தலையங்கம் செயலவை முடிவுகளை செயல்படுத்த, தயாராவோம்!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு மற்றும் செயலவைக் கூட்டங்கள் ஏப். 2, 3, 2022 தேதிகளில் ஈரோட்டில் சிறப்புடன் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகப் பொறுப்பாளர்கள் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். தலைமைக் குழு கூட்டம் ஏப்.2ஆம் தேதி காலை 11 மணியளவில் ஈரோடு கொல்லம்பாளையம் ‘பிரியாணி பாளையம்’ அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. 16 தலைமைக் குழு உறுப்பினர்களில் 15 தோழர்கள் பங்கேற்றனர். கொரானா காலத்தில் இயக்கம் பொது வெளியில் செயல்பட முடியாத நிலையில் தொடர்ந்து இணையம் வழியாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. கொரானா ஓரளவு விடுபட்ட நிலையில் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பது குறித்தும் தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகள் காலூன்ற தீவிரமான முயற்சிகளில் ஒன்றிய ஆட்சியின் பணபலம் அதிகார பலத்துடன் களமிறங்கி செயல்படுவதையும் தலைமைக்குழு ஆழமாக விவாதித்தது. குறிப்பாக இந்தியாவிலேயே ‘திராவிடன் மாடல்’ என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியும் முதல்வரும் திராவிடர் இயக்கக் கொள்கைப் பார்வையோடு சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் தமிழ்நாட்டை திராவிடர் கோட்பாட்டு நிலமாக உறுதிப்படுத்தி விடும் என்று சமூக ஆதிக்கச் சுரண்டல் சக்திகளான பார்ப்பனர்கள் பதறுகிறார்கள். அவர்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் திராவிடக் கொள்கை அடையாளமான அ.இ.அ,.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. நடத்தும் எதிர் அரசியலை முறியடிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு இருப்பதையும் உறுப்பினர்கள் கவலையுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

திராவிட நாடு கோரிக்கையில் தொடங்கிய திராவிடம், திராவிட தேசியம், தனித்தமிழ்நாடு மாநில சுயாட்சி என்று தகவமைத்துக் கொண்டு ‘திராவிடன் மாடல்’ என்று உருத்திரட்சிப் பெற்றுள்ளது. அரசு நிர்வாகக் கட்டமைப்பிலும் பண்பு மாற்றங்களைக் கொண்டு வரும் ‘எதிர் நீச்சல்’ முயற்சிகளில் தமிழக முதல்வர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த மாற்றங்களை நோக்கி தமிழநாடு நகரத் தொடங்கி விட்டால், அதன் தாக்கம் ஏனைய மாநிலங்களில் எதிரொலிக்கத் தொடங்கி தங்களின் ‘ஒற்றையாட்சி’ ராமராஜ்ய திட்டங்களுக்கு சவாலாகி விடும் என்று ஒன்றிய ஆட்சி அஞ்சுகிறது.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், புறக்கணிக்கப்படும் மைனாரிட்டிகள் உள்ளடங்கிய திராவிடர் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களை சமுத்துவமான சுயமரியாதையுள்ள சமூகமாக்க பெரியார் தொடங்கி வைத்தப் போராட்டத்தின் களங்கள் கூர்மையடைந்து வருகின்றன. இதை மேலும் கூர்மையாக்கிட கட்சிகளைக் கடந்த வலிமையான வரலாற்று அணியை உருவாக்குவது காலத்தின் தேவையாகியிருக்கிறது. மதவெறி அடையாளங்களோ, ஜாதியப்  பெருமிதங்களோ, கடவுள் தீர்த்து வைத்து விடுவார் என்ற நம்பிக்கையோ, மக்களின் வாழ்வுரிமைக்கான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போவதே இல்லை என்பது மக்களுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. கொரானா காலத்திலேயே இதைப் பார்த்தோம். வழிபாடுத் தலங்களை மூடினாலும் பரவாயில்லை; நோய்க்கு மருந்து எப்போது கண்டு பிடிப்பார்கள் என்பதற்குத் தான் மக்கள் காத்திருந்தார்கள்.  அறிவியல்தான் அதை சாதித்தது.

‘திராவிடன் மாடல்’ என்ற அடையாளச் சொல்லுக்குள் தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் சமூக நீதியை உள்ளடக்கிய உரிமைகளும் அடையாளங்களும் அடங்கியிருப்பதை மக்கள் மன்றத்தில் தெளிவாக்க தமிழகம் தழுவிய பரப்புரைப் பயணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பொருளாதாரக் கொள்கைகள்; மறுக்கப்படும் சமூகநீதி; திணிக்கப்படும் நீட்; ஆளுநரின் அத்துமீறல்; பறிக்கப்படும் கல்வி உரிமை; மக்களை திசை திருப்ப திணிக்கப்படும் மத அடையாளம்; அதற்கு கருவிகளாகப் பயன்படுத்தும் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்தப் பரப்புரையை கழகம் மேற் கொள்ளவிருக்கிறது.

ஏப்.30இல் தொடங்கி மே 14 நிறைவடையும் பயணத்தில் 11 மண்டல மாநாடுகளும் மாநாடுகளை முன்னிறுத்தி அந்தந்தப் பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங் களையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்புள்ள பகுதிகளில் இணைந்து செயல்படக்கூடிய தோழமை அமைப்புகளையும் இந்தப் பரப்புரையில் பங்கேற்கச் செய்யும் முயற்சிகளில் தோழர்கள் ஈடுபட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கான வெளியீடுகள், துண்டறிக்கைகள் பல்லாயிரக்கணக்கில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

‘திராவிடன் மாடலுக்கு’ வலுசேர்க்கும் இளைஞர்களின் அணியைக் கட்டமைத்து, தடைகளைத் தகர்த்து ‘தமிழ்நாடு’ தனக்கே உரிய அடையாளத்தோடு முன்னேறிச் செல்ல பாதை அமைப்பதும் அதற்கு மக்களை குறிப்பாக இளைஞர்களை கட்சி மாறுபாடின்றி அணியமாக்குவதுமே இதன் இலக்கு.

தோழர்களே தயாராவீர்!

 

பெரியார் முழக்கம் 07042022 இதழ்

You may also like...