தலையங்கம் ‘கோட்சே’யின் வாரிசுகள்; எச்சரிக்கிறார் தமிழக முதல்வர்
கோட்சேயின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் – என்று காந்தி நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை – இன்றைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சமூக நீதியால் பக்குவம் பெற்றுள்ள தமிழ் மண்ணில் மதவெறியை விதைக்கும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் என்று தி.மு.க. தோழர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
போபால் நாடாளுமன்ற உறுப்பினரான பா.ஜ.க.வைச் சார்ந்த பிரக்யாசிங், நாடாளுமன்றத்தில் கோட்சே தேச பக்தர் என்று பேசியதோடு காந்தி நினைவு நாளில் அவரைப் போல் உருவ பொம்மை செய்து துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்தது, சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியது. கடந்த ஜன. 30ஆம் தேதி இராஜஸ்தான் குவாலியரில் ‘இந்து மகாசபை’ எனும் அமைப்பு, காந்தியாரைக் கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ‘கோட்சே – நாராயணன் ஆப்தே’ இருவர் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய செய்தியை ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஜன. 31, 2022) வெளியிட்டிருக்கிறது. சத்தீஸ்கரில் கடந்த டிசம்பரில் ‘வேத’ மத பயங்கரவாதிகள் நடத்திய ‘தர்ம்சன்சாத்’ நிகழ்வில் காந்தியை இழிவுபடுத்திப் பேசிய காலிச்சரன் மகராஜ் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பயங்கரவாதி காலிச்சரனுக்கு ‘கோட்சே – ஆப்தே பாரத ரத்னா’ விருது வழங்கி இந்து மகாசபை கவுரவித்திருப்பதாகவும் அதே ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறுகிறது. ஆக, கோட்சேவின் வாரிசுகள் வெளிப்படையாகவே இயங்குகின்றார்கள்.
கோட்சே உள்ளிட்ட காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மராத்தியப் பார்ப்பனர்கள். கோட்சே ‘வேத மதம்’ என்ற கொடுங்கோல் பார்ப்பனியத்தின் பிரதிநிதி, 1948 நவம்பர் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் கோட்சே தந்த ஒப்புதல் வாக்குமூலமே இதற்கு வலிமையான சான்று. “என்னுடைய இந்தச் செயல் முற்றிலும் இந்து மதத்தையும் பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம்நாடு இந்துஸ்தான் என்ற பெயரில் இனி அழைக்கப்படும்” என்று அவர் பதிவு செய்துள்ளார்.
“தர்மத்தைக் காப்பாற்ற கொலை செய்வது பாவமில்லை; க்ஷத்திரிய தர்மமே கொலை செய்வது தான்” என்று பகவான் கிருஷ்ணன், பாரதப் போரில் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்ததாகக் கூறுகிறது ‘பகவத் கீதை’. காந்தி எந்த பகவத் கீதையைப் போற்றினாரோ அதன் கொலை தத்துவம் தான் காந்தியின் உயிரையும் பறித்தது. அந்த கோட்சேயின் வாரிசுகள் இப்போது மதவெறியைத் தூண்டிவிட்டு, மக்கள் பிரச்சினைகளை புறந்தள்ளி சீரழிவு அரசிலை நடத்தத் துடிக்கின்றன.
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக ஒரு கற்பனையை மூலதனமாக்கி அரசியல் நடத்துகிறது பா.ஜ.க. அதைத் தான் தமிழக முதல்வரும் சுட்டிக் காட்டுகிறார். தமிழ்நாட்டில் மத – கடவுள் நம்பிக்கையாளர்களாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பது உண்மை. ‘பழக்கம் – சடங்கு – அடையாளம்’ என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே இந்த நம்பிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று எந்தப் பிரச்சினையையும் இவர்கள் விட்டு வைப்பது இல்லை. பகுத்தறிவு சிந்தனை கடவுள் – மத நம்பிக்கையாளர்களிடமும் ஊடுறுவி நிற்பதால், வடநாட்டைப் போல இங்கே மதக் கலவரங்கள் நடப்பது இல்லை. கடவுள் – மத மறுப்புப் பிரச்சாரம் நடந்து வரும் தமிழ்நாட்டில் பாபர் மசூதி இடிப்போ – கோயில்கள் உடைப்போ நடப்பது இல்லை. ‘சமூக நீதி’யையும் ‘வாழ்வுரிமை’யையும் இந்து தர்மத்துக்காகக் காவு கொடுக்க தமிழ்நாட்டின் வெகுமக்கள் தயாராகவும் இல்லை. அதனால் தான் பா.ஜ.க. வேறூன்ற முடியாமல் சிக்கித் திணறுகிறது.
இந்தப் பின்னணியில் மதவாத சீரழிவு கொள்கைகளை விதைக்கும் முயற்சிகளும் தீவிரம் பெற்று வரும் நிலையில் அதை முறியடிப்பதில் அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் முக்கியப் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மதத்திலோ மத அடையாளங்களிலோ அடங்கியிருக்கவில்லை என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்து அறநிலையத் துறையை சீர்திருத்தம் செய்யவோ, கோயில் பராமரிப்புகள் சிறப்பாக நடத்தவோ அரசுக்கு உரிய கடமை இருக்கிறது. அதை நாம் மறுக்கவில்லை. ஆனால், திராவிடர் இயக்கக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடமையும் தி.மு.க. என்ற அமைப்புக்கு இருக்கிறது. அதன் முன்னணித் தலைவர்கள் குறிப்பாக கட்சிப் பதவி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் அடிப்படையான கொள்கைகளைப் புரிந்தவர்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதை கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கோடிக் கணக்கில் இருக்கும் உறுப்பினர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது தான். ஆனால் முன்னணித் தலைவர்கள் தொலக்காட்சிகளில் கட்சியின் சார்பில் வாதாடக் கூடியவர்கள். மேடைகளில் கருத்துகளைப் பரப்புவோர் குறைந்தது புற மத அடையாளங்களையாவது தவிர்க்க வேண்டாமா? நெற்றியிலும் கைகளிலும் கழுத்திலும் ‘மினுமினுக்கும்’ மத அடையாளங்களிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை பலரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘மதத்தை அரசியலாக்குவதுதான் தவறு; மத நம்பிக்கை தவறு இல்லை’ என்ற வாதத்தைக்கூட முன் வைக்கலாம். ஆனால், மதவாத அரசியலின் ஊற்று மதத்திலிருந்து தான் தொடங்குகிறது என்பதை முன்னணித் தலைவர்களாவது சிந்திக்க வேண்டாமா? தமிழ்நாட்டில் தேர்தல் அரசியல் களத்தில் நிற்கும் இடதுசாரி அரசியல் தலைவர்கள், மத அடையாளங்களைத் தரிப்பது இல்லையே!
கட்சியிலும், ஆட்சியிலும் எத்தனையோ மாற்றங்களைத் துணிந்து முன்னெடுத்து வருகிறார் தமிழக முதல்வர். எனவே முன்னணித் தலைவர்களிடம் மத அடையாளங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்தை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்பதே நமது கோரிக்கை. தமிழ்நாட்டில் மதத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள சீரழிவு அரசியலை எதிர்கொள்வதற்கு கொள்கை அடையாளங்கள் மிகப் பெரும் ஆயுதங்களாகும். பெரியார் – அண்ணா – கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிற பாடமும் இது தான்!
பெரியார் முழக்கம் 03022022 இதழ்