காதலர் நாளில் குடும்ப விழா – மகிழ்வு கொண்டாட்டம் – ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள்
காதலர் நாளை ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள் வழங்கி குடும்ப விழாவாகக் கொண்டாடியது திராவிடர் விடுதலைக் கழகம்.
பிப். 14, காதலர் நாளையொட்டி ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த 14 இணையர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவை சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சி குதூகலமாக நடத்தியது. மாலை 5.30 மணியளவில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் காதலைப் போற்றும் திரையிசைப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புத்தக வாசிப்பு கவிதை அரங்கேற்ற நிகழ்வுகள் நடந்தன. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கழகத் தோழர் ஜெயப் பிரகாஷ் ‘ஜாதியை மறுத்துப் பார்’ என்ற அவரது கவிதையை வாசித்தார். தோழர் இரண்யா, “எது கலாச்சாரம்?” என்ற தலைப்பில் தமிழ்ச்செல்வன் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகளையும் தேன்மொழி, பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலிலிருந்து பெரியார் தனது உறவுப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்ததை விவரித்து பெண்களின் மறுமண முறையை வலியுறுத்தி எழுதிய பகுதிகளையும், தோழர் ரம்யா தமிழ்ச் செல்வன் எழுதிய “எது குடும்பம்?” நூலிலிருந்து ஒரு பகுதியையும் வாசித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் தனது இளமைக் காலத்தில் தான் விரும்பிய ‘மாதங்களில் அவள் மார்கழி’ திரைப் பாடலைப் பாடி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். ஜாதி மறுப்பு இணையர்கள் முன்னிலையில் மேடையில் குடும்ப விழா மகிழ்வாக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் – சரசுவதி இணையர் கேக் வெட்டினர். அனைவரும் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது மற்றும் நூல்களை விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, சிறப்புரையாற்றிய மனநல மருத்துவர் சிவபாலன் வழங்கினர்.
மனநல மருத்துவர் சிவபாலன் உரை சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருந்தது. காதல் என்பது குறித்து பெரியார் தந்த விளக்கத்தைப் போல் உலகில் எந்த தத்துவவியலாளர்களும் கூறியதில்லை என்று குறிப்பிட்ட அவர், பெரியார் மேற்கோளைப் படித்தார். காதல் ஒரு புனிதமல்ல; அது மாறாததும் அல்ல; ஆசையும் நட்பும் கொண்டது என்பதைத் தவிர அது ‘புனிதம்’ அல்ல என்ற கருத்தை சுட்டிக்காட்டி, தனது உரையைத் தொடங்கினார். காதல் திருமணமானாலும் காதல் செய்யாத திருமணமானாலும் திருமண வாழ்க்கைக்கும் காதலுக்கும் தொடர்பு இல்லை; வாழ்க்கையில் இணையர்களுக்கிடையே எழும் பிரச்சினைகளை எதிர் கொள்ள பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறைகளை விளக்கினார். “மனநலம் குறித்து எத்தனையோ மேடைகளில் நான் பேசியிருக்கிறேன்; ஆனால் காதல் திருமண வாழ்க்கைக் குறித்து இப்போது தான் பேசுகிறேன்” என்று குறிப்பிட்டார். பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்களைத் தந்தார். (அவரது உரை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் முழுமையாக வெளி வரும்)
தொடர்ந்து நாத்திகன், பழைய இனிமையான திரையிசைப் பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். அனைவரும் பாடலுக்கு நடனமாட அரங்கமே மகிழ்ச்சி குதூகலமாகியது. மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. அரங்கத்தில் பெரியார் பெண் விடுதலைக் கருத்துகள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. கொரோனா காலத்துக்குப் பிறகு நீண்டகால இடைவெளியில் ஜாதி மறுப்புக் குடும்பங்களின் விழா தோழர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது.
சுயமரியாதை சுடர்கள் விருது : சென்னையில் பிப். 13ஆம் நாளன்று வழக்கறிஞர் ரமேஷ் பெரியார் நடத்தி வரும் அறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்ட இணையர்களுக்கு ‘சுயமரியாதை சுடர் – 2022’ விருது வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது. தியாகராயர் நகர் நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாலை 5 மணிக்கு புத்தன் கலைக் குழு மணிமாறன் மகிழினி கலை நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஜாதி மறுப்புக் கெள்கைகளை விளக்கியும் ஒரே ஜாதியில் நெருக்கமான உறவுகளுக்குள் நடக்கும் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் உடல்நலக் கேடுகள் பற்றியும் உரையாற்றினார். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேரசிரியர் சரசுவதி, மாதர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் வாலண்டினா, திருநங்கைகள் உரிமை சங்கத்தைச் சார்ந்த ஜீவா ரங்கரஜ் மற்றும் ஜாதி மறுப்பு மணம் புரிந்த இணையர்கள் உரையாற்றினர். நினைவுப் பரிசுகளோடு அனைவருக்கும் பெரியார், அண்ணா எழுதிய நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. திருவெறும்பூர் பெரியாரியலாளர் அர.செழிலன், நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். வழக்கறிஞர் ரமேசு பெரியார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். இரா. உமாபதி, அன்பு தனசேகர் உள்ளிட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கற்றனர்.
மதுரையில் : காதலர் தின விழாவை ஒட்டி மதுரை திவிக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா 13.02.2022 அன்று மாலை 6 மணியளவில் – மதுரை மாட்டுத்தாவணி எதிரில் உள்ள ராமசுப்பு அரங்கில் நடைபெற்றது. செந்தில் குழுவினரின் பறையிசை – ஜாதி ஒழிப்பு நாடகங்கள் நிகழ்வின் தொடக்கத்தில் நடைபெற்றன. மோகன் – கோகிலா, விஜய் – வீரலட்சுமி, அமர் – நாகா, தமிழ் – சந்தியா உள்ளிட்ட ஜாதி மறுப்பு இணையர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இணையர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான், திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பசும்பொன் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொது செயலாளர் கனியமுதன், தமிழ் தேசிய புலிப்படை கட்சி தலைவர் முத்து பாண்டி, தமிழக மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கட்சித் தலைவர் மணி பாபா, தபெதிக மதுரை மாவட்ட அமைப்பாளர் கிட்டு ராசா, ஊடகவியலாளர் ‘யூடூ புருட்டஸ்’ மைனர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஊடகவியலாளர் ‘யூடூ புருட்டஸ்’ மைனருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்விற்கு வில்லாபுரம் பகுதி பொறுப்பாளர் செந்தில் நாதன் வரவேற்புரை யாற்றினார். புறநகர் மாவட்ட தலைவர் மாளவிகா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்யமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். புலிப்பட்டி பகுதி பொறுப்பாளர் கருப்பையா நன்றி கூறினார். மே 17 இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, கழக ஆதரவு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 17022022 இதழ்