண்டுகள் கழித்து புகழாரம்சூட்டியபடி கேட்ட கேள்வி இது.
ஓர் இனப்படுகொலையை இயல்பாக கடந்து செல்லக் கூடிய அந்தப் பத்திரிகைதான் இந்நாட்டின் பாரம்பரியமிக்கப் பத்திரிகைகளில் ஒன்று; சர்வதேச அளவில் அறியப்பட்டது; முற்போக்கானது; கருத் துரிமைக்கும் எழுத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் எழுந்துநிற்பது; இந்துத்துவம், சாதி ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிரானதென அறியப்படுவது; சி.பி.ஐ.(எம்) என்ற இடதுசாரி கட்சியை ஆதரிப்பதென அறியப்படுவது;
இந்தப் போரில் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தமிழ் மக்கள் சொல்கிறார்கள். ஐ.நா. வின் அறிக்கைகள் 70,000 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் என்று சொல்கிறது. டப்ளின் தீர்ப்பாயம், பிரமன் தீர்ப்பாயம், சானல் 4 காணொளிகள், சார்லஸ் பெட்ரி அறிக்கை, மனித உரிமைக் கண்காணிப்பகம் (HRW), மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), அம்னெஸ்டி எனப் பல்வேறு அமைப்புகள் போரின் பெயரால் இலங்கை அரசப் படைகளால் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள், மாந்த குல விரோதக் குற்றங்கள், இனக் கொலைக் குற்றங்களை அம்பலப்படுத்திவிட்டன. ஆயினும் என்.ராம் என்ற ’சனநாயகவாதிக்கு’ அவையெல்லாம் தூசியாகப் படுகிறது!
போரின் போது embedded journalist ஆக சிங்கள இராணுவத்துடனே பயணித்த தி இந்துவின் செய்தி சேகரிப்பாளர் முரளிதர் ரெட்டி, “தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லியிருந்த சிங்கள இராணுவம் அப்படியான ஆயுதங்கள் பயன்படுத்தியதை நேரில் கண்டதாகவும், சிங்களப் படை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘போரை விரைவாக முடிப்பதற்கு தாங்கள் இதை செய்தாக வேண்டும்’ என்ற பொருள்பட சொன்னதாகவும் ‘Frontline’ இல் எழுதினார். அது போர்க்குற்றமே இல்லை என்று என்.ராம் வாதிடுகிறாரா? இல்லை போனது தமிழர்கள் உயிர்தானே, அதற்கு பொறுப்புக்கூறல் என்ற ஒன்று தேவையில்லை என்கிறாரா?
2017 இல் கூட இலங்கையில் ‘Rape Camps’ நடத்தப்படுகிறது; அங்கே ‘இறைச்சி கடையில் இறைச்சியைத் தேர்வு செய்வது போல் தமிழ்ப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என யாஷ்மின் சூகா என்ற தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாந்த உரிமை செயற்பாட்டாளர் சொன்னாரே, அந்த ‘Rape Camps’ பற்றி வரும் செய்திகளைத் தான் தூசி என்கிறாரா?
உலகிலேயே காணாமலாக்கப்பட்டோரை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் வருகிறது. பத்தாயிரக் கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட் டுள்ளனர். அதில் சரணடைந்தவர்களும் அடங்குவர். சரணடைந்தவர் களில் குழந்தைகளும் அடங்குவர். உலகில் காணாம லாக்கப்பட்டோர் பிரச்சனையில் சரணடைந்தவர் களும் குழந்தைகளும்கூட வருவது இலங்கையில் தான். அப்படி காணாமலாக்கப் பட்டோர் எல்லோரையும் இறந்தவர்களாக கணக்கில் எடுக்குமாறு பிரதமர் இரணில் விக்ரம சிங்கே சொல்கிறார். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் தெருக்களில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் கண்ணீரைத்தான் என்.ராம் தூசி என்கிறாரா?
பத்தாண்டுகள் ஆன பின்பும், தமிழர்களிடம் இருந்து பறித்த நிலங்கள் அவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. நிலங்களை மீட்பதற்காக தமிழர்கள் மாதக் கணக்கில் போராடிக் கொண்டிருக் கிறார்கள். அதைத் தான் இன்னும் துடைக்கப்படாத தூசி என்கிறாரா என்.ராம்?
இன்றைக்கு வரை அரசியல் கைதிகள் விடுவிக்கப் படவில்லை. கடந்த பிப்ரவரி 4 இலங்கையின் சுதந்திர நாளன்று 500-க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கவிக்கப்பட்டதில் ஒருவர்கூட தமிழ் அரசியல் கைதி இல்லை. அதற்காக யாழ்ப் பல்கலைக் கழகத்தில் இருந்து மாணவர்கள் நடைப் பயணமாக அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கிச் சென்றார்கள். அப்போது கிளம்பிய புழுதியைத் தான் தூசி என்கிறாரா என். ராம்?
2015 ஆம் ஆண்டு தானே முன்மொழிந்து உலகின் ஆகப் பெரிய மாந்த உரிமை மன்றமான ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நாற்பத்து ஒன்பது நாடுகளின் முன்னிலையில் ஒப்புக்கொண்ட தீர்மானத்தை நான்கு ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு நிறைவேற்ற வில்லை. வருகிற மார்ச் மாதம் 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இது குறித்து விவாதம் நடக்கவிருக்கிறது. 2009இல் எந்த மன்றத்தில் இலங்கைக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கப் பட்டதோ அந்த மன்றத்தில் அதே இலங்கை பொறுப்புக்கூற வேண்டிய அழுத்தங்கள் எழுவதைத் தான் ‘எஞ்சியிருக்கும் தூசி’ என்கிறாரா என்.ராம்?
‘சிறிலங்கா ரத்னா’ விருது வாங்கிய என்.ராமுக்கு தமிழர் பிரச்சனைப் பற்றி பேசினால், அது பிரிவினைக்குத் துணை செய்து ஒன்றுபட்ட இலங்கைக்கு ஊறு செய்துவிடும் என்ற எச்சரிக்கை உணர்வு இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இன்றைக்கு உலகில் உள்ள அரசுகளால் ஏற்கப்பட்ட ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றாமல் இருப்பதைப் பற்றி ஒரு கேள்வியையும் கேட்க என்.ராமுக்கு ஏன் மனம் வரவில்லை? இராசபக்சேவே தனது உரையில் சிக்கல் சர்வதேசமயம் ஆகிவிட்டது என்று பேசியிருக்க, என்.ராம் இது பற்றி வாய்த் திறக்க மறுக்கிறார். ஒருவேளை ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இலங்கையே ஒப்புக்கொண்ட தீர்மானத்தைத் தான் தூசி என்கிறாரா?
என்.ராம் போன்றவர்கள் தான் இந்நாட்டின் முற்போக்கு ஊடகவியலாளர்கள். இந்துத்துவ எதிர்ப்புக்கு நிற்கக் கூடிய சனநாயகவாதிகள்.. முள்ளிவாய்க்கால் சாவுக் கணக்கு இவர்களைப் பொருத்தவரைப் புள்ளி விவரங்கள். அதுவும் 2.14 கோடி மக்கள் தொகைக் கொண்ட இலங்கை தீவை விட பரப்பில் 60 மடங்குப் பெரிய இந்தியாவின் முற்போக்காளர் அல்லவா இவர்? 1,45,000 பேர் கொல்லப்படுவதெல்லாம் யானைகள் நடந்து செல்லும் போது எறும்புகள் சாவதற்கு ஒப்பானதென்றுதான் இவர்களது ’இந்திய விரிவாதிக்க மூளை’’ சிந்திக்கும். ஆனால், இவர் களுக்கு முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்னான அரை நூற்றாண்டு இன அழிப்பு காலத்தில் அதன் ஆட்சியாளர்கள் பேசிய சிலவற்றை நினைவு படுத்துவது அவசியம்.
1959 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாள், தமிழருக்கு எதிராகப் பெரிய வன்முறை வெடித்த போது, கொலையில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தத் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி தருமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்ட போது பிரதமர் பண்டாரநாயக்கா, “அதன் சுவையை அவர்கள் அனுபவிக்கட்டும் விடு” என்று சொன்னார். (“Let them vent their anger” இது குஜராத் கலவரத்தின் போது மோடி சொன்னதைப் போல் உள்ளதா?)
அதே கலவரத்தில் மே 25 ஆம் நாள் கிங்கொராகோட என்ற இடத்தில் தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அதை நேரில் பார்த்த சிங்களப் பத்திரிக்கையாளர் தார்சி வித்தாச்சி எழுதிய ‘Emergency 58: the story of Ceylon Race Riots’ என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார்.
“At the Government farm at Hingurakgoda, too, the Tamil were slaughtered that night. One woman in sheer terror embraced her two children and jumped into a well. The rioters were enjoying themselves thoroughly. They ripped open the belly of a woman eight months pregnant, and left here to bleed to death. First estimates of the mass murders on that night were frightening 150-200 was a quick guess on the basis of forty families on an average of each”
எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைச் சிங்களக் கொலைக்கும்பல் பிழிந்து அந்தப் பெண் துடிதுடித்து இறக்கும் காட்சியை ரசித்தனராம். (இதே போன்ற ஒரு கொலை இஸ்லாமியப் பெண்ணுக்கு குஜராத் படுகொலையின்போது நடந்ததல்லவா?)
1981 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் எரியூட்டப்பட்டது. அன்றைய முன்னணி அமைச்சர் களுள் ஒருவரான காமினி திசநாயக்கா, சிங்களக் காடையர்கள், படையினர், காவல் துறை எல்லோரும் சேர்ந்து நூலகத்தையும் அதிலிருந்த நூல்களையும் 96000 ஓலைச் சுவடிகளையும் எரித்தார்கள். ( பாபர் மசூதி இடிப்பு நினைவுக்கு வருகிறதா?)
1983 ஆம் ஆண்டு, கறுப்பு ஜூலைப் படுகொலைகள் பற்றி பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிங்களர் எல்.பியதாச எழுதிய நூலுக்கு ‘Holocaust and after’ என்றே பெயர் வைத்தார்.
இப்படியாக இன அழிப்புப் படிபடியாக வளர்ந்து முழு இராணுவப் பரிமாணம் எடுத்து முள்ளி வாய்க்காலில் வான்வழிக் குண்டு வீச்சுகளாலும், கனரக ஆயுத தாக்குதலாலும் உணவு, மருந்து, தண்ணீர் போன்றவற்றைத் தடுத்து 1,45,000 பேரைக் கொன்றதோடு ஒரு முழுசுற்று நிறைவடைந்திருக் கிறது. இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் போர்க் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் என்று ஏற்கத் தயாராக இல்லாத எவரும் இந்தியாவில் தலித்துகள் மீதான வன்முறைகளுக்கோ, இஸ்லாமியர் களுக்கு எதிரானப் படுகொலைகளுக்கோ எதிராக நிற்பதாக சொன்னால் அது ஏமாற்று!
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு சிங்கள நாகரித்தின் மீது விழுந்த தழும்பு. சிங்கள நாகரிகத்தின் மீது மட்டுமல்ல இந்தியர்களின் நாகரித்தின் மீது அதைத் தடுக்கத் தவறிய குற்றத்திற்காக படிந்துள்ள கறை. என்.ராம் போன்ற முற்போக்கு முகமூடி யாளர்கள் வரலாறென்னும் கண்டிப்பான கிழவியிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை. ஏனெனில், ஹிரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டை வீசி இரண்டாம் உலகப் போரின் நாயகனாகவும் வல்லாதிக்க உலகின் தலைவனாகவும் முடிசூடிக் கொண்ட வட அமெரிக்காகூட எழுபத்தி ஒரு ஆண்டுகள் கழித்தேனும் தனது அதிபர் ஓபாமாவை 2016, மே 27 அன்று ‘ஹிரோசிமா அமைதி நினைவகத்திற்கு’ அனுப்ப நேர்ந்தது. அங்கு சென்ற ஒபாமா, ‘வானத்தில் இருந்து மரணம் வந்தது’ என்று பேச நேர்ந்தது. ‘ஓபாமா ஹிரோசிமா சென்றது தாங்கள் அணு குண்டு வீசியதற்காக மன்னிப்புக் கோருவது என்று புரிந்து கொள்ளக் கூடாது’ என்று ஒபாமாவின் செய்தி தொடர்பாளர் எர்னெஸ்ட் விளக்கமளித்தார். ஆனால், உலகத்தின் முன்பு அணு குண்டு வீசிய குற்றத்திற்காக அமெரிக்கா மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்பது திண்ணம்.
அமெரிக்காவையே வரலாறு பணிய வைத்துக் கொண்டிருக்கும்போது தேசிய சமூகமாகவே உருப்பெறாமல், ஆயிரக்கணக்கான சாதிகளாக பிளவுபட்டப் படியே காலந்தள்ளிவிட முடியும் என்று நம்பும் இந்திய ஆளும் வர்க்கம் எம்மாத்திரம்? அதன் ஊதுகுழல்களாய் காலந்தள்ளி வரும் இந்துக் குழுமமும் என்.ராமும் இனப்படுகொலைக்கு துணைப் போனதோடு அதை மறைத்தும் திரித்தும் எழுதியதோடு இனக்கொலையாளி இராஜ பக்சேவைப் பாதுகாத்தார்கள் என்ற களங்கத்தோடு மன்னிப்புக் கோர நிர்பந்திக்கப்படக்கூடிய ஊழி இது.
ஏனெனில், ஈழத் தமிழர் பிரச்சனை என்பது படிந்து கிடக்கும் தூசியல்ல, முள்ளிவாய்க்காலிலும் வன்னிப் பெருநிலத்திலும் உறைந்து கிடக்கும் குருதி. அதை அவ்வளவு எளிதில் துடைத்துவிட முடியாது. ஆயிரமாயிரமாய் கொல்லப்பட்ட குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களின் சாவு ஓலம் காற்றில் கரைந்துள்ளது. நீதியின் பால் அக்கறை கொண்ட தமிழர்களை அது தட்டி எழுப்பும். இன்று தூசியாகவும் கிள்ளுக் கீரையாகவும் இந்தியப் பேரரசப் பார்வைக்குள்ளால் பார்க்கப்படும் தாயகத் தில் உள்ள ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்கள், பிற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் வரலாற்றின் உந்து சக்தியாய் எழுவர். 13 வயது சிறுவன் பாலசந்திரனின் சுட்டுக் கொல்லப் பட்டுக் கிடக்கும் புகைப்படம் கண்டு மாணவர் போராட்டம் எழும் என்று கனவிலும் கருதியிராத இராசபக்சே, என்.ராம் போன்றவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் போராட்டங்கள் அலை அலையாய் எழும்!
செந்தில், இளந்தமிழகம்
பெரியார் முழக்கம் 28022019 இதழ்